தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?

நாசம் செய்யும் நான்கு எழுத்துக்ளுக்காக ஏன் வரிந்துகட்டுகிறீர்கள்?

Saturday, October 18, 2008

தமிழில இருந்து வடமொழி எழுத்துக்களை நீக்கவேண்டும் என்றால் தமிழர்களே அதை எதிர்க்கிறார்கள். இந்த நான்கு எழுத்துக்களால் தமிழுக்கு வரும் தீங்கை புரியச்செய்வதே இந்த பதிவு. மேலும் இந்த நான்கு எழுத்துக்களை நீக்கினாலே அறிவியல தமிழ் எளிமையாகிவிடும் என்பதையும் பார்க்கலாம்.

தமிழில் வடமொழி எழுத்துக்களை நீங்குவதால் அறிவியல் சொற்களை எழுத முடியாது என்றும், ஸ, ஷ, ஜ, ஹ இந்த நான்கு எழுத்துக்கள் தமிழோடு இருப்பதால் தமிழ் மேலும் வளமையடையும் என்றும் சில தமிழர்களே கூறுகின்றனர்.

இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை என்றால் தமிழில் அறிவியலை எழுதவே முடியாது என சொல்வது தமிழரின் இயலாமை தான் காட்டுகிறது. இந்த நான்கு எழுத்துக்கள் நச்சு கிருமிபோல ஒட்டிக்கொண்டு தமிழுக்கு செய்யும் தீங்கை புரிந்துகொண்டீர்கள் என்றால் இதற்காக வரிந்துகட்ட மாட்டீர்கள்.

பல நாள்நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரிய சன்னிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுரஒலி பேதங்களை தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும், பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ்யம் டீக்கா டூக்காடிபணி முதலிய உரைகோள் கருவிகளை பொருள்தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெற வேண்டியதற்கு பாஷ்யகாரர்கள் வியாக்கியான கர்த்தாக்கள் டீக்கா வல்லவர்கள், டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசிரியர்கள் கிட்டுவது அருமையினும் அருமையுமாய் இருக்கிற ஆரியபாஷை. என்று வள்ளார் சொல்வதை பாருங்கள்.

இன்னும் புரியாதவர்கள் 20, அல்லது 30 வருடங்களுக்கு முந்தைய தமிழ்செய்திதாழ்கள், வடமொழி கலந்து எழுதப்பட்ட புத்தகங்களில் தமிழின் கொடுமை பாருங்கள்.

வடமொழி எழுத்துகளுக்கு எதிராக போரடியதன் விளைவு தான் இன்று இந்த எளிமை தமிழ் கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் தமிழ் வார்த்தைகள் விடுதலையாகி வந்திருக்கிறது.

இந்த நான்கு எழுத்துக்கள் தமிழோடு தொங்கிக்கொண்டு இருப்பதால் என்னென்ன தொழுநோய் தமிழுக்கு வந்திருக்கிறது என பாருங்கள்

1. தமிழின் சீரான இலக்கணம் அழிகிறது
2. தமிழ் உச்சரிப்புகள் கெடுகிறது
3. பல தமிழ் வார்த்தைகள் அழிகிறது.
4. புதிய சொல்லாக்கங்களே இல்லாமல் போகிறது
5. தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள்.
6. நான்கு எழுத்துக்கள் போதாது. நான்கை ஏற்றுக்கொண்டதை போல நாற்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.
7. வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்ட திருக்குறள் உட்பட பல அரிய தமிழ் நூற்களும் மதிப்பற்று போகிறது.
8. இந்த நான்கு நான்கு எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்படும் தமிழ்சொற்களை உலக அரங்கில் மதிப்பற்ற பழமைவாத சொற்களாக்குகிறார்கள்
9. எதிர்காலத்தில் இந்த நான்கு எழுத்துக்கள் இல்லாமல் தமிழே இல்லை என்ற நிலையை உருவாக்குகிறார்கள்
10. கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் சொற்கள் பிறக்காமல் போகிறது. இதனால் தமிழ் மலட்டு மொழியாகிறது.

இன்று உலகின் ஒப்பற்ற உயரிய நூல் திருக்குறள் என பெருமைபடுகிறோம். அதில் எங்கே போனது இந்த நான்கு எழுத்துக்கள்?

இந்த நாசமாக போன( தமிழை நாசமாக்கியதால் இப்படி குறிப்பிடுகிறேன்) நான்கு எழுத்துக்களை தூக்கி எரிவதால் தமிழ்அன்னைக்கு என்னென்ன ஆற்றல்கள் வருகிறது?

1. சீரிய, உயரிய, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இலக்கணம் கொண்ட மொழியாகிறது.
2. தனித்து வாழும் செம்மொழியாகிறது
3. அறிவியல் தமிழ் எளிதாகிறது.
4. சீரிய உச்சரிப்புடைய உன்னதமொழியாகிறது
5. சமசுகிருதம் என்ற சாயல் இல்லாமல் தனித்து நிற்கிறது.
6. காலவளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் சொற்களும் வளர்கிறது.
7. கணிணி உட்பட தகவல் தொழில்நுட்பங்களில் தன்னிகரற்ற மொழியாகிறது.
8. குழந்தைகளிடம் கொஞ்சும் மழலை தமிழை கேட்க முடிகிறது.
9. இயல், இசை நாடகம் காக்கப்படுகிறது.
10. என்றும் இளைமை மிளிர்கிறது தமிழுக்கு

இன்று பெரும்பாலான அறிவியல் வர்ர்த்தைகள் எல்லாம் கிரேக்கம் லத்தீன் மொழிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் பழமையான ஒரு பொதுமொழியில் இருக்கட்டும் என்பது தான். இந்த மொழிகளுக்கெல்லாம் தமிழ் எந்த விதத்தில் சளைத்தாக உள்ளது? உதாரணத்திற்கு அவர்கள் ஆல்பா, பீட்டா, காமா, என்கிறார்கள். இதன் பொருள் முதலாவது இரண்டாவது, மூன்றாவது என்பது தான். இதை மொழிபெயர்க்க நாம் fa , ba,. ga போன்ற உச்சரிப்புகள் தமிழில் இல்லை என வாதிடுகிறோம். ஆல்பா பீட்டா காமா என்று எழுதினாலும் புரிகிறது. அதைவிட தமிழில் நேர்மின் கதிர், எதிர்மின்கதிர், மின்சுமையற்ற என எளிமையாக மொழிபெயர்க்கும் போது இன்னும் கருத்தூன்றி படிக்க முடிகிறது.

கடவுள் துகள் எனப்படும் என்ற சொல்லை எப்படி தமிழில் எழுதுவது கிக்சு போசன் என்று எழுதலாம் இன்னும் தமிழ்படுத்தும் போது அடிப்படை துகள் எனலாம். இங்கு தமிழோடு ஒன்றிய பல புதிய சொற்கள் தமிழுக்கு கிடைக்கிறதே.

உயர்திரு. செயபாரதன் ( தமிழ் அணுவியல் விஞ்ஞானி. கனடா) அவர்களுடனான ஆக்கபூர்வமான விவாத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

//ஆர்கானிக் இரசாயனக் கணிதச் சமன்பாடுகளைத் தனித்தமிழில் எப்படி எழுதுவது என்று காட்டுங்கள்.//


வேதியலில் குறிப்பிடப்படும் அனைத்து தனிமங்களுக்கும் இயற்பியலில் பயன்படும் அனைதது அடிப்படை அளவீடுகள் மற்றும் அவற்றின் துணை அளவீடுகளுக்கும் ஒரே பொது குறியீடு உலகெங்கும் பின்பற்றப்படுகிறது. இவை எழுத்துக்களுக்காக பயன்படுத்தப்படுபவை அல்ல குறியீடுகளுக்காக பயன்படுத்தப்படுபவை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவை வேதியல் சமன்பாட்டை தருவிப்பதற்காகவும், கணித சமன்பாடுகளை நிரூபிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மட்டுமே. சொல்லப்போனால் இவை எண்களை போல பயன்படுத்தப்படுபவை. இவைகள் கலப்பது மொழி கலப்பும் அல்ல. இவை கலப்பதை நான் குறைகூறவும் இல்லை.

இவற்றிற்காகவெல்லாம் நாம் இவ்வளவு தூரம் எழுதவில்லை. இவற்றையெல்லாம் தமிழ்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. எண்களையம் குறியீடுகளையும் பயண்டுத்துவது மொழிகலப்பு அல்ல.

ஆக்சிசன் என்பதற்கு O2, ஐட்ரசன் என்பதற்கு H, 2, +, = இதெல்லாம் H2O என்ற சமன்பாட்டில் வருகிறது. இதில் 2, +, = இதை போல O, H ம் குறியீடுகள் தான். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். குறியீடுகளுக்கும் தாங்கள் கூறும் மொழி விடுதலைக்கும் என்ன சம்மந்தம்.

//மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் sh(ஸ), sha(ஷ), ja(ஜ), ha(ஹ), ga( ?), da( ?), ba( ?), dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்.//

தங்கள் கூறியதை போல நான்கு க, நானகு, ட, நான்கு ச என சேர்த்தால் தமிழின் நிலையை பிரகிலுப்தம் வலைபதிவர் குறிப்பிடும் அதித்தமிழ் தான் மிஞ்சும். இப்படி சேர்ப்பதால் மட்டும் எல்லா உச்சரிப்புகளையும் கொண்டுவந்துவிட முடியுமா?
தற்போது தமிழில் ன, ண, ந, ல, ழ, ள, ற, ர இந்த எழுத்துக்கம் ஒரே உச்சரிப்புக்கு ஒன்றுக்கு இரண்டாகவும் மூன்றாகவும் இருக்கிறது. இவற்றில் ஒரு எழுத்து வரவேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்தை எழுதினால் எவ்வளவு பொருள் வேறுபடும் என்பது தங்கள் அறிந்ததே.
 இவற்றை எல்லாம் சேர்ப்பதால் எந்த க வை எங்கே போடுவது என்ற குழப்பமும் காலதாமதமும் தான் ஏற்படுமே தவிர தமிழ் எளிமை படாது. எது தமிழ் விடுதலை என்று நீங்களே சொல்லுங்கள்.

7 comments:

Anonymous said...

அதெல்லாம் சரி, இந்த பதிவுகளில் மேற்படி எழுத்துகளை கவனமாக தவிர்த்தே எழுதி வருகிறீர்கள். உங்களுடைய மற்றொரு வலைப்பதிவைப் பார்த்தேன். உடனே கீழே இருந்த பேனர் தான் கண்ணில் பட்டது. இஸ்லாமிய, கிருஸ்துவ... என்று இருந்தது. இசுலாமிய, கிறுத்துவ.. என்று ஏன் உங்களுக்கு எழுதத் தோன்றவில்லை? பழக்கத்தில் உள்ளதை கசுடப்படுத்திக் கொண்டு (அதாங்க, கஷ்டப்படுத்திக்கொண்டு) எழுதினால் இப்படி தான் நண்பரே.

அறிவகம் said...

அன்பார்ந்த அனானி நண்பரே

பார்க்க இன்னும் சமசுகிரதத்தின் மீது வெறுப்பேற்றார்கள் பதிவை.

http://kulali.blogspot.com/2008/10/blog-post_12.html

வடமொழி எழுத்துக்கள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என பயன்படுத்திவந்த நான் கூட, சமசுகிருதபிடிவாதிகளின கருத்துக்களை படித்த பின்புதான் தனிந்தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கே வந்திருக்கிறேன்.

இந்த பதிவுக்கு பின்பு நான் வடமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது இல்லை.

அந்த நான்கு எழுத்துக்கள் இல்லாமல் தமிழை எழுதுவது கடினமான செயலும் அல்ல.

Anonymous said...

tamil? or tamizh..?

ரங்குடு said...

ஐயா, அந்த 4, 5 எழுத்துக்கள் சம்ஸ்கிருதம் அல்ல.
சம்ஸ்கிருதத்திற்கு மாறாக வந்த பிராகிருதம் என்ற
சாமானியர்களின் மொழியிலிருந்து எடுத்தாளப்படுவது.
ஆரிய மதத்திற்கு எதிராக புத்தரும், இன்ன பிறரும்
கையாண்ட மொழியே பிராகிருதம். அதுவும் இப்போது
வழக்கொழிந்து ஓரியா, தெலுங்கு என்று வாழ்ந்து
கொண்டிருக்கிறது.
தமிழ் மொழி சில ஒலி வடிவங்களுக்கு இடம் கொடுக்காத
போது சில எழுத்துக்களைக் கடன் வாங்கியது உண்மையே.
இப்போது அதற்கு மாற்றாக எதாவது கண்டு பிடித்து
விட்டோமா?

Anonymous said...

அன்புள்ள குழலி,

நீங்கள் தமிழ் இலக்கணத்தை எங்கே படித்தீர்கள் ? தமிழ் இலக்கணத்தில் பெயர்ச்சொல், வினைச்சொற்களில் ஒருமை, பன்மை கூடத் தெரியாமல் எழுதி வருகிறீர்கள். நீங்கள் ஒலி இலக்கணம் பேச வந்து பிறருக்கு அறிவுரை கூறுகிறீர்கள். எதிர்மறை கூறும் தமிழரை அகிலவலையில் பித்தலாட்டவாதிகள் என்று இகழ்ந்து, உங்கள் தரத்தைக் கீழாக்கிக் கொள்கிறீர்கள்.


//2. தமிழ் உச்சரிப்புகள் கெடுகிறது
3. பல தமிழ் வார்த்தைகள் அழிகிறது.
4. புதிய சொல்லாக்கங்களே இல்லாமல் போகிறது
5. தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள்.
6. நான்கு எழுத்துக்கள் போதாது. நான்கை ஏற்றுக்கொண்டதை போல நாற்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.//

உங்களுடைய இரண்டு மூன்று வலைத் தளங்களில் ஒரே கட்டுரைகள்
இருந்தாலும் நான் அளித்த பல பின்னூட்டங்கள் சிலவற்றில் இல்லை. எல்லாப் பின்னூட்டங்களையும் ஒரே தளத்துக்குக் கொண்டு வந்து பிறரது மெய்யான பதிலூட்டங்களைக் காட்டுங்கள்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

Anonymous said...

அன்புள்ள குழலி அவர்களுக்கு,

//கிக்சு போசான் என்று அழைப்பதால் எந்த விதத்தில் அவர்களுடைய வரலாறு அழிக்கப்பட்டது? கிக்சு போசான் என்பது இரு அறிவியலாளர்களின் பெயர் என்று தாய்மொழியில் சொல்லிக் கொடுத்தால் தான் அவர்களது வரலாறு தெரியும். பெயரை அப்படியே எழுதுவதால் மட்டும் அவர்கள் வரலாறு தெரிந்துவிடுமா?//

ஆங்கிலம் உலக மொழி. இப்போது ஆங்கிலப் பேரகராதிகளில் விஞ்ஞானிகளின் பெயர்கள் அப்படியே சேர்க்கப்படுகின்றன. ஹிக்ஸ், ஹெர்செல், ஐன்ஸ்டைன், காஸ்ஸினி, லாப்பிளாஸ், அதுபோல் மற்ற பெயர்கள் ஸ்டானின், ஸ்புட்னிக், ஸ்டிரான்சியம், ஸ்பெய்ன் போன்ற பெயர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகின்றன. தமிழ்ப் பேரகராதிகளிலும் அப்படியே பெயர்கள் இருந்தால் பார்ப்போருக்குத் தொடர்பாகவும் உடனே பெயரைப் புரியவும் வசதியாக இருக்கும். வெவ்வேறு உச்சரிப்பில் எழுதப்படும் பெயர்கள் கிச்சு (ஹிக்ஸ்) போல் குழப்பம் உண்டாக்கும். ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதிகளுக்குள் ஒரு நல்ல தொடர்பு உண்டாகும்.

ஐக்கிய தேசங்களின் பேரவை (United Nations), அகிலவலை இணைப்புகள், உலக வாணிபங்கள், விஞ்ஞான ஆய்வுக்கூட்டு முயற்சிகள் பெருகி வரும் இக்காலத்தில் உலகம் சுருங்கி ஒரு பொரி உருண்டை ஆகிவிட்டது. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் ஒரு பாலம் அமைக்கக் கிரந்த எழுதுக்கள் நிச்சயம் பெருமளவில் உதவி செய்யும்.

பள்ளிச் சிறுவர்கள் மேற்படிப்பை ஆங்கிலத்தில் படிப்பதற்கும், உலக நாடுகளுக்குப் பயணம் செய்து பழகும் போதும் இந்தச் சொற்களைச் சிறு வயது முதலே பள்ளிக் கூடங்களில் ஒழுங்கான உச்சரிப்பில் தெரிந்திருந்தால் பேசுவதற்கு நல்லது என்று நான் நினைக்கிறேன். அப்படித் தேவையில்லை என்றால் அது உங்கள் உரிமை. ஆனால் மற்ற தமிழ்ப் பிள்ளைகள் கிரந்தச் சொற்களில் முறையான உச்சரிப்பில் படிக்கக் கூடாது என்று கட்டளையிடவும் தடுக்கவும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நானும் அப்படித்தான் எழுத வேண்டும் என்று மற்றவரை வற்புறுத்தவில்லை.

அப்படித்தான் எழுத வேண்டும் என்று வாதத்துக்கு நீங்கள் வருவதால் உங்களைத் தமிழ்க் காப்பாளி என்று போற்றினேன். தமிழ் உங்களுக்கு மட்டும் சொந்த மொழியில்லை என்று சுட்டிக் காட்டி அதை விடுவிக்க விடுதலைக்கு வழி காட்டினேன்.

++++++++++++++

//இந்திய சுதந்திரத்துக்கு முன்பு, நாம் தனித்து சுதந்திரமாக நிற்க வேண்டும் என போரடியவர்கள் 20 சதவீதம் «ப்ர் தான். ஆங்கிலேயர் ஆட்சி செய்தால் செய்துவிட்டு போகட்டுமே, அதற்காக ஏன் இவ்வளவு கடினப்பட வேண்டும். எதற்காக இந்த கிருக்கர்கள் குதிக்கிறார்கள் என்று எண்ணியவர்கள் தான் அதிகம்.//

//ஆனால் கேலி, கிண்டல், அடி, சிறை, மரணம் என அனைத்தையும் தாண்டி பொதுமக்களுக்கு தனி சுதந்தரத்தை புரியவைத்து வென்றவர்களால் தான் இன்று சுதந்திரம் கிடைத்திருக்கிறது.//

//அதே போல பெரியார் தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்டு செய்த சீர்திருத்தங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.//

நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு 75 வயதாகிறது. தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மூழ்கிச் சிறை சென்று முழுக்க முழுக்கப் பங்கெடுத்த ஓர் உன்னத குடும்பத்தில் பிறந்தவன். வளர்ந்தவன். படித்தவன்.

விடுதலைப் போரில் 20% நபர்கள்தான் பங்கெடுத்தார் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவா ? என்னுடைய கணக்குப்படிச் சுமார் 80% மேல் என்பது. 20% நபர்கள் மட்டும் போரிட்டு ஒரு போதும் தேசம் விடுதலை அடைந்திருக்க முடியாது.

தமிழ் நாட்டில் பெரியாரின் சுயமரியாதைக் கும்பல் போன்ற துரோகக் குழுக்கள்தான் (20% சதவீதம்) பிரிட்டீஷ்காரன் இந்தியாவை விட்டுப் போகக் கூடாது, நாட்டுக்கு விடுதலை தேவையில்லை என்று ஒதுங்கி யிருந்தவர்கள். பிறகு விடுதலை கிடைத்ததும் திராவிட நாட்டுப் பிரிவினைக்கு அடிபோட்டு ஏமாந்தவர்கள் !!!

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டிகளின் மொழி என்றவர். திருக்குறளை அந்தணர் நூல் என்று வெறுத்தவர். கம்ப இராமாயணக் காவியத்தைத் தீயில் இட்டவர். இலக்கண அகத்தியராக ஆக்கிப் பெரியாரைத் தமிழ்ப் பண்டிராக மாற்ற முயலாதீர்கள்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

+++++++++++++
அன்புள்ள குழலி,

//எந்த சொல்லையும் தமிழ் உச்சரிப்புக்குள் கொண்டுவரவேண்டும் என்பது தான் நமது வாதம். உதாரணமாக போட்டான் என்பது தமிழுக்கு புதிய சொல் இதற்கு ஆற்றல் சிப்பங்கள் என்று தான் தமிழில் கொண்டுவரவேண்டும் என்பதல்ல எனது வாதம். ஒலிக்க தமிழில் தனி எழுத்து சேர்க்க வேண்டும் என்பதை ஏற்க முடியவில்லை. அதே போல தான் கடவுள் துகள்(அடிப்படை துகள்) என்பதை கிக்சு போசன் என்று தமிழில் எழுதமுடியாத என்ன? அதை தானே கேட்கிறோம்.//

தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் ஒலி மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது !

“ஹிக்ஸ் போஸான்” (Higgs Boson) என்று இந்திய விஞ்ஞான மேதை சந்தியேந்திர நாத் போஸ் நினைவில் உள்ள கடவுள் துகளை மிகவும் கொச்சையாகப் பச்சைத் தமிழில் “கிக்சு போசன்” என்று எழுதி விஞ்ஞானிகள் ஹிக்ஸ், போஸ் இருவரது உன்னத வரலாற்றுச் சின்னங்களையே அழித்து விட்டீர்கள் !!!

காலுக்கு ஏற்றவாறு செருப்பு தயாரிக்க வேண்டுமே தவிரச், செருப்புக்கு ஏற்றபடிக் காலை நறுக்குவது அறிவுடைமை ஆகாது.

நாமிருவரும் எதிர்த் திசைகளில் போகிறோம். நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதே சமயத்தில் நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வற்புறுத்த வில்லை.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

++++++++++++++
அன்புள்ள குழலி

கிரந்த எழுத்துக்களின்றித் தாறுமாறாக விஞ்ஞானப் பெயர்களைத் தமிழில் எழுதி விஞ்ஞானத் தெளிவைச் சிதைப்பது நல்லது என்றால் நான் வாதிட வரவில்லை.

உதாரணமாக ஸ்டிரான்சியம், ஸ்டாலின், ஸ்பெய்ன், ஸ்புட்னிக் போன்ற பெயர்களைத் தனித்தமிழில் எழுத முடியாது. இந்தப் பெயர்கள் வந்தால் தூய தமிழில் எழுத முடியாமல் விட்டு விடுவதா ? அல்லது தமிழ்க் காப்பாளியாக எண்ணிக் கொண்டு தனித்தமிழில் தாறுமாறாக எழுதிப் படிப்போரையும், கேட்போரையும் திண்டாட வைப்பதா ?

+++++++++++++

//இவற்றிற்காகவெல்லாம் நாம் இவ்வளவு தூரம் எழுதவில்லை. இவற்றையெல்லாம் தமிழ்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. எண்களையம் குறியீடுகளையும் பயண்டுத்துவது மொழிகலப்பு அல்ல.

ஆக்சிசன் என்பதற்கு O2 ஐட்ரசன் என்பதற்கு H 2, +, = இதெல்லாம் H20 என்ற சமன்பாட்டில் வருகிறது. இதில் 2, +, = இதை போல O, H குறியீடுகள் தான். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

குறியீடுகளுக்கும் தாங்கள் கூறும் மொழி விடுதலைக்கும் என்ன சம்மந்தம்.//

++++++++++++++++++

குறியீட்டுக்கும் எழுத்து- எழுத்து ஒலி உச்சரிப்புக்கும் உடன்பாடுகள் உள்ளன. தலை மட்டும் தனித்தமிழாக இருந்தால் போதும். உடம்பு எப்படியும் இருக்கலாம் என்பது உங்கள் வாதமா ?

//இவற்றையெல்லாம் தமிழ்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை//

என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எது தேவை எது தேவை இல்லை என்பதைத் தமிழ் அறிஞர்கள் தேர்வு செய்ய வேண்டியது.

முதலில் நீங்கள் விஞ்ஞானியா, வேறு பட்டதாரியா யார் என்று சொன்னால் நல்லது. விரும்பினால் உங்கள் பட்டப் படிப்பு, உத்தியோகம், அனுபவம் ஆகியவற்றைத் தயவு செய்து சொல்வீர்களா ?

++++++++++++++++

//தங்கள் பெயரை செயபாரதன் என நான் எழுதாமைககு காரணம் தங்களுக்கு விருப்பமில்லை என குறிப்பிட்டு இருந்ததால் மட்டுமே. மேலும் பெயர்கள் அவரவர் விருப்பம் போல அழைப்பதை தான் நானும் விரும்புகிறேன்.//

உங்கள் பெயரை ஆங்கில ஈமெயில் முகவரியில் படித்து விட்டு ஒருவர் “குலலி” “குளலி” என்று தமிழில் எழுதினால் என்ன செய்வீர்கள் ?

+++++++++++++

//மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்.//

//தங்கள் கூறியதை போல நான்கு க, நானகு, ட, நான்கு ச என சேர்த்தால் தமிழின் நிலையை பிரகிலுப்தம் வலைபதிவர் குறிப்பிடும் அதித்தமிழ் தான் மிஞ்சும். இப்படி சேர்ப்பதால் மட்டும் எல்லா உச்சரிப்புகளையும் கொண்டுவந்துவிட முடியுமா? எந்தமொழியாலும் எல்லா உச்சரிப்புகளையம் எழுத்தில் கொண்டுவரமுடியாது.//

மெல்லோசை எழுத்துக்கள் விஞ்ஞானத்துக்கும் மற்றுமல்ல, கர்நாடக சங்கீத இசைகளுக்கும் தேவைப்படுகின்றன. செவிக்கினிய தஞ்சாவூர் தியாகராஜர் கீர்த்தனைகளுக்கு எல்லா வகை மெல்லிசை எழுத்துக்களும் வேண்டும். இல்லா விட்டால் நமது இசைத்தமிழ் அவற்றின் சேர்க்கை யில்லாமல் பிற்போக்கு இசை ஆகிவிடும்.

ஒலிபெயர்ப்பு இசைத் தமிழுக்கும் அவசியம்.

தமிழ் யார் ஒருவருக்கும் சொந்தமில்லை. ஆதலால் தன்னைத் தமிழ்க் காப்பாளியாக கற்பனை செய்து கொண்டு வளரும் தமிழைத் தடுக்க முனையாதீர்கள். கிரந்த எழுத்துக்களை நடையில் கையாளுவதும், வெறுப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

++++++++++++++++++

அன்புள்ள குழலி,

“அறிவகம்” என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் யாரென்று எழுத ஏன் உங்களுக்கு விருப்பமில்லை ?

//மெல்லோசை எழுத்துக்கள் விஞ்ஞானத்துக்கும் மற்றுமல்ல, கர்நாடக சங்கீத இசைகளுக்கும் தேவைப்படுகின்றன. செவிக்கினிய தஞ்சாவூர் தியாகராஜர் கீர்த்தனைகளுக்கு எல்லா வகை மெல்லிசை எழுத்துக்களும் வேண்டும். இல்லா விட்டால் நமது இசைத்தமிழ் அவற்றின் சேர்க்கை யில்லாமல் பிற்போக்கு இசை ஆகிவிடும்.

ஒலிபெயர்ப்பு இசைத் தமிழுக்கும் அவசியம்//

//இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பி. சுசீலா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியது:

கேள்வி: எப்படி உங்களால் தமிழ், தெலுங்கு, இந்தி, உட்பட அனைத்து மொழிகளிலும் பாடி புகழ்பெற முடிகிறது.

பதில்: உச்சரிப்பு தான் முக்கியம். அந்ததந்த மொழிகளில் அந்தந்த உச்சரிப்புகளோடு பாடும்போது தான் அந்த வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது. இனிமையும் வலிமையும் கூடுகிறது.//

இசைவாணி சுசீலா கர்நாடக, தியாராஜ கீர்த்தனைகளுக்குத் தமிழில் பாடத் தேவைப்படும் மெல்லோசை ஒலியைப் பற்றி எங்கே பதில் கூறுகிறார் ? என் கேள்வி என்ன ? உங்கள் பதில் மையத்தை விட்டு சுற்றி வளைத்து எங்கோ போகிறது !!!

//1. அறிவியல் தமிழை வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் விளக்க முடியாதா?//

ஓரளவுதான் (40%-50%) முடியும். விஞ்ஞானம் முழுவதையும் தனித்தமிழில் எழுத முனைவது தற்காலத்தில் இமாலய முயற்சி. விஞ்ஞானம் முன்னேறும் விரைவுக்கு ஏற்றபடிப் பன்மொழிக் கலப்புள்ள (ஆங்கிலம், வடமொழி) புதுத்தமிழில் உடனே படைப்பது எளிது. இதனால் தமிழ் மொழி ஆங்கிலமோ வடமொழியோ ஆகிவிடும் என்று பயமுறுத்த வேண்டியதில்லை.

கிரேக்க லத்தீன் போன்ற புராதன மொழிகள் போல வடமொழியில் தமிழுக்குகந்த நற்சொற்களைக் கடன்வாங்குவதில் தவறில்லை. வடமொழி வாடையை வெறுப்பவர் ஆங்கில ஆடையை மட்டும் கட்டிக் கொள்ள விரும்புவது விந்தையாக உள்ளது. தமிழரின் மதம் இந்து மதமான பிறகு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்தன. மதுரை மீனாட்சி கோயில் போன்று தமிழகத்தின் ஆலயங்கள் அனைத்திலும் வடமொழிச் சிற்பங்களும், கலாச்சார முத்திரைகளும், இதிகாச வரலாற்றுச் சின்னங்களும் ஆயிரக் கணக்கில் பொறிக்கப் பட்டுள்ளன. இமயம் முதல் குமரி வரை வடமொழியின் நீண்ட நிழல் பரவியுள்ளதே ! அவற்றை எல்லாம் முதலில் எப்படி அழிப்பீர்கள் ? நான்கு கிரந்த எழுத்துக்களிலா வடமொழி தமிழ்நாட்டில் கொடி பறக்க விடுகிறது ?

தமிழும் (80%) வடமொழியும் (10%) ஆங்கிலமும் (10%) கலப்பாக இல்லாமல் விஞ்ஞானப் படைப்புகள் எதுவும் ஆக்க முடியாது என்பது என் அழுத்தமான கருத்து.

//2. அப்படி விளக்க முயல்வது கடினமும், காலதாமதமாகுமா?//

10-20 ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்குள் விஞ்ஞானம் இரு மடங்குக்கு மேலாகப் பெருகிவிடும் !!!

//3. அப்படியே செய்தாலும் தாறுமாறக கொச்சையாகவும் பச்சையாகவும் இருக்குமா?//

கிரந்தச் சொற்களின்றி தமிழ் வார்த்தைகள் “கிக்சு போசன், மிச்சுசூப்பி, சார்ச்சு புச்சு” என்று கோமாளித்தனமாகவும், தாறுமாறாவும் இருக்கும். உங்கள் செவிக்கு இனித்தால் சரிதான் !!! ஆனால் சிறுவர்கள் இப்படிப் பெயர்களைக் கொலை செய்து, முறையற்றுக் கற்க என்ன பாவம் செய்தார்களோ ? இவர்கள் பின்னால் மறுபடியும் ஆங்கிலத்தில் கற்க மேற்படிப்புக்குப் புகும் போது தடுமாற மாட்டார்களா என்பது உங்களுக்குத் தெரியாது.

//4. இந்த நான்கு எழுத்துக்களை போலவே பல மெல்லெழுத்துக்களையும் தமிழில் சேர்க்க வேண்டுமா?//

விஞ்ஞான, இசைக் கலைகளுக்குத் தேவைப்படும் போது அவற்றைப் பயன்படுத்தினால் போதும்.

//5. இதெல்லாம் இல்லை என்றால் தமிழ் திறன் ஆற்ற பழமைவாத மொழியாகுமா?//

75 வயதாகும் நான் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப தமிழை வளைத்து எளிதாகப் புரியும்படிப் புதுத்தமிழில் 45 ஆண்டு காலமாய் எழுதி வருகிறேன். நான் புதுமைவாதி. இளவயதான (உங்கள் வயது என்ன்வோ ?) நீங்கள்தான் மாறாமல் பழைய தமிழைப் பிடித்துக் கொண்டு பழமைவாதியாகக் காட்டிக் கொள்கிறீர்கள்.

//இந்த பதிவில் தனிப்பட்ட யாரையும் நான் தாக்கி எழுதவில்லை. உதாரணத்திற்காக ஒருவரை சுட்டி காண்பிப்பது அவரை மட்டும் குறிப்பது அல்ல. அவரைபோல ஓத்தக்கருத்துடைய அனைவரையும் குறிப்பது தான். பித்தலாட்டவாதிகள் என்பது எனக்குள் வந்த கோபத்தின் வெளிப்பாடு தான்.//

//ஓத்தக்கருத்துடைய அனைவரையும்//

ஆவேசமாக ஒருவர் எழுதினால் இப்படித்தான் தமிழிருக்கும்.

விடுதலை இந்தியாவில் ஆளும் கட்சி என்றும் எதிர்க்கட்சிகள் என்றும் இருப்பதின் நோக்கம் ஒரு கட்சிக்குத் தெரிவதில் தவறுகள் இருப்பதை மறு கட்சி எடுத்துக் காட்டும். ஆளும் கட்சியில் உள்ளவரைப் போல் எதிர்க்கட்சி நபர்களும் அறிவாளிகள்தான். உங்கள் உணர்ச்சிப்படி எதிர்க்கட்சி நபர் எல்லாம் பித்தலாட்டவாதிகள். இப்படி மீண்டும் சொல்லி நியாயப் படுத்துவது ஓர் எதேட்சை அதிகாரம். உங்கள் மீதுள்ள உயர்ந்த மதிப்பை எதிராளிக்கும் அளிக்கும் மனோபாவம் உங்களிடம் இல்லாமை கண்டு வருந்துகிறேன்.

விமானத்தைக் கண்டுபிடித்தவன் ஒருவன். அதை எதிர்த்தவன்தான் பயனுள்ள ஒரு பாதுகாப்புப் பாராசூட்டைக் கண்டுபிடித்தான்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

Anonymous said...

அன்புள்ள குழலி,

திருக்குறள் ஓர் உன்னத நெறி நூல். 2000 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானம் வளராத முன்னேறாத காலத்தில் தோன்றியது. அதில் உள்ள சொற்களை வைத்து நவீன விஞ்ஞான நூல் எழுத முடியாது. அதன் தனித்துவத்தைச் சான்றாகக் காட்டுவது விஞ்ஞானப் புதுத் தமிழுக்கு உகந்த வாதமில்லை.

//தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள்.//

நாமெல்லாம் நாகரீகம் உள்ள கலாச்சாரத் தமிழர்கள். உலகில் எல்லாரும் படிக்கும் அகில வலையில் எழுதும் போதும், பழகும் போதும் நாகரீகமாக நடந்து கொள்வது நட்புக்கு வல்லது.

ஒவ்வோர் அடிக்கும் சமமான ஓர் எதிரடி உண்டாகும் (For every action there is an equivalent & opposite reaction) என்பது நியூட்டன் நியதி.

தர்க்கமிடும் போது தர்க்கத்தை விட்டு விட்டு தனிப்பட்டுத் தமிழரைத் தாக்குவது அநாகரீகம். அவ்விதம் வலையில் தாக்கும் போது தாக்குபவர்தான் தன் முகத்தில் கரியைப் பூசிக் கொள்கிறார்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

++++++++++

அன்புள்ள குழலி,

//தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள்.//

உங்களுக்கு அவசியம் திருக்குறள் பயிற்சி தேவை.

யாகாவார் ஆயினும் நாகாக்க ! காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு !

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

*********************************

  © Blogger template Newspaper II by Ourblogtemplates.com 2008

Back to TOP