தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?

முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். சாதியும் ஓழியும்.

Tuesday, November 25, 2008

ஒரு காலத்தில் சாதியை தொழில் அடிப்படையில் பிரித்திருந்தார்கள். இடைபட்ட காலத்தில் சில சாதியினரை ஓடுக்கினார்கள். இவர்களுக்கு கல்வி, பொருளாதார முன்னேற்றம் மறுக்கப்பட்டது. இந்த  தீண்டாமை வன்கொடுமையை அடியோடு ஓழிக்க வேண்டும் என்பதற்கு மாற்று கருத்தில்லை. ஆனால்  இன்று சாதிய இட ஓதுக்கீடு என்பதை வைத்து நடப்பது என்ன? சனநாயக நாட்டில் சாதிய இடஓதுக்கீடு மட்டும் உங்களுக்கு தீண்டாமையாக தெரியவில்லையா?

சாதியை ஓழிக்கவேண்டும் என்பது உங்கள் கொள்கையா? அல்லது சாதி இருக்கட்டும் அது சமத்துவமாக இருக்கட்டும் என்பது உங்கள் கொள்கையா? அதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.

சாதி மனிதனுக்கு எதற்குமே தேவையில்லையே. அப்படி இருக்க ஏன் இந்த சாதியை விடாபிடியாக பிடித்துள்ளீர்கள்?

இன்று சாதி எங்கெங்கு பயன்படுத்தப்படுகிறது?
1. பள்ளி சாதிசான்றிதழில், 2. கல்லூரி இட ஓதுக்கீட்டில், 3. அரசு உதவிதொகைகளில், 4. வேலைவாய்ப்பு இட ஓதுக்கீட்டில். 5.அரசியல் இட ஓதுக்கீட்டில். இந்த இடங்களில் தான் சட்ட்பூர்வமாகவே சாதி பயன்படுத்தப்படுகிறது.(நான் காண்ட மிகபெரிய வன்கொடுமை இது தான்)

சாதி சங்கங்கள், சாதிகட்சிகள், திருமணங்கள் இவற்றில் பயன்படுத்துவதை சட்டம் தவறு என்றும் சொல்லவில்லை, சரி என்றும் சொல்லவில்லை.

ஓடுக்குதல், சித்தரவதை செய்தல், அடிமைபடுத்துதல், கேலி செய்தல், இவற்றில் சாதி பயன்படுத்துவதை சட்டம் தீண்டாமை வன்கொடுமையாக எதிர்க்கிறது.

அன்பர்களே ஓன்றை புரிந்து கொள்ளுங்கள். ஓடுக்குதல், அடிமைபடுத்துதல், கேலி செய்தல் என்பவை சாதிய அடையாளத்தில் செய்தால் மாட்டுமே தீண்டாமை அல்ல. எங்கு எப்படி எந்த அடையாளத்தில் செய்தாலும் அது தீண்டாமை தான். சாதியை சொல்லி திட்டினால் தான் வன்கொடுமை என்று கருத வேண்டாம். விருப்பததாக மனிததன்மையற்ற எந்த வார்த்தையை சொல்லி திட்டினாலும் அது வன்கொடுமை தான். வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு சாதி அடையாளம் மட்டும் பூசிக்கொள்ள தேவையில்லை.

என்னுடைய அனுபவத்தையே சொல்கிறேன்
 
நான் கேரளாவிலும் தமிழகத்திலும் படித்தது பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் பள்ளி. இந்த பள்ளியில் நாங்கள் எங்குமே சாதியை பார்த்ததில்லை. கேட்டதில்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் மாற்று சான்றிதழுக்காக ஆசிரியர்கள் சாதியை கேட்டார்கள். சாதிசான்றிதழுக்காக எங்களுக்கு தெரியாத சாதியை எல்லாம் எங்கள் மீது திணித்தார்கள். எந்த வித கபடமும் இல்லாமல் ஓடி அடி பாடி, மதியம் ஒன்றாய் கூட்டாச்சோறு உண்ட மாணவர்கள் நாங்கள். ஆனால் சாதிசான்றிதலுக்காக எங்களுக்கள் சாதிய அடையாளத்தை பூசினார்கள். எல்லோரும் வட்டமாக அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ணும் சொர்க்கம் எங்களுக்கு அன்றோடு முடிந்து போனது. ஈடு செய்ய முடியாத அந்த இன்பத்தை கெடுத்தது இந்த சாதி சான்றிதழும் சாதி இட ஓதுக்கீடும். உண்மையில் இன்று வரை ஏங்குகிறேன் அந்த கூட்டாஞ்சோறுக்காக. பள்ளியில் மாணவ மாணவிகள் அத்தனைபேரும் வட்டமாக அமர்ந்து ஓவ்வொரு வீட்டு உணவையும் ஓவ்வொரு கை பறிமாறி உண்ட அனுபவம் உள்ள யாருக்கும் அந்த கூட்டாஞ்சோறின் அருமை தெரியும்.

எங்கள் பள்ளியில் எல்லா தரப்பு மாணவர்களுமே படித்தார்கள். எங்களுக்களுக்குள் ஏழை பணக்காரன் வேற்றுமை இருந்தது. அனால் சத்தியமாக சாதி வேற்றுமை இருந்ததே இல்லை.  ஆனால் சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் சாதியை சொல்லுங்கள் என்று கேட்டார்களே அன்று தான் சாதியையே படித்தோம். சாதி பிரிவுகளையும் படித்தோம்.

சரி எதற்காக இந்த சாதி வேண்டும்? பின்தங்கியவர்கள் முன்னேற இட ஓதுக்கீடுகள் வேண்டும் என்றால் அதற்கு சாதி அடையாளம் தான் வேண்டுமா? ஓரு காலத்தில் சாதிய அடையாள அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது தீண்டாமை என்றால் இன்று சாதிய அடிப்படையில் கல்வி சலுகை தருவது மட்டும் எப்படி தீண்டாமையாகாது?

உங்களுடைய குறிக்கோள் என்ன?

பிற்படுத்தபட்ட சாதியை முற்படுத்துவோம். பின்னர் சரிசம பலத்தோடு சாதிசண்டை போடலாம் என்பதா?

முற்படுத்தபட்ட சாதியினர் ஒரு காலத்தில் செய்த பாவத்துக்கு பரிகாரம் இன்றைய சாதிய இட ஓதுக்கீடு என்பதா?,

முற்படுத்தப்பட்ட சாதியினர் செய்த பாவத்துக்கு தண்டனையா? அல்லது பாவத்துக்கு திருப்பி பலிதீர்க்க இன்றைய இட ஓதுக்கீடா?

படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரன்டாம் வகுப்புகளிலேயே நல்ல மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். அது எந்த சாதியினராக இருந்தாலும் சரி எந்த இனத்தினராக இருந்தாலும் சரி. இவர்கள் பொது பிரிவிலேயே கல்லூரிக்குள் தாரளம் நுழைந்து விடலாம்.

பொதுவாக எல்லா சாதியை சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களும் தனியார் கல்லூரிகளுக்கு சென்று விடுகின்றனர். அரசு கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் எல்லா சாதியிலும் இருக்கும் ஏழைமாணவர்கள் மட்டும் தான். இந்த ஏழை மாணவர்களுக்குள் ஏன் உங்கள் சாதிபித்தில் வஞ்சனை காட்டுகிறீர்கள்?

இதோ எனக்கு நடந்த மற்றொரு கொடுமை

நான் கிராம பள்ளியில் படித்தவள். எங்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் போதிய ஆசிரியர்கள் இல்லை. போதிய பாடபுத்தகங்கள் இல்லை. நுலக வசதியோ, கணிணி இணைய வசதியோ, ஆய்வுகூட வசதிகளோ இல்லை. எங்களுக்கு இருக்கும் ஒரே தொடர்பு செய்திதாள் மட்டும் தான். நாங்களாகவே படித்தோம். படித்தோம் என்பதை விட மனப்பாடம் செய்தோம். தேர்வு எழுதுவதற்காக நகரத்துக்கு வந்த எங்களுக்கு தேர்வு அறை முதற்கொண்டு விதவிமாக இருந்த மேசை நாட்காலிகள் கூட புதிது தான். வெற்றி பெற்றோம். எங்களை பொருத்தவரை 1200 க்கு 900 எடுத்ததே பெரிய மதிப்பெண். எங்கள் பள்ளியில் நான் தான் முதல் மதிப்பெண். ஊரே கூடி பாரட்டியது.

அடுத்து கிராம மணவர்கள் எங்களுக்கு தெரிந்தது எல்லாம் அரசு கலைகல்லூரி தான். அதில் எத்தனை பிரிவு படிப்புகள் இருக்கிறது என்பது கூட தெரியாது. பி. ஏ., பி.காம்., மட்டும் தான் தெரியும். கல்லூரியில் விண்ணப்பித்தால் மதிப்பெண் அடிப்படையிலான பொது பிரிவில் இடம் இல்லை என்றுவிட்டார்கள். இட ஓதுக்கீடு அடிப்படையிலான காத்திருப்போர் பட்டியலுக்கு தள்ளபட்டேன். அன்றைய நிகழ்வை நினைத்தால் இப்போது கூட அழுகை வருகிறது. கல்லூரி சேர்க்கை அறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். சாதி இட ஓதுக்கீடு அடிப்படையில் ஓவ்வொரு சாதியினராக மாணவர்களை சேர்க்கைக்கு தேர்ந்தெடுத்தார்கள். உமா மகேசுவரி என அழைக்கும் போது எல்லாம் எழுந்து நிற்பேன். ஆனால் அது எனக்கான அழைப்பாக இருக்காது. என் பெயர் கொன்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மாணவிக்கானதாக இருக்கும். எனக்கும் குறைவாக மதிப்பெண் வாங்கியிருக்கும் மாணவர்களுக்கு எல்லாம் சாதிய அடிப்படையில் சேர்க்கை கிடைத்து விட்டது. இறுதியில் //சாரி உனக்கு இடம் இல்லை. அடுத்த ஆண்டு முயற்சி செய் அல்லது தனியார் கல்லூரிக்கு போ// என்ற கல்லூரி முதல்வரின் வார்த்தை என்னை ஓ வென கதறவைத்துவிட்டது. அழுதேன். வயிறு எரித்தேன் சாதி இட ஓதுக்கீட்டின் மீது. கிராமத்தில் படித்த ஏழை என்பதால் மட்டுமே படிக்க துடியாய் துடித்தும் கல்வி மறுக்கப்பட்ட பாவி நான். ஆனால் படிக்கவே விருப்பமில்லாமல் காலர்சீப்புக்காக மட்டுமே வரும் சில ரவுடிகளுக்கு கல்லூரியில் எந்த வித முயற்சியும் இல்லாமலே இடம் தயாராக இருக்கிறது.

எனக்கு கல்வி மறுக்கப்பட்டது வன்கொடுமை என்பது மனசாட்சி உள்ள எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.

இப்படி தனே ஓரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதினர் அழுதிருப்பார்கள் என்று சொல்பவர்களை பார்த்து ஓரே கேள்வி. ஒத்துக்கொள்கிறேன், ஆனால் இட ஓதுக்கீடு எதற்காக பலிதீர்க்கவா? ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் கல்வி சமதாய மேன்மை மறுக்கப்பட்டது என்பது மிக தவறானது. எந்த காலத்திலும் எந்த சாதியாக இருந்தாலும் ஏழைகளுக்கு சமத்துவம் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை. முற்படுத்தப்பட்ட சாதியில் எத்தனை ஏழைகள் இருக்கிறார்கள் என்பது ஏன் உலகுக்கு தெரியாமல் போனது.

நகரத்தில் இருப்பவர்களுக்கு படிக்க கணிணி முதற்கொண்டு ஆசிரியர்கள், நூலகம், ஆய்வு கூடம், பயிற்சி வகுப்புகள், ஆலோசனை வகுப்புகள். மின்சார வசதி என எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்களே இல்லாமல் சிம்னி விளக்கில் படிக்கிறோம் கிராம மாணவர்கள். இவர்களுக்கு அல்லவா மதிப்பெண் அடிப்படையில் இட ஓதுக்கீட்டில் முன்னுரிமை தரவேண்டும்.

இட ஓதுக்கீடு தேவைதான் அதற்காக ஏன் சாதிய அடையாளத்தில் தருகிறீர்கள்? பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு செய்யலாமல்லவா? அப்போதும் பின்தங்கிய வகுப்பினர் தானே பெரும்பாலும் பயனடைவார்கள். கூடவே முற்படுத்தபட்ட சாதி ஏழைகளும் பயனடைவார்கள் அல்லவா?

எனது வழிபாடு வேறு, உனது வழிபாடு வேறு அதனால் மதமாக பிரிந்துள்ளோம் என்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் சாதியில் என்ன பிரிவினை இருக்கிறது என்பது தான் எனக்கு இன்னும் புறியவில்லை.

ஓரு காலத்தில் தொழில் அடிப்படையில் சாதி பிரிக்கப்பட்டது. ஆனால் இன்று சாதிய அடிப்படையில் எந்த தொழில் உள்ளது. எல்லோரும் எல்லா தொழிலுமே செய்கிறார்களே. அதே போல தான் உணவு பழக்கவழக்கங்களும். எல்லோருமே பிடித்ததை சாப்பிடும் காலம் இது. இதில் எங்கே சாதிபாகுபாடு வேண்டும்?

சாதி என்ற குறுகிய வட்டத்தில் மனதகுலத்துக்கு அல்லது குறிப்பிட்ட சாதியினருக்கு கிடைக்கும் லாபம் என்ன? சாதிக்கொள்கைகள் தான் என்ன? மதத்துக்கு ஓரு கொள்கை இருக்கிறது. நாட்டுக்கு ஓரு கொள்கை இருக்கிறது. மொழிக்கு ஓரு கொள்கை இருக்கிறது. இனத்துக்கு ஓரு கொள்கை இருக்கிறது. ஆனால் இந்த சாதிக்கு என்ன கொள்கை இருக்கிறது?

எனக்கு தெரிந்து தொழிலும், உணவு உட்பட பழக்கவழக்கங்களும் தான். ஆனால் இன்று தொழிலுக்கும் உணவுக்கும் சாதிய பாகுபாடு தேவையே இல்லையே. உணவுக்காக வேண்டுமாயின் சைவம் அசைவம் என பிரிக்கலாம். அதிலும் ஏற்ற தாழ்வு வர வாய்ப்பில்லலையே.

சனநாயக நாட்டில் யாரையும் யாரும் அடிமைப்படுத்த முடியாது. நீ இந்த தொழில் தான் செய்யவேண்டும் என வற்புருத்தவும் முடியாது. அப்படி இருக்க எதற்காக இன்னும் இந்த சாதி அடையாளம்.

மனிதனுக்கு எதற்குமே பயன்படாத சாதிய வட்டம் வேண்டும் என்பவர்கள் சாதிய இட ஓதுக்கீட்டை இன்னும் கொஞ்சம் தீவிரமாகவே ஆதரியுங்கள். நிச்சயம் சாதிகள் சமத்துவமும் ஆகாது, சாதி சண்டையம் ஓழியாது. எல்லா சாதியினரும் கல்வி, பொருளாதாரம், ஆயுதம், என அனைத்திலும் சரிசம பலத்துடன் மோதிக்கொள்ளலாம். இதனால் இரு சாதியினருக்கும் இழப்பு தானே தவிர, எந்த சாதியும்  சமுதாய முன்னேற்றத்தை காண முடியாது.

சாதியே வேண்டாம் என்பவர்கள் சாதிய இட ஓதுக்கீட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு (மன்னிக்கவும் தீயிட்டு எரித்துவிட்டு) பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீட்டை வழங்கும்படி குரல் கொடுங்கள். அப்போது தான் உண்மையான சமத்துவமும் சாதி ஓழிப்பும் வரும்.

சாதிய இட ஓதுக்கீடு என்பதற்காக சாதியை அங்கீகரித்துக்கொண்டு இருப்பதால் தான் இன்றும் சாதிக்கலவரங்கள் புகைந்துகொண்டு இருக்கிறது.

சாதியே மனிதனுக்கு தேவையில்லை. சாதியை பயன்படுத்துவதே தேச துரோகம். சாதிபெயரில் கட்சிகள் இருக்க கூடாது. சாதி பெயரில் சங்கங்கள் இருக்ககூடாது. சாதி பெயரில் குழுக்கல் இருக்ககூடாது. சாதி பெயரில் இட ஓதுக்கீடுகள் இருக்ககூடாது. சாதியே இருக்ககூடாது என சட்டம் போட்டு பாருங்கள். அடுத்த தலைமுறையினருக்கு சாதி என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடும்.

அது இல்லாமல் இன்னும் அரசியலுக்காக சாதியை, சாதி கட்சிகளை, சாதிசங்கங்களை, சாதி இட ஓதுக்கீடுகளை வளர்த்து வந்தீர்கள் என்றால் எந்த காலத்திலும் சாதியும் ஓழியாது, சாதிகள் சமத்துவமும் ஆகாது. இன்னும் சாதிவெறி தீவிரமாகி சாதிக்கலவரங்கள் தொடர்ந்து வெடிக்கும் என்பது தான் நிதர்சன உண்மை.

சாதியை ஓழிக்க முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். இந்த ஓன்றை வைத்து தான் சட்டத்தின் முன் சவால் விட்டுக்கொண்டு சாதிய சங்கங்களும், சாதிய கட்சிகளும், சாதிய அரசியலும் கொடிகட்டி பறக்கிறது. சாதிய இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால், அதை வைத்து எந்த சாதியையும் முன்னேற்ற எந்த சங்கமும் தேவைப்படாது. சாதியை ஓழியுங்கள். சாதியை ஒழிக்காமல் சாதிகலவரத்துக்கு வேறு தீர்வே இல்லை.

Read more...

செய்தியாளர்களை குறைசொல்லும் வலைப்பதிவர்களே நீங்கள் யார்?

Friday, November 21, 2008

சமீபத்தில் நடந்த சட்ட க்ல்லூரி சம்பவத்தை குறிப்பிட்டு பல வலைப்பதிவர்கள் செய்தியாளர்களை கடுமையாக விமர்சித்து குற்றம் சுமர்த்தி எழுதியுள்ளனர்.

செய்தியாளர்கள் என்றால் யார் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒரு செய்தியை பலபேரிடம் சேர்ப்பவர் தான் செய்தியாளர். அதனால் தானே மீடியா என ஆங்கிலத்திலும் ஊடகம் என தமிழிலும் சொல்கிறோம். சரி வலைபதிவர்கள் என்பவர் யார்? இவர்களும் ஒரு ஊடகம் தானே. செய்தி தாள், வானொலி, தொலைகாட்சி, இணையம் என, இணையத்தில் செயல்படும் செய்தியாளர்கள் தான் வலைப்பதிவர்கள். எனவே செய்தியாளர்கள் வேறு, வலைபதிவர்கள் வேறு என்று யாரும் செய்தியாளர்களை மட்டும் குறைபட்டுக்கொள்ள வேண்டாம்.

சரி விடயத்துக்கு போவோம்.

சட்டக்கல்லூரி சம்பவத்தில் போலீசாரோடு செய்தியாளர்களும் கலவரத்தை தடுக்க தவறிவிட்டனர் என்று திரு பழமைபேசி வலைபதிவரும், பணத்துக்காகவும் சாதிய ஆதிக்கத்திற்காவும் திரும்ப திரும்ப ஒளிபரப்பி தொடர்கலவரத்துக்கு வித்திடுகிறார்கள் என வினவு, மதிமாறன் உட்பட பதிவர்களும் குற்றம் சுமத்தி எழுதியுள்ளனர்.

ரளாவில் மதம் பிடித்த யானை ஒன்று பாகனை அரை மணி நேரத்துக்கும் மேலாக தூக்கி பந்தாடி கொன்ற கொடூர காட்சியை சென்ற ஆண்டு தொலைகாட்சிகளில் பலர் பார்த்திருக்க கூடும். இந்த காட்சியை ஓடி ஓடி உயிரையும் பணையம் வைத்து ஒளிப்பதிவு செய்தார்கள் செய்தியாளர்கள். இது திரும்ப திரும்ப தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த விடயத்தில் செய்தியாளர்கள் எப்படி குற்றம் சொல்ல முடியும்?

இனி சட்டகல்லூரி விடயத்துக்கு வருவோம். சட்டகல்லூரி சம்பவத்தை செய்தியாளர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் இன்று இந்த அளவுக்கு வலைபதிவில் விவாதித்திருப்பீர்களா? சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல் 3 மாணவர்கள் படுகாயம் என்று மட்டும் தான் உலகுக்கு தெரிந்து இருக்கும். இது வழக்கமான ஒன்று தானே என்று தான் உலக மக்கள் அனைவரும் அடுத்த வேலையை பார்த்திருப்பார்கள். ஆனால் செய்தி படம்பிடிக்கப்பட்டு காட்டப்பட்டதால் தான் மாணவர்கள் கலவரம் என்றால் எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என மக்கள் நேரடியாக புரிந்து கொண்டார்கள்.

 உண்மையில் வழக்கம் போல அடித்து கொள்வார்கள் என்று தான் காவலர்களும், கல்லூரி நிர்வாகமும் பொருப்பை தட்டி கழித்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் அதை தான் நிரூபித்தும் இருப்பார்கள். ஆனால் இன்று கல்லூரி மோதல்களுக்கு தீர்வு காணவேண்டியா கட்டாயத்துக்கு உலகம் வந்திருக்கிறது என்றால் அது செய்தியாளர்கலால் தானே.

ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அங்கு செய்தியாளர்களை தவிர வேறு யாரும் இல்லை என்ற சூழலில் செய்தியாளர்கள் கேமராவை கீழே போட்டுவிட்டு அசம்பாவிதத்தை நிச்சயம் தடுப்பார்கள். ஆனால் சட்டகல்லூரி சம்பவ இடத்தில் கலவரத்தை தடுக்க காவல்துறையினர், பொதுமக்கள், கல்லூரி நிர்வாகம் என அத்தனை பேரும் இருக்கிறார்கள். அந்த இடத்தில் செய்தியாளர்கள் கேமராவை கீழே போட்டுவிட்டு கலவரத்தை தடுக்க வேண்டும் என கூறுவது எவ்விதத்தில் நியாயம்?

அடுத்து அந்த இடத்தில் காவல்துறையினர் இல்லை என்றால் நிச்சயமாக பொது மக்களே கலவரத்தை தட்டிக்கேட்டிருப்பார்கள். ஆனால் அத்தனை காவலர்கள் நின்று வேடிக்கை பார்க்கும் போது பொதுமக்கள் என்ன செய்யமுடியும்? காவல்களை ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள் என தட்டி கேட்க முடியும். அதை செய்தியாளர்களும் பொதுமக்களும் சரியா செய்தார்கள். தட்டி கேட்டார்கள். ஒரு பெண் நிருபர் காவல் ஆணையரின் நெஞ்சில் தட்டி கேள்வி கேட்டது உங்கள் கண்ணில் படவில்லையா?

கலவரமாகட்டும், பூகம்பமாட்டும், சுனாமியாகட்டும், மதம்பிடித்த யானையின் அட்டகாசமாகட்டும். செய்தியாளர்கள் உயிரை பணையம் வைத்து ஓடி ஓடி செய்தி சேகரிப்பார்கள். செய்தியை வெளிக்கொணர்வது தான் செய்தியாளரின் பணியே தவிர. செய்தி சேகரிக்காமல் இருப்பது அல்ல. ஒரு அசம்பாவிதத்தை தடுக்க ஆயிரம் பேர் முயலும் போது, அது எப்படி நடக்கிறது என படம்பிடித்து காட்ட உங்களுக்கு ஒரு செய்தியாளர் வேண்டாமா?

அடுத்து சட்டகல்லூரி கலவரம் திரும்ப திரும்ப காட்டப்படுவதால் தொடர் கலவரத்துக்கு தூண்டுகிறார்கள் என்ற குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


செய்திக்கும் செய்தி விமர்சனத்துக்கும் உள்ள வித்தியாசத்தை வலைபதிவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்தியை ஒளிபரப்புவதால் கலவரம் வரும் என்று சொல்வது தவறு. எந்த செய்தியானாலும் அது மக்களை சென்றடைய வேண்டும். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தானே செய்தி ஊடகங்கள்.

அடுத்து செய்தி விமர்சனம். இதை ஒவ்வொரு செய்திநிறுவனமும் ஒவ்வொரு கோணத்தில் சொல்லும். இதில் தான் தங்களுக்கான பாரபட்சத்தை காட்டுகின்றன. இது மக்களின் பார்வைக்கு கண்கூடாகவே தெரியும். ஜெயா, கலைஞர், சன், மக்கள் தொலைகாட்சிகளில் எப்படி செய்திகள் வரும் என மக்களுக்கு நன்றாகவே தெரியும். இது கலவரத்தை தூண்டும் என்பது தவறான வாதம். கலவரத்தை தூண்டுபவர்கள் என ஊருக்குள் சில தென்டச்சோறுகள் இருக்கிறது. அவர்கள் தான் இந்த செய்திவிமர்சனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள். அதனால் தான் கலவரங்களும் வருகின்றன.

சரி இனி வலைபதிவர்களுக்கான சுயபரிசோதனைக்கு வருவோம்.


நாம் செய்வது என்ன? செய்தியை எழுதுகிறோமா? செய்தி விமர்சனத்தை எழுதுகிறோமா? ஊடகங்களில் செய்தியை அறிகிறோம். அதை விமர்சிக்கிறோம். தவறில்லை. ஆனால் எப்படி விமர்சிக்கிறோம் என்பதை கவனித்துப்பாருங்கள். கலவரத்துக்கு வித்திடுபவர்கள் பட்டியலில் முதலில் வருபவர்கள் யார்? என்பது புரியவரும்.

 
செய்தி ஒளிபரப்பால் 3 மாணவர்களை 30 மாணவர்கள் மிருகத்தனமாக அடிக்கிறார்கள் என்ற பதட்டம் தான் மக்கள் மத்தியில் வந்திருக்குமே தவிர, அடிப்பவர்கள் இந்த சாதி, அடிவாங்குபவர் இந்த சாதி என்ற எண்ணம் மக்களுக்கு வந்திருக்காது. ஆனால் அடிப்பவர் இந்த சாதி, அடிபடுபவர் இந்த சாதி என குறிப்பிட்டு செய்திவிமர்சனம் செய்பவர்கள் தான் உண்மையில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பவர்கள். இதை செய்தது யார்? பிரபல செய்தி நிறுவனங்களா? சில வலைபதிவர்களா?

உலகில் உள்ள எல்லா பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களும் இரு பிரிவினர் என்று தான் செய்தியை விமர்சித்ததே தவிர, இரு சாதியினருக்கு இடையே என செய்தியை விமர்சிக்கவில்லையே. ஆனால் வலைபதிவில் செய்தியாளர்களை குற்றம் சொன்ன அனைத்து பதிவர்களும் உயர் சாதி தலித் சாதி என பிரித்தல்லவா விமர்சித்துள்ளீர்கள். இது தானே கலவரத்துக்கு வித்திடும்.

வலைபதிவு அன்பர்களே மதுரையில் இரு சாதியினருக்கு இடையே சுவர் பிரட்சனையில் கலவரம் நடக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனால் சத்தியமாக அது எந்தெந்த சாதியினருக்கு இடையில் நடக்கிறது என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. அதே போல தான் சட்டக்கல்லூரி கலவரத்தில் அடித்ததும் அடிபட்டதும் எந்த சாதியினர் என்பதை வலைபதிவில் தான் பொருப்பில்லாமல் விமர்சிக்கிறீர்களே தவிர பிரபல செய்தி ஊடகங்கள் பொருப்பாகவே நடந்துள்ளன. தயவு செய்து சாதிய சிந்தனையை விட்டுவிட்டு மனிதாபிமான சிந்தனைக்கு வாருங்கள்.சாதிய இடஓதுக்கீட்டை ஒழியுங்கள். சாதி சான்றிதழை ஒழியுங்கள். சாதி அமைப்புகளை ஒழியுங்கள். சாதியை ஓழியுங்கள். செய்தியை குறைபடுவதை விட செய்திவிமர்சனத்தில் விழிப்புடன் பொருப்புடன் இருங்கள்.சாதி ஓதுக்கீடு ஒழிப்பு குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Read more...

தமிழுக்காக, தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துங்கள்

Monday, October 27, 2008

தமிழுக்கு திறன் இல்லை என்ற சொல்லும், தமிழீழக் கொடூரங்களை கேட்க நாதியில்லை என்ற உண்மையும் சென்ற வாரங்களில் என்னை வெகுவாக பாதித்த விடயங்கள்

இந்த இரண்டு அநீதிகளுக்காகவும் ஆயுதம் ஏந்தி போராட தமிழர்களை தயார் செய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.

முதலில் தமிழுக்கு இழைக்கப்படும் கொடுமையை பார்ப்போம்.

என் மகனுக்கு 2 வயது கடந்துவிட்டது. தமிழ் எழுத படிக்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். உயிர் எழுத்துக்கள் 12. மெய் எழுத்துக்கள் 18. உயிர்மெய் எழுத்துக்கள் 216. ஆயுத எழுத்து 1., மொத்த எழுத்துக்கள் 247. இப்படி கற்றுக்கொடுக்கும் போது எதற்காக அம்மா இந்த ஆயுத எழுத்து என்றான் அறிவு. அப்போதைக்கு பதில் சொல்ல தெரியாத நான் தமிழை காப்பதற்காக என எதார்த்தமாக பதில் சொன்னேன். இனி கூடுதலாக ஸ,ஷ,ஜ,ஹ இந்த எழுத்துக்களை என்ன சொல்லி கற்றுக்கொடுப்பது?

தமிழில் சில எழுத்தக்கள் இல்லை அதனால் வடமொழியில் இருந்து கடன்வாங்கியது. இப்படி தான் தமிழ் சமுதாயம் எனக்கு கற்றுக்கொடுத்தது. இன்று தமிழகத்தில் பள்ளி பாடபுத்தகங்களில் இந்த நான்கு எழுத்துக்களை கற்றுக்கொடுப்பது இல்லை. சமுதாயத்திற்காக குழந்தைகள் மீதுள்ள பரிதாபத்தில் ஆசிரியர்கள் தான் சுயமாக கற்றுக்கொடுக்கிறார்கள்.

தமிழக அரசு இந்த நான்கு எழுத்துக்களை நீக்கவும் இல்லை, சேர்க்கவும் இல்லை. இதனால் இன்றுவரை தமிழ் ஒரு கடன்மாறி மொழியாகவே உள்ளது. நமது குழந்தைகளுக்கு மட்டுமல்ல தமிழ் கற்க விரும்பும் வேற்று மொழியினரிடமும் தமிழுக்கு திறன் இல்லை என்று தான் இநத நான்கு எழுத்துக்களுக்கான விளக்கத்தை தருகிறோம்.

உண்மையில் இந்த நான்கு எழுத்துக்கள் சமசுகிருத விரும்பிகளால் தமிழில் திணிக்கப்பட்டது என்பது தான் வரலாற்று உண்மை. தமிழ் இலக்கணத்திலோ, தமிழின் முதன்மை நூல்களிலோ இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை.

கொடுமை என்னவென்றால் தமிழை குறைகூறி வடமொழி எழுத்துக்களை திணித்தவர்கள் எளிதில் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தமிழில் வடமொழி எழுத்துக்களை சேர்க்ககூடாது, நீக்கவேண்டும் என 2 ஆயிரம் ஆண்டுகளாக போராடுபவர்கள் இன்றுவரை இந்த தமிழ் சமுதாயத்திடம் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்.

தமிழர்கள் இந்த நான்கு எழுத்துக்களை தவிர இன்னபிற எழுத்துக்களை ஒதுக்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த நான்கு எழுத்துக்களை ஏன் ஒதுக்க மறுக்கிறார்கள்

1. பலரின் பெயர்களில் வருவது
2. உலக இணைப்பு மொழியாக அரங்கேரி வரும் ஆங்கிலத்துடன் தொடர்பை வைக்க இந்த நான்கு உச்சரிப்புகள் மிகமிக அவசியமாக இருப்பது.
3. பழகிவிட்டது

நியாயமான காரணங்கள் தான்.

இங்கு தமிழர்கள் ஒன்றை சிந்தித்தாக வேண்டும். இந்த நான்கு உச்சரிப்புகள் தேவை என்றால் அதற்கு நம்மீது திணிக்கப்பட்ட வடமொழி எழுத்துக்கள் தான் வேண்டும் என்றில்லை. தமிழ் எழுத்துக்களே அந்த உச்சரிப்பை தரும். நாம் தான் பயன்படுத்த தாழ்வுமனபான்மை கொண்டுள்ளோம்.

இந்த நான்கு உச்சரிப்புகளுக்கு மட்டுமல்ல ஓராயிரம் உச்சரிப்புகளையும் ஒலிக்க தமிழில் எழுத்து இருக்கிறது. இந்த தனிச்சிறப்பு தான் தமிழை உலக செம்மொழிகளில் இருந்து தனித்து காட்டுகிறது.

தமிழை எந்த சூழலிலும் காக்க தான் அதற்கு ஆயுத எழுத்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஆயுத எழுத்து உயிர், மெய், உயர்மெய் எழுத்துக்களுக்கு பொதுவானதாக இருப்பதோடு தமிழை காக்கும் ஆயுதமாகவும் இருக்கும் என்பது எனது எண்ணம்.

இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.

ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள,  ஃச்-ஸ்

இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.

ஸ் என்ற எழுத்தை தவிர நாம் பிறதை பயன்படுத்துவதில்லை.

உதாரணத்துக்கு காங்கிரஸ் என எழுத்தும்போது தான் ஸ் பயன்படுத்துகிறோம். காங்கிரசார், காங்கிரசிடம், காங்கிரசுடன், என்று தான் பயன்படுத்துகிறோம்.

ஒரு ஒலிக்காக தனி ஒரு எழுத்துவரியையே ஏற்பதற்கு பதிலாக ஸ் - ஃசு என்று ஆயுதத்தை பயன்படுத்தலாமே.

ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.

உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.

அடுத்து ஷ

ஷ-ஃச, ஷா-ஃசா, ஷி-ஃசி, ஷீ-ஃசீ, ஷ§-ஃசு, ஷ¨ - ஃசூ, ஷெ-ஃசெ, ஷே-ஃசே, ஷை-ஃசை, ஷொ-ஃசொ, ஷோ-ஃசோ, ஷைள-ஃசௌ, ஷ்-ஃச்

எல்லா உச்சரிப்பும் எளிதாகவே வருகிறதல்லவா? மேலும் ஷ என்ற உச்சரிப்பு மொழிக்கு இடையிலும் இறுதியிலும் வரும்போது ட வாக தமிழில் பயன்படுத்தி வருகிறோம். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எ.கா: இலட்சுமி, நட்டம், விடம்.

அடுத்து ஜ

இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.

இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே

ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..

அடுத்து ஹ

ஃக, ... இப்படி தாரளம் பயன்படுத்தலாமே.

இங்கு சிலர் வடமொழி எழுத்து வேண்டாம் ஆனால் அதன் உச்சரிப்பு மட்டும் வேண்டுமா என கேட்கலாம். இந்த உச்சரிப்புகள் எல்லாம் ஏற்கனவே தமிழில் உள்ளது. உதாரணமாக க என்ற வல்லின எழுத்து எல்லா இடங்களிலும் வலிந்தே ஒலிப்பதில்லை. அதனுடன் சேரும் இன எழுத்து, குற்றிய லுகரம் போன்ற இடங்களில் வலிந்தும் மெலிந்தும் திரிந்தும் ஒலிக்கும். அதுபோன்றே தமிழின் எல்லா எழுத்துக்களும் எந்த உச்சரிப்புக்கும் உட்படும்.

இந்த உச்சரிப்புகளுக்கு எல்லாம் இலக்கணம் படித்துவிட்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக எழுத்து கூட்டி வாசிக்கும் போதே இவை ஒலித்துவிடும். ஒத்த உச்சரிப்புகளுக்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் பொருந்தும் ஒரு எழுத்தை கொண்டிருப்பது தான் தமிழின் எளிமையும் சிறப்பும்.

வடமொழி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் தமிழ் எழுத்துக்களிலேயே சாத்தியப்படும் போது எதற்காக இன்னும் தமிழை கடன்வாங்கி மொழியாகவே வைத்திருக்க வேண்டும்?

தமிழர்கள் சிந்திப்பார்களா?

பழக்கத்தில் இருப்பதை மாற்றுவது கடினம் என எண்ணும் தமிழர்களுக்கு ஒரு நினைவூட்டல். வடமொழி எழுத்துக்களை தமிழில் திணிக்கும்போது நம் முன்னோர் அதை பழக எவ்வளவு கடினப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று நாமோ அதை எளிதாக பயன்படுத்துகிறோம். அதே போல தான் நாம் இந்த எழுத்துக்களை நீக்க முயற்சிக்கும் போது சிறிறு காலம் கடினப்பட வேண்டி வரும். ஆனால் நமது குழந்தைகள் வடமொழி எழுத்து இல்லாமல் எளிமையாக தமிழை எழுதிவிடுவார்கள்.

கடன்வாங்கி மொழி என்ற இழுக்கும் தமிழைவிட்டு நீங்கும்.

*************************

தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துவோம்.

இங்கு நான் குறிப்பிடும் ஆயுதம் ஆயுத எழுத்து அல்ல. அதன் தத்துவம். ஆயுத எழுத்து வாள், அம்பு போன்று இல்லாமல் கேடயமாக இருப்பது எல்லோரும் அறிந்ததே.

தமிழர்களே உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்போம்? இது ஈழத்தமிழரின் ஓலக்குரல். தமிழர்களை சுட்டுபொசுக்கும் இலங்கை அரசுக்கு எதிராக உங்களை கத்தி கடப்பாரை, பீரங்கி துப்பாக்கி, ஏந்தி போராட அழைக்கவில்லை ஈழத்து அநாதைகள். கேடயம் ஏந்துங்கள் என்று தானே கெஞ்சுகிறார்கள். இந்தியா உட்பட நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஆயுத உதவியை தடுத்து நிறுத்தத்தானே கேட்கிறார்கள்.

இந்த ஆயுதத்தை கூட ஏந்த தயார் இல்லை என்றால் தமிழனை போல சுயநலவாதி, மனிததன்மையற்ற மிருகம் உலகில் உண்டா? கார்கில் யுத்தத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலமும் வாரி வழங்காதபடி 50 கோடி ரூபாயை வாரிவழங்கி வள்ளலாக பெருமைகொண்ட தமிழகமே. இன்று உனது தொப்புள்கொடி உறவுக்காக மட்டும் ஏன் அரசில் நாடகமாடுகிறாய்?

தமிழக அரசு முயன்றால் உலக அரங்கில் தமிழனுக்காக ஒரு ஈழத்தை அமைத்து தரமுடியும். ஆனால் அரசு பித்தலாட்டவாதிகளின் கையில் அல்லவா மாறி மாறி கூப்பாடு போடுகிறது.

எனது நியாயமான கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

1. இலங்கையில் என்ன நடக்கிறது?
2. ஈழத்தை வைத்து தமிழகத்தில் ஏன் அரசியல் நாடகங்கள்?
3. இலங்கை போன்ற நிலை இந்தியாவில் இருந்தால் தனிநாடு கேட்டு தமிழன் மட்டும் தான் போராடுவானா?
4. ஈழத்துக்கு முடிவு தான் என்ன?

விரிவாகவே கேட்கிறேன்

இலங்கை இறையாண்மை குறித்து முதலைகண்ணீர் வடிக்கும் இந்தியாரை பார்த்து:

1. இலங்கை சட்ட திட்டங்கள் தமிழரை இரண்டாம்பட்ச குடிமக்களாக நடத்துவது உண்மையா இல்லையா?
2. தமிழரை அடிமைகளாகவே வைத்திருக்க தக்க சட்டம் இலங்கையில் உண்டா இல்லையா?
3. தமிழன் ஒருவன் இலங்கையின் உயர்பதவிக்கு வரமுடியுமா?
4. இலங்கையின் இறையாண்மை சரியானது என்றால் அந்த சட்ட திட்டங்களை இந்தியாவில் அமல்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா?

அடுத்து கல்நெஞ்சம் கொண்ட தமிழ்நாட்டினரை பார்த்து ஒரு கேள்வி:

1. தமிழை அரசியல் செய்து சீர்குலைத்த அதே மனபான்மையை, குற்றுயிரும் குலையுயிருமாய் உயிர் பிச்சை கேட்டு வரும் ஈழத்து மக்களிடமும் காட்ட வேண்டுமா?

2. அனைத்து கட்சி கூட்டம், ஆர்ப்பாட்டம், ராசினாமா நாடகம், மனிதசங்கிலி இதெல்லாமம் எதற்காக?

3. விடுதலை புலிகளுககு ஆதரவாக பேசினால் சிறை என்றால் உங்கள் உண்மையான மனநிலை தான் என்ன?

4. ஈழத்தமிழர்கள் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு இலங்கை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அடிமைகளாக இருக்கவேண்டும் என்பதா? அல்லது விடுதலை புலிகளை தவிர்த்து அறவழியில் இலங்கைக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்பதா? என்ன தான் ஈழமக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்? தமிழக அரசியல் மாமேதைகளே ஈழத்துக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து, தயவு செய்து அரசியல் நாடகம் ஆடாதீர்கள்.

5. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான சட்டதிட்டங்களை கொண்டுள்ளது. இந்த இனவெறி சட்டத்தை மாற்ற இந்தியா உட்பட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் உலகின் 10 கோடி தமிழர்களும் இலங்கைக்கு எதிராக போர் தொடுப்போம் என ஏன் தமிழக அரசால் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முடியவில்லை?

6. தமிழகத்தை தவிர பிற மாநிலத்தவருக்கு விடுதலை புலிகள் என்றால் காசுமீர் தீவிரவாதிகள் போன்றோர் என்ற எண்ணம் தான் இன்றளவும் இருக்கிறது. இந்தியாவில் காசுமீரை சேர்ந்த ஒருவன் முதலமைச்சராகவும் முடியும், பிரதமராகவும் முடியும், சனாதிபதியாகவும் முடியும், ராணுவ தளபதியாகவும் முடியும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இலங்கையில் அப்படி இல்லை. தமிழனை அடிமையாகவே வைத்திருக்க சட்டம் வகுக்கப்பட்டுள்ளது என ஏன் இந்திய மக்களுக்கு தமிழனால் புரியவைக்கமுடியவில்லை?

7. 40 பராளுமன்ற உறுப்பினர்கள் ராசினாமா செய்வோம் என பித்தலாட்டம் செய்வதை விட 40 உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி ஈழத்தமிழரின் நிலையை விளக்கி நீதிகேட்க முடியாதா?

8. கார்கில்நிதி, சுனாமி நிதி திரட்டியது போல ஈழத்தமிழுருக்காக இந்திய முழுவதும் பகிரங்கமாக நிதி திரட்ட முடியாதா?

9. இதெற்கெல்லாம் ராசீவ் காந்தி கொலை தடையாக இருக்கிறது என்று வாதிடும் காங்கிரசு மேதாவிகளை பார்த்து ஒரு கேள்வி: இந்திராகாந்தியை தனிப்பட்ட ஒரு சீக்கியர் கொன்றதற்காக 1500 சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கேட்டேன். ஓரளவு திருப்தியடைந்தவர்கள் பரிகாரமாக கொலையாளியின் மனைவிக்கு பாராளுமன்ற பதவி கொடுத்தார்களாம். அதே போல ராசிவ் கொலைக்காக 2 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் வரை வாயமூடி இருந்துவிட்டோம். இன்னும் 10 கோடி தமிழர்களையும் கொன்று குவித்தால் தான் உங்களுக்கு திருப்தி கிடைக்குமா? ராசீவ் கொலை நிச்சயமாக வன்மையாக கண்டிக்க தக்கது தான். அதற்காக ஈழத்தமிழர் படுகொலையையும் விடுதலைபுலிகளையும் பற்றி பேசவே கூடாது என்றால் இது எந்தவகையான சனநாயகம்?

10. தமிழர்களே தமிழின தலைவன் வேலுபிள்ளை பிரபாகரனா, கருணாநிதியா எனபது அல்ல நம்முன் இருக்கும் கேள்வி. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வீரதீர வரலாறு கொன்ட தமிழினம் அடிமைபட்டே கிடக்கவேண்டுமா? என்பது தான் நம்முன் இருக்கும் அவலம். தமிழினத் தலைவராக அகத்தியரும், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் உலகெங்கும் கம்பீரமாய் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அதை நிலைநாட்ட நமக்கு தேவை அரசியல் சூழ்ச்சிகள் இல்லாத ஒற்றுமை. அடிமை எண்ணங்கள் இல்லாத சுதந்திர மனபான்மை.

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும். உலகன் 10 கோடி தமிழர்களே தாய்மொழிக்காகவும் தாய் மண்ணுக்காகவும் தயங்காமல் ஏந்துங்கள் ஆயுதத்தை கேடயமாக. அறப்போரை பகிரங்கமாக அறிவியுங்கள் இலங்கைக்கு எதிராக.

Read more...

நாசம் செய்யும் நான்கு எழுத்துக்ளுக்காக ஏன் வரிந்துகட்டுகிறீர்கள்?

Saturday, October 18, 2008

தமிழில இருந்து வடமொழி எழுத்துக்களை நீக்கவேண்டும் என்றால் தமிழர்களே அதை எதிர்க்கிறார்கள். இந்த நான்கு எழுத்துக்களால் தமிழுக்கு வரும் தீங்கை புரியச்செய்வதே இந்த பதிவு. மேலும் இந்த நான்கு எழுத்துக்களை நீக்கினாலே அறிவியல தமிழ் எளிமையாகிவிடும் என்பதையும் பார்க்கலாம்.

தமிழில் வடமொழி எழுத்துக்களை நீங்குவதால் அறிவியல் சொற்களை எழுத முடியாது என்றும், ஸ, ஷ, ஜ, ஹ இந்த நான்கு எழுத்துக்கள் தமிழோடு இருப்பதால் தமிழ் மேலும் வளமையடையும் என்றும் சில தமிழர்களே கூறுகின்றனர்.

இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை என்றால் தமிழில் அறிவியலை எழுதவே முடியாது என சொல்வது தமிழரின் இயலாமை தான் காட்டுகிறது. இந்த நான்கு எழுத்துக்கள் நச்சு கிருமிபோல ஒட்டிக்கொண்டு தமிழுக்கு செய்யும் தீங்கை புரிந்துகொண்டீர்கள் என்றால் இதற்காக வரிந்துகட்ட மாட்டீர்கள்.

பல நாள்நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரிய சன்னிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுரஒலி பேதங்களை தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும், பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ்யம் டீக்கா டூக்காடிபணி முதலிய உரைகோள் கருவிகளை பொருள்தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெற வேண்டியதற்கு பாஷ்யகாரர்கள் வியாக்கியான கர்த்தாக்கள் டீக்கா வல்லவர்கள், டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசிரியர்கள் கிட்டுவது அருமையினும் அருமையுமாய் இருக்கிற ஆரியபாஷை. என்று வள்ளார் சொல்வதை பாருங்கள்.

இன்னும் புரியாதவர்கள் 20, அல்லது 30 வருடங்களுக்கு முந்தைய தமிழ்செய்திதாழ்கள், வடமொழி கலந்து எழுதப்பட்ட புத்தகங்களில் தமிழின் கொடுமை பாருங்கள்.

வடமொழி எழுத்துகளுக்கு எதிராக போரடியதன் விளைவு தான் இன்று இந்த எளிமை தமிழ் கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் தமிழ் வார்த்தைகள் விடுதலையாகி வந்திருக்கிறது.

இந்த நான்கு எழுத்துக்கள் தமிழோடு தொங்கிக்கொண்டு இருப்பதால் என்னென்ன தொழுநோய் தமிழுக்கு வந்திருக்கிறது என பாருங்கள்

1. தமிழின் சீரான இலக்கணம் அழிகிறது
2. தமிழ் உச்சரிப்புகள் கெடுகிறது
3. பல தமிழ் வார்த்தைகள் அழிகிறது.
4. புதிய சொல்லாக்கங்களே இல்லாமல் போகிறது
5. தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள்.
6. நான்கு எழுத்துக்கள் போதாது. நான்கை ஏற்றுக்கொண்டதை போல நாற்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.
7. வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்ட திருக்குறள் உட்பட பல அரிய தமிழ் நூற்களும் மதிப்பற்று போகிறது.
8. இந்த நான்கு நான்கு எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்படும் தமிழ்சொற்களை உலக அரங்கில் மதிப்பற்ற பழமைவாத சொற்களாக்குகிறார்கள்
9. எதிர்காலத்தில் இந்த நான்கு எழுத்துக்கள் இல்லாமல் தமிழே இல்லை என்ற நிலையை உருவாக்குகிறார்கள்
10. கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் சொற்கள் பிறக்காமல் போகிறது. இதனால் தமிழ் மலட்டு மொழியாகிறது.

இன்று உலகின் ஒப்பற்ற உயரிய நூல் திருக்குறள் என பெருமைபடுகிறோம். அதில் எங்கே போனது இந்த நான்கு எழுத்துக்கள்?

இந்த நாசமாக போன( தமிழை நாசமாக்கியதால் இப்படி குறிப்பிடுகிறேன்) நான்கு எழுத்துக்களை தூக்கி எரிவதால் தமிழ்அன்னைக்கு என்னென்ன ஆற்றல்கள் வருகிறது?

1. சீரிய, உயரிய, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இலக்கணம் கொண்ட மொழியாகிறது.
2. தனித்து வாழும் செம்மொழியாகிறது
3. அறிவியல் தமிழ் எளிதாகிறது.
4. சீரிய உச்சரிப்புடைய உன்னதமொழியாகிறது
5. சமசுகிருதம் என்ற சாயல் இல்லாமல் தனித்து நிற்கிறது.
6. காலவளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் சொற்களும் வளர்கிறது.
7. கணிணி உட்பட தகவல் தொழில்நுட்பங்களில் தன்னிகரற்ற மொழியாகிறது.
8. குழந்தைகளிடம் கொஞ்சும் மழலை தமிழை கேட்க முடிகிறது.
9. இயல், இசை நாடகம் காக்கப்படுகிறது.
10. என்றும் இளைமை மிளிர்கிறது தமிழுக்கு

இன்று பெரும்பாலான அறிவியல் வர்ர்த்தைகள் எல்லாம் கிரேக்கம் லத்தீன் மொழிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் பழமையான ஒரு பொதுமொழியில் இருக்கட்டும் என்பது தான். இந்த மொழிகளுக்கெல்லாம் தமிழ் எந்த விதத்தில் சளைத்தாக உள்ளது? உதாரணத்திற்கு அவர்கள் ஆல்பா, பீட்டா, காமா, என்கிறார்கள். இதன் பொருள் முதலாவது இரண்டாவது, மூன்றாவது என்பது தான். இதை மொழிபெயர்க்க நாம் fa , ba,. ga போன்ற உச்சரிப்புகள் தமிழில் இல்லை என வாதிடுகிறோம். ஆல்பா பீட்டா காமா என்று எழுதினாலும் புரிகிறது. அதைவிட தமிழில் நேர்மின் கதிர், எதிர்மின்கதிர், மின்சுமையற்ற என எளிமையாக மொழிபெயர்க்கும் போது இன்னும் கருத்தூன்றி படிக்க முடிகிறது.

கடவுள் துகள் எனப்படும் என்ற சொல்லை எப்படி தமிழில் எழுதுவது கிக்சு போசன் என்று எழுதலாம் இன்னும் தமிழ்படுத்தும் போது அடிப்படை துகள் எனலாம். இங்கு தமிழோடு ஒன்றிய பல புதிய சொற்கள் தமிழுக்கு கிடைக்கிறதே.

உயர்திரு. செயபாரதன் ( தமிழ் அணுவியல் விஞ்ஞானி. கனடா) அவர்களுடனான ஆக்கபூர்வமான விவாத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

//ஆர்கானிக் இரசாயனக் கணிதச் சமன்பாடுகளைத் தனித்தமிழில் எப்படி எழுதுவது என்று காட்டுங்கள்.//


வேதியலில் குறிப்பிடப்படும் அனைத்து தனிமங்களுக்கும் இயற்பியலில் பயன்படும் அனைதது அடிப்படை அளவீடுகள் மற்றும் அவற்றின் துணை அளவீடுகளுக்கும் ஒரே பொது குறியீடு உலகெங்கும் பின்பற்றப்படுகிறது. இவை எழுத்துக்களுக்காக பயன்படுத்தப்படுபவை அல்ல குறியீடுகளுக்காக பயன்படுத்தப்படுபவை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவை வேதியல் சமன்பாட்டை தருவிப்பதற்காகவும், கணித சமன்பாடுகளை நிரூபிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மட்டுமே. சொல்லப்போனால் இவை எண்களை போல பயன்படுத்தப்படுபவை. இவைகள் கலப்பது மொழி கலப்பும் அல்ல. இவை கலப்பதை நான் குறைகூறவும் இல்லை.

இவற்றிற்காகவெல்லாம் நாம் இவ்வளவு தூரம் எழுதவில்லை. இவற்றையெல்லாம் தமிழ்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. எண்களையம் குறியீடுகளையும் பயண்டுத்துவது மொழிகலப்பு அல்ல.

ஆக்சிசன் என்பதற்கு O2, ஐட்ரசன் என்பதற்கு H, 2, +, = இதெல்லாம் H2O என்ற சமன்பாட்டில் வருகிறது. இதில் 2, +, = இதை போல O, H ம் குறியீடுகள் தான். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். குறியீடுகளுக்கும் தாங்கள் கூறும் மொழி விடுதலைக்கும் என்ன சம்மந்தம்.

//மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் sh(ஸ), sha(ஷ), ja(ஜ), ha(ஹ), ga( ?), da( ?), ba( ?), dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்.//

தங்கள் கூறியதை போல நான்கு க, நானகு, ட, நான்கு ச என சேர்த்தால் தமிழின் நிலையை பிரகிலுப்தம் வலைபதிவர் குறிப்பிடும் அதித்தமிழ் தான் மிஞ்சும். இப்படி சேர்ப்பதால் மட்டும் எல்லா உச்சரிப்புகளையும் கொண்டுவந்துவிட முடியுமா?
தற்போது தமிழில் ன, ண, ந, ல, ழ, ள, ற, ர இந்த எழுத்துக்கம் ஒரே உச்சரிப்புக்கு ஒன்றுக்கு இரண்டாகவும் மூன்றாகவும் இருக்கிறது. இவற்றில் ஒரு எழுத்து வரவேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்தை எழுதினால் எவ்வளவு பொருள் வேறுபடும் என்பது தங்கள் அறிந்ததே.
 இவற்றை எல்லாம் சேர்ப்பதால் எந்த க வை எங்கே போடுவது என்ற குழப்பமும் காலதாமதமும் தான் ஏற்படுமே தவிர தமிழ் எளிமை படாது. எது தமிழ் விடுதலை என்று நீங்களே சொல்லுங்கள்.

Read more...

தமிழை அரசியல் பண்ணாதீங்க., திருக்குறளும் திரிக்கப்பட்டுவிடும்.

Thursday, October 16, 2008

வடமொழி எழுத்துக்களை நீக்கி தனித்தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தலாம் என்ற எண்ணத்திற்கு பலரும் முழு ஆதரவு தந்தனர். மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்மொழியின் மீது பற்றுடையோர் தமிழர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். அந்த பதிவில் மூன்றுபேர் தனிப்பட்ட கருத்துக்களை எழுதியிருந்தனர். அவர்களது நியாயமான எதார்த்த கருத்துக்கள் என்னை இன்னும் ஆழமாக சிந்திக்க வைத்தது.

பழக்கத்தில் உள்ள எழுத்துக்களை நீக்குவதால் என்ன பயன் என்று திரு RV அவர்களும், தனித்தமிழ் கொள்கை அரசியலாக்கப்பட்டிருக்கிறது என்று திரு.bmurali80  அவர்களும், அறிவியல், நவீனம் போன்றவற்றை தமிழில் கொணடுவருவதில் உள்ள சிக்கல்களை திரு.Jayabarathan S  அவர்களும் குறிப்பிட்டுருந்தனர்.

பிற மொழி சொற்கள் தமிழில் கலப்பது தவிர்ககமுடியாதது என்பது உண்மை தான். இங்கு முக்கியமாக ஒன்றை சிந்தித்தாக வேண்டும். பிறமொழியில் இருந்து தமிழில் கலக்கும் ஒவ்வொரு சொற்களும் தமிழின் இனிமையை கெடுப்பது என்பது ஒருபுறம்., ஆனால் காலகாலமாக உள்ள தமிழ் சொற்களை அழித்துவிடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று எனக்கு தெரிந்து எலுமிச்சை என்ற தமிழ்சொல் எங்கே போனது என்றே தெரியவில்லை. பிறமொழி சொற்களை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அதே பிறமொழி சொல் நமது பாரம்பரிய தமிழ்சொல்லை அழிக்கும்போது எப்படி வேடிக்கை பார்ப்பது?

எலுமிச்சை ஒரு உதாரணம் தான் அதுபோல ஆயிரம் ஆயிரம் தமிழ்சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது.

இதே நிலை நீடித்தால் தமிழின் மூலமொழி ஆங்கிலம் என அடுத்தநூற்றாண்டு மொழியாராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். வேட்டி, முட்டி, அகத்தியர், புத்தகம் என்ற தமிழ் சொல்லை எப்படி இன்று சமசுகிருதவாதிகள் வேஸ்டி, முஷ்டி, அகஸ்தியர், புஸ்த்தகம் என தங்களுடையதாக திரித்து சொல்கிறார்களோ அதே போல ஆட்டுக்குட்டி என்ற நமது அழகிய தமிழ்சொல்லை ஆஸ்டுகுட்டி என்று விடுவார்கள். அடுத்த நூற்றாண்டு மொழியாராய்ச்சியாளர்களும் ஆமாம் ஆமாம் இது சமசுகிருத சொல்தான் என வரிந்துகட்டி விடுவார்கள்.

இன்றே எதை எழுதினாலும் அது சமசுகிருத சொல் என்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் தமிழருக்கே அது சமசுகிருதமா, தமிழா என்ற குழப்பம் நீடிப்பது தான். அப்படி இருக்கும் போது தமிழின் எதிர்காலத்தை சிந்தித்து பாருங்கள்.

அறிவியல் பெயர் சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துவது போன்று அப்படியே பயன்படுத்திவிட்டு போக வேண்டியது தானே. இதற்கெல்லாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்கலாம்

அப்படி போகின்ற போக்கால் தான் இன்று தமிழே பண்ணித்தமிழாகி விட்டது. எதற்கெடுத்தாலும் கால் பண்ணு, போன் பண்ணு, வாக் பண்ணு, டீச் பண்ணு, வாச் பண்ணு, என ஆங்கில வினைச்சொற்களையும் சேர்த்து அதை தமிழாக்கி விட்டார்கள். காலப்போக்கில் வெறும் பண்ணு என்பது மட்டும் தான் தமிழில் இருக்கும். அதற்கு பண்ணித்தமிழ் என்று பெயர்வைத்து நாம் பெருமை பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

அறிவியல் தொழில்நுட்பங்களில் தமிழை கையாள்வது கடினமானது அல்ல. உண்மையில் கட்டாயமாக தமிழில் தான் தந்தாக வேண்டும். உதாரணமாக  SCREW இதன் அர்த்தம் யாருக்கு தெரியும்? ஆனால் திருகாணி என்றால் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல தான் LEVER - நெம்புகோல்,  திருப்பு உளி, கணிணி, இணையம், செல்பேசி இப்படி எல்லா சொற்களையும் அர்த்தத்தோடு தமிழிலேயே எளிமையாக சொல்லலாம்.

தனித்தமிழ் என்ற கோட்பாட்டை சிலர் மொழித்தீவிரவாதமாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது மறுக்கமுடிதா உண்மை தான். தனித்தமிழ் என்பது சமசுகிருத, இந்தி, ஆங்கில எதிர்ப்பு போர் அல்ல. இதை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழில் வடமொழி சொற்களை நீக்குவதில் காட்டும் தீவிரத்தை தமிழில் நவீனச்சொற்கள் படைப்பதிலும் காட்ட வேண்டும்.

தமிழின் சிறப்பே உச்சரிப்பு- எழுத்துநடையில் தான் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு நவீன சொற்களை படைக்க வேண்டும்.

ஒரு கலை சொல்லை படைக்கும் முன்பு மூன்று விடயங்களை கருத்தில் கொண்டால் போதும்.

1. ஏற்கனவே அந்த சொல் தமிழில் இருக்கிறதா?
2. தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றதாக உள்ளதா?
3. அர்த்தத்துடன் எளிமையாக இருக்கிறாதா?

TRAIN என்ற சொல்லை தமிழில் புகைவண்டி, தொடர்வண்டி என மொழியாக்கம் செய்யும்போது தான் அங்கு அதன் எளிமை குறைக்கப்படுகிறது. ரயில் என்றே மொழியாக்கம் செய்யலாம். அதே போல தான் காப்பியை குழம்பி என மொழியாக்கம் செய்வது அபத்தமாக இருக்கிறது.

ரயில் கண்டுபிடிக்கு முன்னர் தமிழில் டிரையின் என்ற வார்த்தையே இல்லை. அது தமிழுக்கு புது சொல் அதை தமிழாக்கம் செய்யும்போது தமிழ் உச்சரிப்புக்கு கட்டுப்படுகிறதா என்று மட்டும் பார்த்தால் போதும் ரயில் வண்டி என்றே சொல்லலாம். ஆதே நேரத்தில் ATOM என்பதை தமிழாக்கம் செய்யும் போது நாம் ஏற்கனவே தமிழில் உளள் அணு என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. காப்பியும் நாம் ஏற்கனவே பயன்படுத்தியுள்ள சொல்தான்.

பஸ் என்ற சொல் தமிழ் உச்சரிப்புக்கு உகந்தது அல்ல. இதை பசு என மாற்றினால் பசுமாடாக அர்த்தப்படுகிறது. இதற்கு தமிழ் உச்சரிப்புக்கு பொருந்திய சொல்லாக பேருந்து என மொழியாக்கம் செய்துள்ளோம். ஆரம்பத்தில் இது ஏளனமாக கருதப்பட்டது. இன்றோ அனைவரும் பயன்படுத்தும் எளிய சொல்லாகி விட்டது.

இன்று ஒவ்வொரு பல்கலைகழகமும் ஒவ்வொரு அகராதியை வைத்திருப்பதால் தான் தனித்தமிழே ஒரு அகாரதி பிடித்த அரசியலாகிவிட்டது. உலகம் முழுவதும் யுனிக்கோடு என்ற கோட்பாட்டில் பொது தமிழ் எழுத்துரு கொணடுவந்து நாமெல்லாம் இணைந்திருக்கிறோம். அதே வழிமுறையில் உலகம் முழுவதும் ஒரு பொது கலைசொல் அகராதியை கொண்டுவரமுடியாத என்ன?

தமிழில் மேற்கத்திய அறிவியல் கற்பிக்க முற்பட்ட ஆரம்பகாலங்களில் பௌதீகம், ரசாயனம், கணித சாத்திரம், அடிப்படை ராசிகள், என்றெல்லாம் வடமொழி கலப்போடு எழுதினார்கள். இன்றோ இயற்பியல், வேதியல், கணிதம், அடிப்படை அளவீடுகள் என எளிமையான தமிழ்சொற்களாக்கப்பட்டுள்ளன. இது போல எளிமைபடுத்தப்பட்ட அறிவியல் சொற்களை ஒரு பொது அகராதியில் கொண்டு வரவேண்டும்.

தமிழில் இல்லாத புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாம் தான் தமிழில் பெயர்சூட்டியாக வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் ஆளுக்கு ஒரு பெயர்சூட்டி அரசியல் செய்வதால் தான், தமிழில் அறிவியல் சொற்கள் கடினமானதாகிறது. பயன்படுத்தவும் முடிவதில்லை.

உலகம் முமுவதும் உள்ள தமிழரிஞர்கள் ஒன்றிணைந்து உலகாளாவிய பொது கலைச்சொற்களை தொகுக்க வேண்டும். அதை உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஏற்று பயனபடுத்த முன்வர வேண்டும். யுனிக்கோடு எழுத்துருவை பயன்படுத்தும் நாம் சொற்களை மட்டும் பயன்படுத்த மறுப்போமா? என்ன?

தனித்தமிழ் என்றால் கொடுந்தமிழ் என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இன்று மலையாளிகள் டீயை சாயா என்று தான் உலகம் முழுவதும் சொல்கிறார்கள். நாம் தான் டீயை எப்படி தேனீர் என்று சொல்வது என தாழ்வுமனப்பான்மை கொண்டுள்ளோம். பயன்படுத்த பயன்படுத்த எல்லாம் எளிமையும் இனிமையுமாகிவிடும்.

தமிழர்களே தனித்தமிழின் அவசியத்தை உடனடியாக உணருங்கள். உலகின் மிகப்பழமையான மொழிகளில் இருந்த அரிய இலக்கியங்கள் எல்லாம் அம்மொழிகளின் அழிவால் அழிந்து திரிந்துவிட்டன. தமிழ் மொழியில் உள்ள திருக்குறள் என்ற அரிய சொத்துக்காகவாவது நாம் தனித்தமிழை காத்தாக வேண்டும். இல்லாவிட்டால் திருக்குறளும் எதிர்காலத்தில் திரிக்கப்பட்டுவிடும்.

வலைப்பதிவு என்பது பொழுதுபோக்குக்காகவும், அரட்டை அடிப்பதற்காகவும் மட்டும் பயன்படுத்தக்கூடியது அல்ல. வலைப்பதிவர்களால் பல புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நாம் ஏன் உலகெங்கும் ஒரு பொது தமிழ்கலைச்சொல் அகராதியை படைத்து பயன்படுத்தக்கூடாது? அந்த முயற்சிக்கு வலைபதிவர்கள் துவக்கமிட முடியாதா என்ன?

தமிழ் வலைப்பதிவுலகில் ஏராளமான மூத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள், இளைஞர்- இளைஞிகள் இருக்கிறார்கள். நாமெல்லாம் இணைந்து முயற்சித்தால் நிச்சயம் உலகளவில் ஒரு பொது கலைச்சொல் அகராதியை படைக்க முடியும். இந்த முயற்சிக்கு முதற்கட்டமாக ஆலோசனைகளை சொல்லுங்கள். அதை எப்படி செயல்படுத்துவது என விரிவாக விவாதியுங்கள். அதற்கு என தனியாக பொது வலைப்பதிவை ஆரம்பிக்கலாமா? விக்கிபீடியா போன்ற பொது வலைதளத்தில் படைக்கலாமா? அல்லது தனியாக ஒரு இணையதளமே அமைக்கலாமா? ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதற்கு முன்னர் யாரேனும் இதுபோன்ற முயற்சிகள் எடுத்திருந்தால் தெரியப்படுத்துங்கள்.

நான் தமிழ்நாட்டில் பத்திரிக்கை துறையில் இருப்பதால் என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய முடியும். இது சம்மந்தமாக கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களிடம் ஆலோசனைகள் கேட்டுள்ளேன். நாம் படைக்கும் பொது சொல் அகராதியை பள்ளி கல்லூரி பாடபுத்தகங்களிலும், தமிழின் அனைத்து பத்திரிக்கை, செய்தி, தகவல் தொடர்பு நிறுவனங்களிலும் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.

நான் திரும்ப திரும்ப வலியுருத்த விரும்புவது இது தான். யுனிக்கோடு என்ற பொது எழுத்துருவை இன்று னைத்து தமிழர்களும், செய்தி, தகவல் தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்தும் போது ஒரு பொது கலைச்சொல் அகராதியை பயன்பாட்டுககு கொண்டு வரமுடியாதா என்ன?

ஏரத்தாழ மரண நிலைக்கே சென்றுவிட்ட ஒரு மொழியை இந்திய அரசு கோடிகள் செலவிட்டு செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்றும் போது, அகில உலக மொழியாக இணையத்தில் கம்பீரமாய் வலம்வரும் தமிழை பூச்சூடி புத்தாடையணிவித்து புதுப்பெண்ணாய் அலங்கரிக்கமுடியாத என்ன?

Read more...

இன்னும் சமசுகிருதத்தின் மீது வெறுப்பேற்றாதீர்கள்

Sunday, October 12, 2008

ஒரு நாட்டுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுபவர்கள் தீவிரவாதிகள் என்றால், ஒரு மொழிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்களை என்னவென்று சொல்வது?

சமீபத்தில் சில வலைப்பதிவுகளில் தமிழ் எழுத்துக்களில் சிலவற்றை சேர்ப்பது விலக்குவது குறித்த விவாதங்களை காண முடிந்தது. அந்த பதிவர்களின் ஒருசார் கருத்துக்கள் எனக்குள் கொதிப்பை மட்டுமல்ல சமசுகிருதத்தின் பால் இன்னும் வெறுப்பையும் கூட்டியது.

அந்த பதிவர் தமிழில் உச்சரிப்புக்கு எழுத்துபோதாது என்று சமசுகிருத ஆதிக்கம் நிறைந்த பல கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்த்து அதித்தமிழ் என புதுத்தமிழ் படைப்பதாக சொல்கிறார். அதுதான் அவருக்கு வசதியாக படுகிறதாம்.

அந்த பதிவருக்கு மட்டுமல்ல அவரை போலவே எதற்கெடுத்தாலும் சமசுகிருதத்திற்கும் ஆங்கிலத்திற்கும் வரிந்து கட்டும் சில பிரபல எழுத்தாளர்களுக்குமான கண்டிப்பும், ஏமாளி தமிழர்களுக்கான எச்சரிக்கையும் தான் இந்த பதிவு.

தமிழுக்கும், பிற மொழிகளுக்கும் உள்ள சிறப்பு வேறுபாடே எழுத்துஅமைப்பும், உச்சரிப்பு நடையும் தான.

உச்சரிப்பு என்பது வெவ்வேறு மொழியினருக்கு மட்டுமல்ல, ஒரே மொழினருக்கு கூட வேறுபடும். அத்துனை ஏன் ஒரு மனிதனுக்கே குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பும், வெயில்காலத்திலும் வேறு உச்சரிப்பும் வரும். கனேசன் என்ற சொல்லை குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பிலும், வெயில் காலத்தில் ஒரு உச்சரிப்பிலும் சொல்வோம்.

அதற்காக குளிர்காலத்தில் க என்பதற்கு ka.. என்றும் வெயில்காலத்தில் ga.. இடைபட்ட காலத்தில் ca.. என்றும் எழுத்துக்கள் கேட்பது மொழி பண்பாட்டுக்கு அழகு அல்ல.

ஒவ்வொரு உச்சரிப்புக்கும் ஒவ்வொரு எழுத்து கொடுத்தால் எந்த மொழிக்கும் எழுத்துக்கள் போதாது. எழுத்துக்கு ஏற்ப உச்சரிப்பு தான் பண்பட்ட மொழியே தவிர, உச்சரிப்புக்கு ஏற்ப எழுத்தை ஏற்பது பண்பட்ட மொழி அல்ல.

தமிழ் என்பது ஒரு பழமையான மொழி அதேநேரத்தில் பண்பட்ட மொழி. இதற்கு மிகச்சிறந்த ஆதாரமாக தமிழ் எழுத்துக்களே திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் இருந்து தமிழ் எழுத்துஅமைப்பு தனித்து நிற்கிறது. பிறமொழி எழுத்துக்களை சேர்த்து தான் வாழவேண்டும் என்ற நிலை தமிழுக்கு இல்லை.

தமிழ் தவிர இந்தியாவின் மற்ற மொழிகளின் எழுத்துநடைகள் எல்லாமே உச்சரிப்புக்கு ஏற்ப எழுத்துக்களை சுமந்துகொண்டிருக்கும். தமிழ் அப்படி அல்ல. எழுத்தை ஒட்டியே உச்சரிப்புகளையும் அமைத்துக்கொண்டது. இதற்காக தான் தமிழை இயல் இசை நாடகம் என தனித்தனியே பிரித்துள்ளார்கள்.

திருநெல்வேலி தமிழும், கோவை தமிழும், சென்னை தமிழும், ஈழத் தமிழும். சிங்கை தமிழும் இன்னும் உலகெங்கும் ஓங்காரமாய் ஒலிக்கும் ஒவ்வொரு தமிழும் மேற்சொன்ன இயல் இசை நாடகத்தில் ஒன்றிணைந்துவிடும்.

ஒரு மொழியினர் மற்ற மொழியினரோடு தொடர்பு கொள்ளும்போது இருமொழியிலும் சொற்கள், உச்சரிப்புகள் கலப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்மொழியில் வந்து கலக்கும் பிறமொழிகளின் சொற்களையும் உச்சரிப்பையும் எப்படி ஒலிபெயர்ப்பு செய்யவேண்டும் என தொல்காப்பியர் காலத்திலேயே தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்பட்டு விட்டது.

பிறமொழி சொற்களையோ எழுத்துக்களையோ தாங்கிதான் தமிழ் வளரவேண்டும் அல்லது வாழவேண்டும் என்ற நிர்பந்தம் தமிழுக்கு கிடையாது. பிறமொழி ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் தனித்தமிழை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு இன்றும் தமிழ் தன் இயல்பு மாறாமல் மிளிர்கிறது.

வடமொழியோடு ஒன்றிப்போவதை நாகரீகமாக நினைத்த சமுதாய போக்கால் தான், இன்று மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற திராவிட மொழிகளில் வடமொழி ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழிடம் வடமொழி ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை.

இன்று உலக அரங்கில் மிகபிரபலமாக பரவலாக பேசப்படும் ஆங்கில மொழி கூட தமிழோடு சேரும்போது தான் பண்படுவதாக ஆங்கில மொழியினரே ஒப்புககொள்கின்றனர்.

எதிர்காலத்தில் தட்டச்சுக்கு மாற்றாக பேசுவதை புரிந்துகொள்ளும் அதிவேக கணிணி பயன்பாட்டுக்கு எம்மொழி சிறந்தது என்ற ஆய்வில் தமிழுக்கே முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் தமிழில் ஒருசார் உச்சரிப்புகளுக்கு ஒரு எழுத்து என்ற எளிமை தான்.

தமிழில் மிக எளிமையான தெளிவான எழுத்துநடை, உச்சரிப்பு நடை இருக்கிறது. ஆங்கிலம் கூட தமிழ் உச்சரிப்பில் பேசப்படும்போது தான் கணிணி பயன்பாட்டுக்கு ஒத்துவருவதாக கணிணியியல் விஞ்ஞானிகளே குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலேயர் பேசும் ஆங்கிலத்தை கணிணி புரிந்துகொள்வதில்லை. ஆனால் தமிழர்பேசும் ஆங்கிலத்தை கணிணி வெகுவிரைவாக புரிந்துகொள்வது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதற்கு காரணம் வலவலா கொள கொளா என இல்லாமல் தமிழில் இருக்கும் தனித்தனி எழுத்து உச்சரிப்பு நடை தான்.

உதாரணமாக:  flower., flour  என்ற சொற்களை ஆங்கிலேயர்கள் பிளார் என்று சொல்வார்கள். தமிழரோ தமிழில் எழுத்துகூட்டி படிப்பதை போலவே பி ள வ ர் என்றும் பி ளா ர் என்றும் உச்சரிப்பார்கள். இங்கு கணிணி ஆங்கிலேயர் உச்சரிப்பில் குழப்பமடைகிறது. தமிழ் உச்சரிப்பில் எழுத்துக்களையும் சொல்லையும் சரியாக புரிந்து கொள்கிறது.

இப்படிப்பட்ட சிறப்பு பெற்ற தமிழில் எழுத்துக்கள், உச்சரிப்புகள் போதாது என கூறிக்கொண்டு இல்லாத பிற எழுத்துக்களை சேர்த்து தமிழின் எளிமையையும் இனிமையையும் கெடுத்துவிடாதீர்கள்.

பிரபல தமிழ் வார இதழ்களில் வாசகர் கேள்வி பதில் சொல்லும் சில எழுத்தாளர்கள் எதற்கெடுத்தாலும் இந்த தமிழ் சொல்லினுடைய வேர் சமசுகிருதத்துடையது. இந்த தமிழ் சொல் சமசுகிருதத்தில் இருந்து வந்தது. என தூய தமிழ்சொற்களை கூட சமசுகிருத சொறகளாக குறிப்பிடுகிறார்கள். அதே போல தான் தமிழில் இருந்து வடமொழி எழுத்துக்களை நீக்கக்கூடாது என துள்ளுகிறார்கள்.

இவர்களது துள்ளலை பார்க்கும் போது தான் சமசுகிருத மொழியையே வெறுத்து தனித்தமிழ் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.

தெரியாமல் கேட்கிறேன். தமிழில் இருந்து வடமொழி சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கவேண்டும் என்றால் சமசுகிருதவாதிகளுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது? நாங்கள் என்ன சமசுகிருதத்தில் தமிழ் எழுத்துக்களை சேர்க்கவா சொல்கிறோம்? உங்கள் மொழியை காப்பாற்ற தமிழனின் முதுகுதான் கிடைத்ததா? ஏன் தனியாக நடக்க திறன் இல்லாத முடத்தன மொழியா சமசுகிருதம்?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியும், கரையான் அரித்துக்கொண்டிருந்த தமிழ் ஓலைசுவடிகளை எல்லாம் மீட்டு தந்த வ.வே.சு ஐயரும்., சமசுகிருதத்தின் கடுமையை நேரடியாக விமர்சித்த விவேகானந்தரும் சமசுகிருதம் தெரியாதவர்கள் அல்ல என்பது ஏன் துக்கடா எழுத்தாளர்களுக்கு புரிவதில்லை.

பலநூற்றாண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் தனித்தமிழுக்கு மிகச்சரியான இலக்கணத்தை வகுத்துத்தந்திருக்கிறார். ஆனாலும் இன்றுவரையும் வடமொழி எழுத்துக்களை தமிழோடு இழுத்துவரும் தமிழர்களின் ஏமாளி தனத்தை என்னவென்று சொல்வது.

வடமொழி எழுத்துக்கள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என பயன்படுத்திவந்த நான் கூட, சமசுகிருதபிடிவாதிகளின கருத்துக்களை படித்த பின்புதான் தனிந்தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கே வந்திருக்கிறேன்.

போலி சமசுகிருதவாதிகளே சமசுகிருதத்தை வளர்ப்பதாக எண்ணி இன்னும் அதை குழிதோண்டி புதைக்காதீர்கள். ஒரு மொழி அழிவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தனித்தமிழுக்காக எடுக்கும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சிக்கும் இனி நானும் துணைநிற்பேன்.

Read more...

தமிழர்களே.. தமிழர்களே.. ஏமாளி தமிழர்களே...

Friday, October 10, 2008

சமீபத்தில் மலையாளத்தானுக, ஓணம் வாழ்த்துக்கள்( மலையாளிகள் படிக்க வேண்டாம்), போன்ற தமிழர்களின் புலம்பல் பதிவுகளையும், ஓரு வார இதழில் மலையாளர்களின் குணங்களை பற்றிய கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. அதன் பின்னர் என் எண்ணங்களை எழுதாமல் இருக்க முடியவில்லை. இந்த எண்ணத்தில் எவ்வளவுதூரம் உண்மை இருக்கிறது என தமிழர்கள் நடுநிலையோடு பதிலளியுங்கள்

மலையாளிகள் மட்டுமல் மற்ற எல்லா மொழியினரும் தமிழனை இழிவாகதான் பேசுவார்கள். ஏன் தமிழர்களாகிய நாம் கூட மற்ற மொழியினரை விட நாம் தான் சிறந்தவர்கள் என்று பேசுவதில்லையா? நாம் தான் சிறந்தவர்கள் என மறைமுகமாக நாம் பிறரை இகழ்கிறோம். அவர்கள் எங்களை தவிர எல்லோரும் இழிவானவர்கள் என நேரடியாக இகழ்ந்துகொள்கிறார்கள். அவ்வளவு தான் வேறுபாடு.

சரி நான் சொல்லவந்த உண்மை இது தான். இதை தமிழர்கள் வாதபிடிவாதத்திற்காக ஏற்க மறுத்தாலும் முழுமுதல் வரலாற்று உண்மை இது தான்.

தமிழர்கள் தங்களுக்குள் முதன்மையானவானக ஒரு தமிழனோ, நிறுவனமோ வர முயற்சித்தால் விடமாட்டார்கள். ஆயிரம் குறை சொல்வார்கள். அந்த சமயம் பார்த்து வேறுமொழி நபரோ அல்லது துக்கடா நிறுவனமோ நுழைந்தால் உடனே அதை உலகமாக அதிசயமாக போற்றி தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். அந்த வேற்றுமொழி நபர் அல்லது நிறுவனம் தான் சிறந்தது என விழாவைத்து கொண்டாடுவார்கள். இதை சரியாக பயன்படுத்தும் அந்த நபர் அல்லது நிறுவனம் குறுகிய காலத்திலேயே தமிழர்களின் தலைசிறந்த நபர் அல்லது நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வந்துவிடும். அதன் பின்னர் தான் அந்த நிறுவனம் தமிழர்களுக்கு எதிராக தன் வேலையை காண்பிக்கும். அப்போது குதிப்பார்கள் தமிழர்கள் எங்களை அடக்குகிறார்கள், இழிவாக்குகிறார்கள். ஏமாற்றுகிறார்கள் என.

இதற்கு சமீபத்திய ஆதாரங்கள் பல இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் தமிழர்களின் தலைசிறந்த செய்திநிறுவனங்களுக்கு இடையில் ஒரு மளையாள, இந்தி செய்தி நிறுவனம் வந்ததும் அதை தான் தமிழ்ர்கள் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். நாளைக்கு தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல்கொடுப்பது வேற்று நிறுவனங்கள் அல்ல தமிழர் நிறுவனங்கள் தான் என தமிழர்களுக்கு புரிவதில்லை ஏன்? அடுத்து தமிழகத்தில் இல்லாத உணவுமுறைகளா, பேக்கரிகளா? ஆனால் அதே ஊரில் ஒரு கேரள பேக்கரி வரட்டும். நம்மவர்கள் அனைவரும் வரிந்து கட்டி அதை பிரபலமாக்குவார்கள். அதோடு நிற்பார்களா? காலாகாலமாக வைத்திருக்கும் தமிழர் கடைகளை எந்த அளவுக்கு இழிவுபடுத்தவேண்டுமோ அநத அளவுக்கு செய்வார்கள். காலங்கள் ஓட அதே கேரளா பேக்கரி சுடுதண்ணீரில் சக்கரை போட்டு கொடுத்தாலும் வாயை பொத்திக்கொண்டு குடித்துவிட்டு வருவார்கள் தமிழர்கள். இது உதாரணத்துக்காக இரண்டு எடுத்துக்காட்டுகள் இதுபோல வரலாற்றில் சமஸ்கிருத அதிக்கம், வேற்று இனத்தவரின் கையாடல் உட்பட தமிழர்களின் இழிவுக்கு ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் இருக்கிறது.

இங்கு தமிழர்களை இழிவாக சொல்லவில்லை. வந்தோரை வாழவைப்பது நமது பெருந்தன்மையாக இருக்கலாம். அதற்காக வருபவர்கள் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கும் நம்மில் ஒருவனை அழிக்கும்போது நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? இந்த கேவலமான புத்தி தமிழ்ர்கள் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

தமிழர்களே அவரவருக்கு அவரவர் குணாதிசயங்கள் நியாயதர்மமாக படும். எனவே நீங்களாகவே அடிமைகளாகிவிட்டு பின்னர் அவன் என்னை இப்படி இகழ்கிறான் இப்படி ஏமாற்றுகிறான் என நீங்கள் புலம்புவதை பார்த்து உலகே சிரிக்கிறது.

தமிழ்ர்களே உங்களை நீங்கள் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். உங்களை நீங்களே அடிமைகளாகவும் ஏமாளிகளாகவும் சித்தரித்திருக்கும் காலம் மட்டும் வடமொழி ஆதிக்கம், மலையாளத்தவரின் இழிவுபடுத்தல், கன்னடர்களின் அடி, சிங்களர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இப்படி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Read more...

காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை - 16)

Wednesday, October 8, 2008

கட்டுரை தொடரை படிக்க கீழே சொடுக்குங்கள். அறிவகத்தில் தமிழ்மணம் கருவிபட்டை வேலை செய்யாததால் இந்த ஏற்பாடு. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை - 16)

Read more...

அறிவும் மாயையும் (உலகின் அவசரத்தேவை - 15)

Friday, October 3, 2008

கட்டுரை தொடரை படிக்க கீழே சொடுக்குங்கள். அறிவகத்தில் தமிழ்மணம் கருவிபட்டை வேலை செய்யாததால் இந்த ஏற்பாடு. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

அறிவும் மாயையும் (உலகின் அவசரத்தேவை - 15)

Read more...

காதல் ரிங்காரம் - கவிதை (நான் யார் என்பதன் தேடல்-5)

Thursday, October 2, 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக...

(முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)

முந்தைய பாகங்கள் செல்ல இங்கு சொடுக்குங்கள்

வாழ்க்கை வலி(1).
மனவலி மரணவலி(2).
ஆன்மவலி(3).
கடவுளின் விலை(4)

காதல் ரிங்காரம் ( நான் யார் தேடல் - 5)

வாழ்க்கையை தொலைத்தவளை
வாழ அழைத்தது காதல்

எனக்குள் வலி ஆற்ற் வந்த
அற்ப சொற்ப விடயங்களுள்
காதலும் ஒன்று- கூடவே
ஒன்றாய் நன்றாய்

காதலின் முழுமை - இது
பங்கிடாத பாசம்

பங்கிடா பாசமாய்
எனக்குள் படர்ந்தார்
என்னவர்

காதல் - இந்த முதல் சுடரே
என் முழுமுதல் விளக்கானது

என்னவரில் காண துடித்தேன்
என்னையும் கடவுளையும்

உணர்ச்சிகள் உசும்ப
உயிரை குடிக்கும்
காதல் ரிங்காரம்
வலிகளின் வானவில்

விட்டிலாய் சுற்றும் விடலையை
விட்டுவைக்குமா
வீரியம் பூத்த ஆண்மை

வசப்பட்டது
என் உணர்ச்சிகள் மட்டுமல்ல
நானும்

ஆண்வாச பேரின்பத்தில்
பொங்கியது நான் மட்டுமல்ல
என் உணர்ச்சிகளும்

ஆண்மைக்குள் பூரித்துபோன
எனக்குள் புரிந்தது புதிய ஞானம்

பகிர்ந்தாகவேண்டியது
என் உடலை மட்டுமல்ல
உணர்ச்சிகளையும்

உணர்ச்சியை முடக்கி
உடலை மட்டும் பகிர்ந்தால்
அது பாவம்

உடலை முடக்கி
உணர்ச்சியை மட்டும் பகிர்ந்தால்
அது ஏமாற்று

என்ன செய்வேன்-என்னில்
பாதியை கேட்கிறது ஆண்மை
எனக்குள் இருப்பதே பாதி

பாதியையும் பகிர்ந்து விட்டால்
பற்றுபிடிவாதி நான் எங்கே?

முழுவதையும் பகிரத்தான்
முதலிரவாம்

முத்த மழையில் நனைந்தவளுக்கு
முச்சு பிடிக்க முடியவில்லை

என்னில் இருபாதி - அதில்
ஒருபாதி பகிரதயாரானது
பகரமாய் மறுபாதியும்
சேர்ந்தே பகிர்ந்தது

அந்த பகிர்வில்
அன்பின் அர்த்தங்களை
அசைபோடலானேன்

நான் என் உணர்ச்சிகள்
எப்போதும் பிரிக்கமுடியா சார்புகள்

நான்- இதன் வெளிப்பாடே
என் உணர்ச்சிகள்
என் உணர்ச்சிகள் - இதன்
உட்கருவே நான்

நானின்றி - என்
உணர்ச்சிகள் இல்லை. - என்
உணர்ச்சிகள் இன்றி நானில்லை.

நான் தனின் அறிமுக நுட்பங்களே
என் உணர்ச்சிகள்

உணர்ச்சிகளின் வெளிபாடே
கனவு, நினைவு, நிகழ்வு

கனவே ஆன்மீகம்
நினைவே அறிவியல்
நிகழ்வே அரசியல்

ஆன்மீகம், அறிவியல்
அரசியல்-மூன்றின்
முறையான முடிச்சே வாழ்க்கை.

அவிழ்க்க அவிழ்க்க வலிக்கும்
அது தான் வாழ்க்கை.

அறிந்தவள் அணைத்தேன்
என்னவரை அதற்கப்பாலும் அறிய

அவிழ்ந்தது
என் வலி முடிச்சுகள் மட்டுமல்ல
அறிவின் கருவறை கட்டும்.

தொடர்ச்சி அடுத்த இறுதி பதிப்பில்:- ஞானம் பிறந்தது (நான் யார் தேடல் - இறுதி)

கவிதை விளக்கம்: ஏங்கிய பாசங்கள் கிடைக்காமல் தற்கொலை வரை சென்று மீண்டவள் வாழ்க்கை என்பது என்ன? கடவுள் யார்? மரணத்துக்கு பின் என்ன சம்பவிக்கிறது என தீவிர ஆராய்ச்சிகள் செய்பவளானேன். தியானம் தவம் மதங்கள் அறிவியல், ஆன்மீகம் தத்துவம் என எதிலுமே எனக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. மீண்டும் வாழ்க்கையை வெறுத்த சமயத்தில் எனுக்குள் காதல் மலர்ந்தது. காதலில் கொஞ்சம் அன்பை ருசித்தவள், திருமணத்தையும் ஏற்றுக்கொண்டேன்.

என் கணவரோடு அன்பை பகிர தாயரானபோது எனக்குள் பல விடயங்கள் தெளிவுபெற்றது. ஆண் பெண் பரஸ்பர பகிர்வில் தான பிரபஞ்சமே படைக்கப்பட்டிருக்கிறது. நான் முழுமையானவள் அல்ல. நான் ஒரு பாதி. என்னில் பாதி என் கணவரிடம் இருக்கிறது.

 அதாவது எந்த பெண்ணுக்குள்ளும் பாதி ஆண்மை, பாதி பெண்மை இருக்கும். அதே போல எந்த ஆணுக்குள்ளும் பாதி பெண்மை, பாதி ஆண்மை இருக்கும். ஒருவரின் உடலுள் படிந்துள்ள ஆண்மை/பெண்மை மற்றொரு உடலில் உள்ள பெண்மை/ஆண்மையுடன் இணைந்தால தான் முழுமையாகும். அந்த முழுமை தான் முழுமையான பெண்மையும்/ஆண்மையும். அந்த முழுமையில் தான் பிரபஞ்ச இயக்க ரகசியங்கள், மறுபிறவி, கடவுள் தத்துவமும் என அனைத்தும் அடங்கிக்கிடக்கிறது.

ஒருவருக்குள் இருக்கும் தான் என்ற உணர்ச்சிகள் எல்லாம் பாதிஉணர்ச்சிகள் மட்டுமே. மறுபாதி இந்த பிரபஞ்சத்தோடு ஐக்கியப்படுகிறது. பாதி மறுபாதி உணர்ச்சிகளின் முடிச்சு(இணைப்பு) தான் வாழ்க்கை.

 பாதிமறுபாதி உணர்ச்சிகள் பிற உடல் அல்லது உபகரணம் இல்லாமல் நமக்குள்ளேயே இணைக்க செய்வது கனவு(ஆன்மீகமும்).பிற உடல்/உபகரணத்துடன் இணைத்துக்கொள்வது நினைவு(அறிவியல்). ஆன்மீகம் அறிவியல் இவற்றின் நடைமுறை தான் நிகழ்வு(அரசியல்). கனவு நினைவு நிகழ்வு இம்மூன்றின் முறையான முடிச்சு தான் வாழ்க்கை. முடிச்சு எங்கெல்லாம் அவிழ்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் நமக்கு வலி வருகிறது. எங்கெல்லாம் கட்டப்படுகிறதோ அங்கெல்லாம் இன்பம் வருகிறது.

இப்படி வாழ்க்கை ஞானம் புரிந்தவளுக்கு அடுத்து ஒரு இன்பஞானம்(ஞானிகள் சொன்ன பேரின்பம்) எளிதில் வசப்பட்டது. அந்த முழுமுதல் ஞானம் அடுத்த இறுதி பதிப்பில்...

Read more...

கடவுளின் விலை - கவிதை (நான் யார் என்பதன் தேடல்-4)

Thursday, September 25, 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக...

(முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும் முந்தைய பாகங்கள் செல்ல இங்கு சொடுக்குங்கள்)

வாழ்க்கை வலி(1).
மனவலி மரணவலி(2).
ஆன்மவலி(3).

கடவுளின் விலை - (நான் யார் தேடல் - 4)

நான் யார்?

எல்லா ஞானிகளும்
யோசித்த அதே யோசனை

தான் தான்
எல்லா மனங்களும்
சொல்லிக்கொண்ட அதே சொல்

எனக்குமேல்
எல்லா மனிதர்களும்
உணர்ந்து கொண்ட அதே உணர்ச்சி

நான்யார்? -என்
உடல் மன ஆன்ம வலிகளின்
உச்ச கேள்வி

புலன் தாண்டி
புறப்பொருள் கூடி
தேடிய அறிவியல்

புலன் அடக்கி
உள்மன உட்கருவில்
உணரத்துடித்த ஆன்மீகம்

புலன் மனம் கோர்த்து
பொருள் கருத்தை
பொருத்திப்பார்த்த தத்துவம்

அறிவியல் ஆன்மீகம் தத்துவம்
மூன்றிலும் தேடினேன்
நான்யார்? கடவுள் யார்?

தெரியாது
தெரிந்து கொள்ளலாம்
அலுத்தது அறிவியல்

உனக்குள் இருக்கிறான்
உணரச்சொன்னது ஆன்மீகம்

நீதான் இறைவன்
அறிவை விளக்கி விவரித்தது தத்துவம்

மூன்றும் சொன்னவையோ
விடைகள்
எனக்குள் விடைகளே
வினாக்களாக

தெரியாது எனில்
அறிவியல் தெரிந்தது
எல்லாம் என்ன?

நான் தான் எனில்
நான் ஏன் தேடுகிறேன் இறைவனை

வினாக்களுக்கு விடைகேட்டேன்
உள்ளுக்குள் உள்ள
அத்தனை வலிகளையும்
ஒருங்கே கோர்த்து

வலி ஆற்ற
வியாபார உலகில்
விற்பனையில் கடவுள்கள்
விதவித கடவுள்கள்

விலைகொடுத்தால்
விரும்பியதை வாங்கிக்கொள்ளலாம்
பணம் அல்லது பற்று - இது தான்
கடவுளின் விலை

விலை தந்து தான்
வாங்க வேண்டுமா
என்னையும் கடவுளையும்
உச்சத்தில் வலித்தது மனம்

கடவுளுக்காக
பற்றை விலை கொடுத்தால்
எப்படி தெரிவேன் நான் யார்? என்பதனை

கடவுள் யார்? நான் யார்?
எது எந்தன் முதன்மை வலி

நானா?, கடவுளா?
யார் முந்தியவர்
முதலில் தேடுவது
யாரை?

கடவுளை தேடிப்போய்
நான் தொலைந்தாலோ

நானை உணரப்போய்
கடவுள் மறைந்தாலோ

எனக்குள் கடவுளை விட
நான் தான் முதன்மை வலி

நான் யார்
விடைதெரியாது விட்டிலாய் திறிந்தவளுக்கு
விளக்காய் ஒரு சுடர்

அந்த சுடர்.....?

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்:- காதல்(காம) ரீங்காரம் -நான் யார் தேடல் -5

கவிதை விளக்கம்: தியானம் தவம் இவற்றில் மூழ்கி முக்தியடைந்து வெறுத்து மீண்டுவந்தவள், அறிவியல் ரீதியாக ஆராய்ச்சிகள் செய்தேன். அறிவியலில் எங்குமே என்னையும் கடவுளையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. கிறிஸ்துவம், இந்துத்துவம் இஸ்லாமியம், புத்தம் என எல்லா மதங்களையும் கற்று அங்கும் தேடி பார்த்தேன் நான்யார்? கடவுள் யார்?

மதங்கள் என்னையும் கடவுளையும் அறிய விலை கேட்டது. அதாவது நிறைய பணம் தரவேண்டும். நாத்திகனாக இருந்தால் கூட பணத்தை அள்ளி வீசுபவரை மதங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளும். அல்லது பற்று அதாவது எல்லோரையும் கவரக்கூடிய பற்று, எல்லாவற்றிற்கும் அடிமையாககூடிய பற்று இந்த மூன்றும் தான் கடவுளின் விலை.

இன்று எல்லோரையும் வசியப்படுத்தும் கலையை பெற்ற சிலர், சாமியார்கள் என்ற பெயரில் நான் தான் கடவுள் என சொல்லிக்கொண்டு ஊரை, உலகை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அலை, இந்தயோகம், முக்திப் பயிற்சி என மனவசீகரம் என்ற பற்றில் மனதை அடிமையாகவே அடக்கிவிடுகிறார்கள். புதியதை சொல்லி தருவதாக சொல்லி பற்றை பகிரங்கமாக பிடுங்குகிறார்கள்.

பணக்காரியாக இருக்க வேண்டும், அல்லது பற்றுக்கு அடிமையாக இருக்கவேண்டும். இந்த இரண்டையுமே வெறுத்தவள் வெற்று வாழ்க்கையோடு மீண்டும் விடைதெரியாதவளானேன். ஆனால் விடை சொல்லித்தர என் வாழ்க்கையிலும் ஒரு பற்று திருப்புமுனையாக வந்தது. அந்த பற்று தெளிவாகவே வாழ்க்கை ஞானத்தை புரியவைத்தது.

அந்த திருப்புமுனை... அடுத்த பதிப்பில்....

Read more...

ஆன்மவலி - கவிதை (நான் யார் என்பதன் தேடல்-3)

Monday, September 15, 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக...

(முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)

முந்தைய பாகங்கள் செல்ல இங்கு சொடுக்குங்கள்

வாழ்க்கை வலி(1)
மனவலி மரணவலி(2)

ஆன்மவலி - (நான் யார் தேடல் - 3)

மறுபிறவி தேடல்
மனவலியை மிஞ்சிய
ஒரு மரணவலி

தவம், தியானம் மன ஒருமுகம்
ஒருங்கே கோர்த்தே
சிந்தனை சிறகை விரித்தேன்
சிவலோகம் எனும் பரலோகம் நொக்கி

பறக்க பறக்க முற்றியது பாசம்
பரவுலக வாழ்க்கைமீது

சிந்தனை சிறகடித்து
சுரந்திர சூட்சமங்களை சுவாசிக்கும் ஆர்வம்
வலி மாய்ந்தது போல ஒரு இன்பம்

பற்று பாவ
பங்கீட்டை தாண்டி
இனனும் பறந்தேன் வேகமாக
பரம்பொருள் ரகசியம் தேடி

எல்லை நெருங்கிவிட்ட ஆனந்தம்
கடவுளை நேருக்கு நேர் சந்திக்கும் பதட்டம்
கேள்விகளை ஒத்திகை
பார்த்துக்கொண்டேன் ஒருமுறைகூட

அந்தோ...
சுதந்திர சுற்றுகளை
சுருட்டி முடக்கிய மாயையினின்று
விட்டு பிரிந்ததில்
ஒடிந்தது என் சிந்தனை சிறகுகள்.

இங்கு கடவுளை தேடுவது ஒருபுறம்
முதலில் சிறகொடிந்த நான் எங்கே?

நானே இல்லை என்றால்
நான் எப்படி தேடுவது கடவுளை?

நானும் இல்லை கடவுளும் இல்லை
இனி எங்கே நேருக்குநேர் சந்திப்பு

ஒடிந்தது சிந்தனை சிறகுகள் மட்டுமா
என் பரம்பொருள் தேடலும்.

ஒன்றும் அறியாதவள்
எதையோ அறிந்தவளாய் மீண்டேன்
வாழ்க்கை வலிக்கே.

உடல்வலி, உள்ளவலி -இபபோது
எனக்குள் ஆன்ம வலியும்

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்

சென்று, கண்டவளுக்கு
விண்டுவதில் குழப்பம்
பெருஞ்சூனியத்தை எப்படி
பேரானந்தம் என்றார்கள்?

நான் போன இடம் தவறா
போன முறை தவறா - இல்லை
போகவே இல்லையா?

அழுது தீர்க்க உடல்வலி
புலம்பி தீர்க்க மனவலி
புதிராய் தவிக்க ஆன்ம வலியோ?

வலிகள் மட்டுமே வாழ்க்கையானால்
வழிவேண்டும் வாழ -அல்லது
வரலாறாய் மாழ

கேலியான நானே
கேள்வியானேன்

நான் யார்?

முடிவுறா வலியோடு
அழுதே முடித்தேன் முதல் சுற்றை.

முடிவிலும் எனக்குள் தொடங்கிய தேடல்

நான் யார்?

தொடர்ச்சிஅடுத்த பதிப்பில்:- நான்யார்? கடவுள் யார்? (நான் யார் தேடல் - 4)

கவிதை விளக்கம்: மரணவாசல் வரை சென்ற நான் மறுபிறவி பயத்தில் தியானம், பக்தி, தவம் என தீவிர ஆன்மீக பாதைக்குள் நுழைந்தேன். ஆன்மீக மகான்கள், மகரிஷிகள் தேடிய ஆன்ம ஞானத்தை நானும் தேடினேன். மனதை ஒருங்கு படுத்தி பற்று பாவங்களை விட்டு முக்திக்கு போனேன். முக்தியும் அடைந்தேன். ஆனால் அந்த முக்தியில் நான் அறிந்த ஆன்மஞானத்தை புரிந்துகொள்வதில் எனக்கு குழபபம்.

எல்லா ஆன்மீக ஞானிகளும், மகரிஷிகளும் ஆன்மீக ஞானத்தை பேரானந்தம் என்கிறார்கள். ஆனால் நான் அறிந்ததோ பெரும் சூன்யம்( ஒன்றுமேஇல்லை). அந்த பெரும் சூன்யத்தில் நானே தொலைந்துவிடுகிறேன். நானே தொலைந்துவிட்டால் நான் எப்படி கடவுளை பேட்டி எடுப்பது?. அதற்கு மேல் எல்லையும் இல்லை. பின் எஙகே செல்வது? பேரானந்தம் என சொன்ன ஆன்மீக ஞானிகளும் வந்த இறுதி எல்லை இதுவாகதான் இருக்கவேண்டும். ஏனெனில் இதற்குமேல் எல்லையே இல்லையே. ஒன்றுமில்லை என்றால் அதற்குமேல் என்ன இருக்கிறது.

ஒன்றுமே அறியாதவள் எதோ ஒன்றை அறிந்த புரிதலோடு மட்டும் பக்தி, தியானம், ஆன்மஞானத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வலிகள் நிறைந்த சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினேன். ஆனாலும் எனக்குள் மீண்டும் ஒரு புதுதேடல் முதலில் நான் யார் என்பதை தெரிந்துகொள்வோம். என நான் யார் என்பதை தேடும் பாதையில் பயணத்தை தொடங்கினேன்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் நான் யார் என்பதை தேடும் பயணங்கள்...

Read more...

கண்மூடித்தனமாக அறிவியலை நம்பலாமா? - எதார்த்தவாதிகளே உஷார்!

Sunday, September 14, 2008

கடவுள் துகள் உட்பட விபரீத ஆரய்ச்சிகளை வரவேற்கும் அறிவியல் விரும்பிகளுக்கும், உணமையை அறிந்துகொள்ள விரும்பும் எதார்த்தவாதிகளுக்கும் ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது? என்ற பதிவிற்கு திரு. கையேடு அவர்கள் அளித்த பின்னூட்ட கேள்விகளின் அடிப்படையில் சில விடயங்களை தெளிவுபடுத்துகிறோம்.

//காலசூழலை மெல்ல தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் உயிர்களுக்கு இருக்கிறது, மனிதனுக்கு இன்னும் இருக்கிறதா?//

அதை தான் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துவிட்டு, செயற்கை தகவமைப்புகளை உருவாக்கிக்கொண்டு இயற்கையோடு பலப்பரீட்சை பார்த்துக்கொண்டு இருக்கிறோமே.

இன்று எயிட்ஸ் நோய் தான் மனித குலத்துக்கு மிகப்பெரிய சவால். அந்த நோய்கிருமியை கூட தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் நாளடைவில் மனிதனுக்கு சாத்தியப்படலாம்.

// இது உங்கள் அனுமானமே, இவ்வனுமானத்துடன் விஞ்ஞானம் நிச்சயம் கைகட்டி உட்கார்ந்துவிடவில்லை.தொடர்ந்து அந்தப் பாதையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறது.//

// ஒருவேளை உங்கள் கூற்றுப் படி நிகழ வாய்ப்பிருந்தாலும், உயிர்களுக்கான தகவமைப்புகள் பெரும்பாலும் பல தலைமுறைகள் ஆகும்.//

இப்படி நோய்களுக்கான மருந்து கண்டுபிடிக்கும் அறிவியலின் உழைப்பை தேவையில்லை என்றோ வேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் புதிய கிருமிகளை உருவாக்கிப்பரப்பும் அறிவியலை தான் வேண்டாம் என்கிறோம்.

உதாரணமாக அமெரிக்காக உட்பட பல வல்லரசு நாடுகளில் இன்றுகூட நோய்கிருமி ஆயுத ஆராய்ச்சிகள்(விபரீத அறிவியல்) பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தொகையும் நோய்எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதற்கு உங்கள் கூற்றே சான்று. எல்லா நாடுகளும் ராணுவத்திற்கு அதிகம் பணம் ஒதுக்குவதாக நீஙக்ள் குறிப்பிடுவது.

// உங்கள் பார்வையில் பேராபத்து என்பதின் அளவென்ன?//

மனித உயிரையும், உயிரின சரித்திரத்தையும் பணையம் வைத்து ஆய்வுகள் செய்கிறார்களே அதை தான் பேராபத்து என்கிறோம். உதாரணமாக தற்போதைய கடவுள் துகள் ஆய்வு, அணுஆயுது ஆய்வு மற்றும் சேகரிப்பு, நோய்கிருமி ஆயுதங்கள் மற்றும் கண்டுபிடிப்பு சேகரிப்புகள், போன்றவை.

பேராபத்தின் அளவு என்ன என கேட்டால் மனிதனால் எதிர்கொள்ள முடியாத ஆபத்துகள் அனைத்துமே பேராபத்துகள் தான்.

//அனுபவித்த பேராபத்துக்களைப் பற்றி முன்கூட்டுயே அறிந்து கொண்டு மனித குலத்தைத் தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் நிச்சயமாக திறனுடையதே.//

இயற்கையான பேராபத்துக்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதிலிருந்து தப்பித்து ஓடவே இத்தனை காலம் பிடித்திருக்கிறது என்றால் இன்று அறிவியல் படைத்துவைத்துள்ள பேராபத்துகளை எப்படி எதிர்கொள்ள போகிறோம்? எங்கே தப்பித்து ஓடப்போகிறோம்?

உதாரணமாக முன்பெல்லாம் போர் என்றால் எல்லையில் ராணுவம் மட்டுமே மோதிக்கொள்ளும். நாம் நம்வீட்டில் பாதுகாப்பாக இருந்து நிதி உதவி மட்டும் செய்தால் போதும். ஆனால் அணுஆயுதம் மற்றும் கிருமிஆயுதம், பூமியில் சூரியனில் உள்ள அளவு போன்ற வெப்பத்தை ஏற்படுத்துதல்(இது இயலுமா என்பது சர்சசைக்கு உரியது. ஆனால் அதை சாதிக்கப்போகறேன் என்ற ஆய்வில் உயிரின சரித்திரமே முடிந்துவிட்டாலோ?) இப்படி பேராபத்துகள் வருகிறது என தெரிந்தால் எங்கே தப்பித்து ஓடுவீர்கள்? அதற்காக தான் நிலவில் பிளாட் வாங்கி வைத்திருக்கிறாகளா?

நாங்கள் வலியுருத்துவது இயற்கை சீற்றங்களுக்கு தற்காப்பு கண்டுபிடிப்பதை எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் கண்டுபிடிப்புகளே இயற்கையை மிஞ்சும் பேராபத்துகள் ஆகிவிடக்கூடாது. மேலும் அதற்காக பசிபட்டினியில் மனிதகுல்ம் உள்ள தற்போதைய நிலையில் பணத்தை வீணடிக்க கூடாது என்பது தான்.

// உலகெங்கிலும் இராணுவத்திற்காகச் செலவிடப்படும் பணம் பலமடங்கு அதிகம்.//

100 % உண்மை தான். இது குறித்து அறிவகம் கட்டுரை தொடரில் விரிவாக எழுதியுள்ளேன். இங்கு கவனிக்க வேண்டியது நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியில் பெருபாண்மை நிதி ராணுவ வீரர்களின் நலனுக்கோ, பயிற்சிக்கோ, மருத்துவம் சுகாதாரத்திற்கோ ஒதுக்கப்படுவது இல்லை. பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கும், அதை பதுக்கி பாதுகாத்து வைப்பதற்கும் தான் செலவிடப்படுகிறது. உடனே அரசியலை கேள்வி கேளுங்கள் என்காதீர்கள். இந்த கண்டுடிபிடிப்புகளை எல்லாம நிகழ்த்துவது அறிவியலாளர்கள் தானே.

இந்தியா உட்பட பல ஏழை நாடுகளில் ராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கும் இனனொரு மர்மத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். வேறு எந்த துறையில் இருந்தும் நிதியை கொள்ளையடித்தால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்றாவது ஒருநாள் பதில்சொல்லியே ஆகவேண்டும். ஆனால் ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்துவிடலாம். மக்கள் கோட்டால் ஒரே பதில் ராணுவ ரகசியம் வெளியில் சொன்னால் நாட்டிற்கு ஆபத்தாம்.

// பூவி வெடித்துவிடும் என்றால் அதற்குமேல் எதிர்கொள்ள ஒன்றுமேயில்லை. எதை? எங்கிருந்து எதிர்கொள்வது? :)

மேற்குலக விஞ்ஞானத்திற்கு தனது வளர்ச்சியின் திசையின் எல்லை எது எங்கு நிறுத்துவது என்ற குழப்பம் என்றால், இந்தியாவிற்கு தற்போது எந்ததிசையில் செல்வது என்பதிலேயே குழப்பம் இருக்கிறது //

மிக சரியாக அருமையாக சொல்லியுள்ளீர்கள். இங்கு தங்களுக்கு சாதகமான பதிலுக்கு மட்டும் பாராட்டுகிரீகள் என்ற எண்ணம் வரக்கூடாது. உண்மையை யார் எங்கு, எப்படி சொன்னாலும் ஏற்றுக்கொள்வது தான் அறிவுடமை. அதில் எதற்கு வாத பிடிவாதம் வேண்டும். வாதத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ஆனால் இறுதியில் உண்மையில் ஒன்றுபடுவது தான் அறிவுடமை. அந்த விடயத்தில் மேற்சொன்ன உங்கள் கருத்துண்மையுடன் நாங்கள் உடன்படுகிறோம்.

// அறிவியலை எதிர்ப்பதற்காக (அல்லது தங்கள் பார்வையில் தேவையற்ற அறிவியலை எதிர்பதற்காக), ஏழ்மை, பசி என்றெல்லாம் பேசவேண்டியதில்லை. ஒரு ஏழை ஏழையாக இருப்பதற்கு அறிவியல் காரணமல்ல.//

அன்பரே இங்கு தான நீங்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்வேண்டும். இந்த அறிவியலுக்கான நிதி எங்கிருந்து வந்தது? நீங்களும் நானும் கடையில் வாங்கும் அதே உணவு மற்றும் அத்தியாவிச பொருட்களை தான் ஒரு வேளை சோற்றுக்குகூட வழியில்லாத ஏழைகளும் வாங்குகிறார்கள். அப்போது பொருளில் வரி, லாபம் உட்பட அனைத்திற்கும் சேர்த்து தான் விலை கொடுக்கிறோம்.

 பணக்காரனுக்கு தான் பேனா 10 ரூபாய் ஏழைக்கு 5 ரூபாய் என்றா கடையில் விற்கிறார்கள். இங்கு ரேஷன் கடைகளை பற்றி குறிப்பிட முன்வரலாம். எல்லா நாடிலும் எல்லா மாநிலத்திலும் ரேசன் கடைகளில் எல்லா அடிப்படை பொருட்களும் கிடைக்கிறதா? ரேச்ன பொருட்களை வைத்து மட்டும் ஏழை உணவு உண்டுவிடமுடியுமா?

ஏழையும் பணக்காரணும் சேர்ந்து தானே அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். அதுவும் சரிசமமாக. இங்கு பணக்காரர் வருமான வரி கட்டுகிறான் ஏழை கட்டுகிரானா? என கேட்கலாம். பணக்காரர் வருமான வரி கட்டுவதே ஏழைகளிடம் தங்கள் பொருட்களை விற்று பெற்ற வருமானத்தில் தானே. அவர்களுக்கு வருமானம் வரி கட்டும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது?

பணக்காரர் வருமானவரியை நேரடியாக கட்டுகிறார்கள். ஏழைகள் பணக்காரரிடம் கொடுத்து கட்டுகிறார்கள் அவ்வளவே.

சரி இந்தியாவையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். இன்று பல அடிப்படை தேவைகளுக்கு நிதியில்லாத போது கடவுள் துகள் ஆராய்ச்சிக்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?

அதே போல ஆப்பிக்கநாடுகளின் ஏழைகளுக்கும். கடவுள் துகள், அணுஆயுதம் போன்ற விபரீத ஆய்வுகளுக்கும் என்ன சம்மந்தம் என தோன்றலாம். அதற்கு தான் தாரளமயமாக்கல், உலகமயமாக்கல், உலகவங்கியில் இருந்து கடன் கொடுத்தல், சர்வதேச ஒப்பந்தங்கள் என்ற பெயரில் அவர்கள் நிர்ணயித்த விலைக்கு பொருளை விற்று கொள்ளையடிக்கிறார்களே. அரசியல் என்ற மிகப்பெரிய வியாபாரத்தில் அறிவியலுக்கு மட்டும் நீதி நேர்மையுடனும், மனசாட்சியோடும் எதையும் எதிர்பார்க்காமல் நிதிஒதுக்கிவிடுவார்களா?

இது குறித்து தகுந்த ஆதாரங்களை சேகரித்து வருகிறேன். ஓரிரு தினத்தில் திரு. வடுவூர் குமார் அவர்களின் பின்னூட்டத்திற்கு பதிலாக இடுகிறேன்.

// இறுதியாக இதற்கெல்லாம் குற்றம் சாட்டவேண்டியது அறிவியலை அல்ல அரசியலை என்ற தங்களின் கேள்விக்கான பதில்//

விபரீத ஆராய்ச்சிகளுக்கான விடயத்தில் அரசியல்வாதிகள் அறிவியலாளர்களை வற்புறுத்துகிறார்களா? அல்லது அறிவியலாளர்கள் அரசியல்வாதிகளை ஏமாற்றுகிறார்களா? அல்லது கூட்டுகளாவாணிகளா?(திருடர்களா) என்பது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அரசியல்வாதிகள் வேண்டுமானால் வியாபாரிகளாக இருக்கலாம். ஆனால் அறிவியலாளர்கள் விபரீத ஆராய்ச்சிகளின் விளைவுகளை தெரியாதவர்களா? உலகின் எதார்த்த நிலையை தெரியாதவர்களா? அரசியல்வாதிகள் நிர்பந்தித்தால் எதைவேண்டுமானாலும் கண்டுபிடிப்பார்கள் என்றால் அவர்களிடம் எங்கே அறம் இருக்கிறது.

தங்கள் கண்டுபிடிப்புகள் தான் பெரிது என்று அரசியல்வாதிகளையே பணியவைத்து விபரீத ஆராய்ச்சிகளுக்கு நிதிபிடுங்குகிறார்கள் என்றால் யார் மிகப்பெரிய சுயநலவாதிகள்?

ஏன் அறிவியலை கேள்வி கேட்கக்கூடாது பதிப்பின் கருவே இது தான்

ஆன்மீகத்திற்குள் மதச்சாயல் வந்ததும் எப்படி கேள்விகேட்டீர்களோ, அதே கேள்வியை அறிவியல் மீதும் வையுங்கள் என்று தான் சொல்கிறோம்.

இன்னும் ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம்....

Read more...

ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது?

ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை. இந்த பதிப்பில் விவாதிக்க வந்த பலபேர் அறிவியலுக்கு எதிரான பதிவாகவே பார்த்தார்களே தவிர, ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது என சிந்திக்கவில்லை.

சிலர் பதிவே அறிவியலுக்கு எதிரானது என்ற கோணத்திலேயே தங்கள் விவாதங்களை வைக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால். கடவுளை பற்றி கேள்வி கேட்டால உடனே அவனை நாத்திகன் என்றும். ஆன்மிகத்தை பற்றி கேள்வி கேட்டால் உடனே அவன் மதவாதி என்றும். அறிவியலை பற்றி கேள்வி கேட்டாலே அவன் ஒரு பிற்போக்குவாதி என்றும் முடிவு கட்டுவது போல் உள்ளது.

பதிவின் மைய கருதத்து இது தான்

// கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்க மில்லியன் கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியும், அணுகுண்டு சோதனைகளும், கடவுள் துகள் ஆராய்ச்சிகளும் தேவையா? சரி இத்தனை பணத்தை இரைத்து பரிசோதனையில் விஞ்ஞானிகள் சாதிக்கப்போவது என்ன? //

ஆனால் பெரும்பாலானோர் கேட்டது தொலைகாட்சி, செயற்கை கோள், செல்போன், இணையம் அணுசக்தி இதெல்லாம் வந்திருக்குமா? என்று தான்.

நாங்கள் பயனுள்ள அறிவியல் ஆராய்ச்சிகளை குறையோ குற்றமோ சொல்லவில்லை. அதை பதிவிலேயே தெளிவாக வலியுருத்தியுள்ளோம். ஆனால் பயனற்ற விபரீத ஆராய்ச்சிகளை தான் யோசிக்க சொல்கிறோம். அதுவும் உலகில் 70 சதவீதம் மக்களை பட்டினிபோட்டுவிட்டு தேவையற்ற ஆராய்ச்சிகள் தேவையா என கேட்கிறோம்.

பலரும் பதிவை அறிவியல் ஆராய்ச்சிக்கு எதாரானதாகவே வாதிட்டார்களே தவிர பசி பட்டினியால் சாகும் சக மனிதர்களை பற்றி ஆதங்கம் கூட படவில்லையே ஏன்?

இங்கு பதிவர் திரு. ஆ. ஞான சேகரன், திரு.வடுவவூர் குமார் இவர்கள் மட்டும் பசிபட்டினி பற்றி கொஞ்சம் தொட்டுப்பார்த்தார்கள்.

அவர்கள் சொன்னது இது தான்.

// பசி பட்டினி இவை எல்லா காலத்திலும் இருக்க தான் செய்கிறது. அதே போல அறிவியல் வளர்ச்சியும் ஒருபுறம் இருக்க தான் செய்கிறது. அதற்காக பசி பட்டினியை காரணம் காட்டி அறிவியல் ஆராய்ச்சிகளை நிறுத்தகூடாது என்றார்கள். அப்படி நிறுத்தியிருந்தால் இத்தனை நவீனங்கள் வந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.//

இங்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்

இந்த கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியை மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரும் சாதனையாக பெருமையாக பேசும் நாம்., இதே காலத்தில் தினமும் பலகோடி சக மனிதர்கள் ஒரு வேளை சோற்றுக்கூட வழியில்லாமல் செத்துப்பிழைக்கும் வெக்கக்கேட்டை விவாதிக்க ஏன் முன்வருவதில்லை.

ஒரு நாய்குட்டியே ஒருவேளை உணவு இன்றி பட்டினி கிடப்பதை கண்டு நொடிந்துவிடும் மனித மனங்கள், எப்படி ஒருகோடி குழந்தைகள் உணவின்றி உறங்கும் கொடுமையை ஜீரணிக்கின்றன. - இது தான் நான் கானும் மிகப்பெரிய அதிசயம்.

இன்று அறிவியல் ஒரளவு தன்னிறைவு பெற்றுவிட்டது. ஆனால் மனிதகுலத்தின் அடிப்படை தேவைகள் தன்னிறைவு அடைவது எப்போது?

சரி இந்த ஆதங்கம் ஒருபுறம் இருக்கட்டும். அதை தான் விவாதிக்க ஒருவரும் முன்வருவதில்லையே.

அறிவியல் விவாதத்தற்கே போவோம்

தொழில்நுட்பங்களையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் நிறுத்தியிருந்தால் கோவை நகரமும் ஜப்பானும் வளர்ந்திருக்குமா என திரு. கோவை சிபியும், திரு. கையேடு பதிவரும் கேட்டிருந்தார்கள்.

தொழில் நுடபத்தை கற்றுக்கொள்வதையும், பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதையும் தவறு என நாங்கள் சொல்லவில்லை.

கோவையின் வளர்ச்சியும், ஜப்பானின் வளர்ச்சியும் பெருமையாகதான் இருக்கிறது. அதே நேரத்தில் கோவையை அழித்ததும் ஜப்பானை அழித்ததும் விபரீத ஆராய்ச்சிகள் என்பதை மறுக்கமுடியுமா?

இங்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்

அதே ஜப்பான் பயனுள்ள ஆய்வுகளையும் பயனுள்ள தொழில்நுட்பங்களையும் படிக்காமல், விபரீத ஆய்வையும், தேவையற்ற படிப்பையும் மேற்கொண்டிருந்தால் இந்த வளர்ச்சியை எட்டியிருக்க முடியுமா?

அடுத்து திரு. தருமி அவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தார்.

// இந்தப் பதிவு எழுப்பும் கேள்வி மிகவும் அர்த்தமற்றதாகத் தெரிகிறது. தலைப்பே தவறு என்று நினைக்கிறேன். அறிவியலே கேள்விகளால் வளர்வதுதான்.//

கேள்வியும் & பதிலும் தான் அறிவியல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அறிவியல் துறையை ஏன் கேள்வி கேட்க கூடாது? அதுதானே தலைப்பு.

எப்படி ஆன்மீகத்துக்குள் மதவாதம் புகுந்துவிட்டால் ஆன்மீகம் நம்பகத்தன்மை அற்றுப்போகிறதோ, அதே போல அறிவியலுக்குள் அரசியல் நுழைந்துவிட்டால் அதை மட்டும் எப்படி நம்புவது?

அமேரிக்காவும், ரஷ்யாவும் நிலவுக்கு போனார்கள். உடனே உலகின் ஒவ்வொரு நாடுகளும் பின்னாடியே ஒவ்வொன்றாக நிலவுக்கு போயின. அதே போல ஒரு நாடு அணுகுண்டு தயாரித்தால் உடனே அடுத்த நாடுகள் அணுகுண்டு தயாரித்து விடுகின்றன. இதெல்லாம் எதற்கு? விண்வெளிக்கு போகும் தொழில்நுட்பம் உனக்கு மட்டும் தான் தெரியுமா? எனக்கும் தான் தெரியும் என பெருமைபட்டுக்கொள்ளவும்., அணுகுண்டு தயாரிக்க உனக்கு மட்டும் தான் தெரியுமா எனக்கும் தெரியும் என பயமுறுத்தவும் தான்.

அமேரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நிலவுக்கு மனிதனை அனுப்பியதிலேயே போட்டியும் நம்பதன்மையின்மையும் வந்துவிட்டது. உண்மையில் முதலில் அமேரிக்கா நிலவுக்கு அனுப்பிய நீலம் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணமே இன்னும் நம்பக தன்மையின்மையும், விவாதத்திற்கு உரியதாகவும் இருக்கிறது. (அது ஒரு தனி கதை)

சமீபத்தில் அமெரிக்க செயற்கைகோள் செயல்யிழந்து விட்டதாகவும் அதை ஏவுகனை தாக்கி ராணுவம் அழிப்பதாகவும் அமேரிக்கா அறிவித்தது. உடனே ரஷ்யா சீனா போன்ற நாடுகள் அமேரிக்கா விண்வெளி போருக்கு ஒத்திகை பார்ப்பதாக கண்டித்தனர். இப்படி அறிவியலுக்குள் அரசியல் போட்டி பொறாமைகளும், வீணான கவுரவ- பெருமைகளும் வந்துவிட்டது. இப்போது அறிவியலை எப்படி நம்புவது?

இங்கு இன்னொரு எதார்த்த கேள்வி வரலாம்.

சர்வதேச விண்வெளி மையம் என்பதும், சர்வதேச ஆய்வு கூடம் என்பதும் எல்லா நாட்டு உறுப்பினர்களையும் கொண்டது. இதல் அரசியல் இல்லை. எனவே இதை நம்பலாம் என் எதார்த்த எண்ணங்கள் மனதுள் வரும்.

உலகில் பெரும்பாண்மை நாடுகள் உருப்பினர்களாக உள்ள ஐ.நா சபையையும் அதன் நடுநிலைமையையும் ஏன் நம்புவதில்லை?

இதில் உறுப்பினர்களாக உள்ள அரசியல்வாதிகள் தானே இந்த அறிவியல் ஆய்வுக்கும் நிதி ஒதுக்குகிறார்கள்?

ஐ. நா சபை ஒரு பொதுவான அமைப்பு என்றாலும் அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உலகுக்கு பகிரங்கமாகவே தெரியும்.

அதே அரசியல்வாதிகள் கட்டுப்பாடில் இருக்கும் சர்வதேச விஞ்ஞான அமைப்புகளின் நம்பக தன்மையை மட்டும் ஏன் கேள்வி கேட்க கூடாது?

அறிவியல் என்றாலே கேள்விக்கு தெளிவான பதில் சொல்ல கடமைபட்ட ஒரு துறை தானே.

அப்படியானால் அறிவியல் துறையையே முடக்க சொல்கிரீர்களா என்ற விதண்டாவாத கேள்விகளுக்கு நாங்கள் பதில்சொல்ல விரும்பவில்லை.

நாங்கள் சொல்வது என்னவென்றால் ஆன்மீகத்திற்குள் மதச்சாயல் வந்ததும் எப்படி கேள்விகேட்டீர்களோ, அதே கேள்வியை அறிவியல் மீதும் வையுங்கள் என்று தான் சொல்கிறோம்.

திரு. கையேடு அவர்கள்

விண்வெளி ஆய்வையும் அணுகுண்டு சோதனையையும் மற்றவர்களை போல் நாமும் செய்து காட்டுவதை பெரு¬மாக நினைக்கிறோம். அதே சமயத்தில் மற்றவர்களை போல உணவு, உடை, குடிநீர், சுகாதாரம், கல்வி மருத்துவம் இந்த துறைகளில் எல்லாம் அவர்களுக்கு நிகராக முன்னேற வேண்டும் என நினைக்கிறோமா? இந்த முன்னேற்றத்தை காட்டிலும் விபரீத ஆராய்ச்சிகளின் முன்னேற்றத்தை தானே பெருமையாக நினைக்கிறோம். அதை ஏன் என கேள்வி கேட்க கூடாதா?

அப்படியானால் அறிவியல் சுகபோகங்களை அனுபவிக்கும் 30 சதவீதம் மக்களை தவிர மற்ற மனிதர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்களா? பட்டினியிலேயே சாகவேண்டும் என்பது அவர்கள் தலை எழுத்தா?

இங்கு எனது கேள்வி இது தான். 30 சதவீதம் பேர் அறிவியலின் சுகபோகங்களை அனுபவித்து விட்டு போங்கள். ஆனால் ஏற்கனவே வெந்து நொந்து நூலாகியுள்ள் ஏழைகளை சுரண்டி தான் நீங்கள் கடவுள் துகளையும் விண்வெளியையும் கண்டுபிடிக்க வேண்டுமா?

அறிவியலாளர்களே அரசியல்வாதிகளே, ஆன்மீகவாதிகளே, பிரமாண்ட அறிவியல் ஆராய்ச்சிகள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என நினைக்கும் எதார்த்தவாதிகளே, நீங்கள் எப்போது தான் ஏழையின் பக்கம் திரும்புவீர்கள்?

60 ஆயிரம் கோடி என்ன 600 லட்சம் கோடி கோடியே என எத்தனை வேண்டுமானாலும் செலவழித்துவிட்டு போங்கள். உங்கள் அறிவியலின் எல்லை முடியும் வரை காய்ந்த வயிறுடனும், வற்றிபோன தோலுடனும். பட்டினியாகவே காத்துக்கிடக்கிறோம். எல்லை முடிந்த பின்பாவது எங்கள் பக்கம் கொஞ்சம் கருணை காட்டுவீர்களா?

இது தான் ஏழையின் கேள்வி. இதற்கு அறிவியலின் பதில் என்ன?

Read more...

ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை?

Saturday, September 13, 2008

60 ஆயிரம் கோடி ரூபாயில் கடவுள் துகள் ஆராய்ச்சியாம். இதனால் மனத குலம் சாதிக்கப்போவது என்ன என்பது தான் எனக்கு விளங்கவில்லை.

கோயில்சிலை மீது குடம் குடமாய் பாலை ஊற்றினால் கேள்வி கேட்கிறோம். உலகில் பசியாலும் பட்டினியாலும் லட்சக்கணக்கான குழந்தைகள் கதறிக்கொண்டிருக்க சிலையில் மீது குடம் குடமாய் பாலை ஊற்றுவதா என்கிறோம்?

நியாயமான கேள்வி. அதே நேரத்தில கேள்வியை இப்படி மாற்றி கேட்டுப்பாருங்கள்.

கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்க மில்லியன் கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியும், அணுகுண்டு சோதனைகளும், கடவுள் துகள் ஆராய்ச்சிகளும் தேவையா?

சரி இத்தனை பணத்தை இரைத்து பரிசோதனையில் விஞ்ஞானிகள் சாதிக்கப்போவது என்ன?

கோடிகள் செலவிட்டு ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்ததார்கள். அதனால தானே இன்று இணையம், செல்பேசி, செயற்கைகோள், தொலைகாட்சி, விமானம் என சுகபோகங்களை அனுபவிக்கிறோம். புதிய ஆராய்ச்சிகள் இல்லாமல் இதெல்லாம் கிடைக்குமா? இப்படி சிலர் எதார்த்தமாக நினைக்கலாம்

ஆனால் உண்மை இது தானா?

உலக விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் சரித்திரத்தை கொஞ்சம் திருப்பி பாருங்கள். எல்லா கண்டுபிடிப்புகளும் எளிமையாக, மிகப்பெரிய தொகையில் ஆராய்ச்சி இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டவைகளாக தான் இருக்கும்.

ஆனால் இன்று சர்வதேச கூட்டமைப்பு என்ற பெயரில் எத்தனை பணத்தை வீணாண ஆராய்ச்சியில் அழிக்கிறார்கள்? அதனால் இன்றுவரை கண்டுபிடித்துள்ள ஒரு பயனுள்ள புதுமையை சொல்ல சொல்லுங்கள்

சர்வதேச விண்வெளி மையமாம். ஆறுமாதத்திற்கு ஒரு முறை அங்கும் இங்கும் குடித்தனம் பெயர்கிறார்களாம். அங்கே விண்வெளியில் நடக்கிறார்களாம், மாரத்தான் ஓடுகிறார்களாம். நாமும் நம்புகிறோம். செயற்கைகோள், தொலைகாட்சி, இணையம் செல்பேசி என்ற பஞ்சுமிட்டாய்களை நமக்கு கொடுத்துவிட்டு அவர்களின் அத்தனை பித்தலாட்டங்களுக்கம் நம்மை தலையாட்ட வைக்கிறார்கள்.

இதில் விஷேசம் என்னவென்றால் நமக்கு கொடுத்தார்களே செயற்கைகோள், செல்பேசி போன்ற நவீனங்கள்., அது கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பது தான். இதெல்லாம் சில விஞ்ஞானிகள் தங்கள் வறுமையை வென்று கண்டுபிடித்த படைப்புகள். எந்த உயரிய கண்டுபிடிப்புக்கும் உலகம் அவ்வளவு சீக்கிரம் பணத்தை தந்துவிடவில்லை. அதேபோல எந்த உயரிய விஞ்ஞானியையும் உயிரோடு இருக்கும்போது அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை.

தகவல்தொழில் நுட்பம், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட துறைகளில் பல இளம் விஞ்ஞானிகள் பயனுள்ள் நவீன நுட்பங்களை கண்டுபிடித்தவண்ணம் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு நிதியுதவியோ, ஊக்குவிப்போ அளிக்க எந்த நாட்டு அரசும் தயாரில்லை. இவர்களை தனியார் வியாபார நிறுவனங்கள் தான் வியாபாரத்துக்காக ஊக்குவிக்கின்றன. அதுவும் கண்டுபிடிப்பு வியாபாரரீதியில் வெற்றியடைந்த பின்னரே நிதியுதவியும் அங்கீகாரமும் கிடைக்கிறது.

ஆனால் இன்று சர்வதேச விஞ்ஞான கூட்டமைப்பு என்ற பெயரில் எத்தனை கொள்ளை? பித்தலாட்டம்? சர்வதேச விஞ்ஞான அமைப்புகள் சாதித்ததாக குறைந்தபட்சம் ஒரு சாதனையை சொல்லமுடியுமா?

எதார்த்தவாதிகளே விரையமாவது யாரே உழைப்பும் பணமும் அல்ல. என்னுடைய, உங்களுடைய, என நம் ஒவ்வொருவரின் உழைப்பும் பணமும் தான்.

முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாமே கடவுள் துகள் கண்டுபிடிப்பை ஆஹா, ஓகோ என்றுவிட்டார் என நாமும் அந்த ஆராய்ச்சியை அங்கீகரித்துவிடுகிறோம்.

ஆனால் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம் என்று யாரவது சொன்னால் அவன் கிடக்கிறான் பைத்தியகாரன் என கேலி செய்கிறோம்.

கொஞ்சம் யோசியுங்கள் செவ்வாய் கிரகத்தில் நீர்தேட செலவிடும் பணத்தை பூமியிலுள்ள நீரை சுத்தப்படுத்த, பாதுகாக்க செலவிட்டால் குடியா முழ்கிபோகும்?

சர்வதேச சுயநல அரசியல்வாதிகளும், போலி விஞ்ஞானிகளும் பிரமாண்ட ஆராய்ச்சி என்ற பெயரில் உலகை பகிரங்கமாக சுரண்டுகிறார்கள். நாமோ அவர்கள் சொல்லும் பிரமாண்டத்தை கேட்கவே வாய்பிழந்து காத்துகிடக்கிறோம்.

அதே நேரத்தில் நம்மில் ஒருவன் மனிதகுலத்துக்கு பயனுள்ள ஒன்றை கண்டுபிடிக்க முயற்சித்தாலே போதும் வாய்கிழிய கேள்விகேட்டே அவனை முடித்து கட்டுகிறோம்.

Read more...

மனவலி மரணவலி - கவிதை (நான் யார் என்பதன் தேடல் - 2)

Thursday, September 11, 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட எனது தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக...

(முதல் பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)

முதல் பாகம் படிக்க இங்கு சொடுக்குங்கள் வாழ்க்கை வலி (நான் யார் தேடல் - 1)

மன வலி (நான் யார் தேடல் - 2)

எனக்கு மட்டும்
எனக்கே எனக்காக மட்டும்
ஒரு பாசம் - ஏங்கியது மனம்
ஏங்க ஏங்க
கூடியது வலியும்

உடலி வலித்தது
வீரிட்டு அழுதேன்
மனம் வலிக்கிறது
என்ன செய்வேன்?

வலி
வலியாற்ற வழியில்லா
வலி

உடல்வலி தாங்க
வீரிட்டு அழுது பழகியவளால்
மனவலி தாங்க
நேரிட்டு அழ தெரியவில்லை

வலிக்கு
வடிகால் தான் அழுகை
என் மனவலிக்கோ
அழுகையே தூண்டுகோலாக

பாசாங்கு பாசங்கள்
பரிகாசமாய் சில ஆறுதல்கள்

ச்சே..
திக்கு தெரியாமல்
திக்குமுக்காடும்
குருட்டு வாழ்க்கை

வலியோடு
வாழ வெறுத்தவள்
வாழ்வை முடிக்க
வழிதேடினேன்

ம்ம்ம்....
வாழ்வின் முடிவு -
அட அதுகூட
ஒரு வலிதான்.

வலிக்கு வலியே மருந்தா?

மருத்தது மனம்
மருந்து குடிக்க!

வலிக்கு வலியே மருந்தாகுமா?

ஒரு கணத்தில் பிழைத்தேன்
மரணவாசலில் வந்த
மறுபிறவி பயத்தால்

ஒருவேளை
செத்து பிழைத்தால்
மீண்டும் இதே வலிகளா?

அட
இது ஒரு புதுவலி

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்:- ஆன்ம வலி (நான் யார் தேடல் -3)

கவிதை விளக்கம்: மனம் ஏங்கும் பாசங்கள் கிடைக்காத போது மனம் உடைந்து விடுகிறது. வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. வாழ்க்கையை வெறுப்பவர்கள் கடைசியாக செல்லும் இடம் மரணவாசல். உண்மையில் மரணம் கூட ஒருவலிதான். மரணவாசலில் விபத்துநேரிடுபவர்கள் தான் மரணமடைகிறார்கள். ஒரு நிமிடம் மாற்றி சிந்திப்பவர்கள் மீண்டு வருகிறார்கள். தற்கொலைக்கு துணிந்த எனக்கு மரணவிளிம்பில் வந்த பயம் இது தான். கடவுள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் இப்படி எல்லாம் சொல்கிறாரகளே இது எல்லாம் உண்மையா? ஒருவேளை நாம் மறித்த பின்னர் இதெல்லாம் தெரிந்து கொள்வோமா? அல்லது மீண்டும் இதே மனிதபிறவியாக வந்து தொலைப்போமா? விடைதேடிவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். அடுத்து அந்த விடைதேடும் பயணங்கள்...

ஏங்கிய பாசம் கிடைக்காமல், தாங்கமுடியாத அவமானம் தாங்காமல் தற்கொலை வரை செல்லும் அன்பர்களே., மரணவிளிம்பில் ஒரு நிமிடம் ஏக்கத்தையும் அவமானத்தையும் தவிர்த்து வேறு ஏதாவது சிந்தித்து பாருங்கள்., அந்த ஒருநிமிடம் உங்கள் தற்கொலை எண்ணங்களை மாற்றிவிடும். எதையும் சிந்திக்காமல் அதே ஏக்கம் அதே அவமானத்தையே சிந்திக்கும் போது தான் மரணம் உங்களை எளிதில் இழுத்துப்போட்டுவிடுகிறது.

Read more...

  © Blogger template Newspaper II by Ourblogtemplates.com 2008

Back to TOP