மனவலி மரணவலி - கவிதை (நான் யார் என்பதன் தேடல் - 2)
Thursday, September 11, 2008
இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.
திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட எனது தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக...
(முதல் பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)
முதல் பாகம் படிக்க இங்கு சொடுக்குங்கள் வாழ்க்கை வலி (நான் யார் தேடல் - 1)
மன வலி (நான் யார் தேடல் - 2)
எனக்கு மட்டும்
எனக்கே எனக்காக மட்டும்
ஒரு பாசம் - ஏங்கியது மனம்
ஏங்க ஏங்க
கூடியது வலியும்
உடலி வலித்தது
வீரிட்டு அழுதேன்
மனம் வலிக்கிறது
என்ன செய்வேன்?
வலி
வலியாற்ற வழியில்லா
வலி
உடல்வலி தாங்க
வீரிட்டு அழுது பழகியவளால்
மனவலி தாங்க
நேரிட்டு அழ தெரியவில்லை
வலிக்கு
வடிகால் தான் அழுகை
என் மனவலிக்கோ
அழுகையே தூண்டுகோலாக
பாசாங்கு பாசங்கள்
பரிகாசமாய் சில ஆறுதல்கள்
ச்சே..
திக்கு தெரியாமல்
திக்குமுக்காடும்
குருட்டு வாழ்க்கை
வலியோடு
வாழ வெறுத்தவள்
வாழ்வை முடிக்க
வழிதேடினேன்
ம்ம்ம்....
வாழ்வின் முடிவு -
அட அதுகூட
ஒரு வலிதான்.
வலிக்கு வலியே மருந்தா?
மருத்தது மனம்
மருந்து குடிக்க!
வலிக்கு வலியே மருந்தாகுமா?
ஒரு கணத்தில் பிழைத்தேன்
மரணவாசலில் வந்த
மறுபிறவி பயத்தால்
ஒருவேளை
செத்து பிழைத்தால்
மீண்டும் இதே வலிகளா?
அட
இது ஒரு புதுவலி
தொடர்ச்சி அடுத்த பதிப்பில்:- ஆன்ம வலி (நான் யார் தேடல் -3)
கவிதை விளக்கம்: மனம் ஏங்கும் பாசங்கள் கிடைக்காத போது மனம் உடைந்து விடுகிறது. வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. வாழ்க்கையை வெறுப்பவர்கள் கடைசியாக செல்லும் இடம் மரணவாசல். உண்மையில் மரணம் கூட ஒருவலிதான். மரணவாசலில் விபத்துநேரிடுபவர்கள் தான் மரணமடைகிறார்கள். ஒரு நிமிடம் மாற்றி சிந்திப்பவர்கள் மீண்டு வருகிறார்கள். தற்கொலைக்கு துணிந்த எனக்கு மரணவிளிம்பில் வந்த பயம் இது தான். கடவுள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் இப்படி எல்லாம் சொல்கிறாரகளே இது எல்லாம் உண்மையா? ஒருவேளை நாம் மறித்த பின்னர் இதெல்லாம் தெரிந்து கொள்வோமா? அல்லது மீண்டும் இதே மனிதபிறவியாக வந்து தொலைப்போமா? விடைதேடிவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். அடுத்து அந்த விடைதேடும் பயணங்கள்...
ஏங்கிய பாசம் கிடைக்காமல், தாங்கமுடியாத அவமானம் தாங்காமல் தற்கொலை வரை செல்லும் அன்பர்களே., மரணவிளிம்பில் ஒரு நிமிடம் ஏக்கத்தையும் அவமானத்தையும் தவிர்த்து வேறு ஏதாவது சிந்தித்து பாருங்கள்., அந்த ஒருநிமிடம் உங்கள் தற்கொலை எண்ணங்களை மாற்றிவிடும். எதையும் சிந்திக்காமல் அதே ஏக்கம் அதே அவமானத்தையே சிந்திக்கும் போது தான் மரணம் உங்களை எளிதில் இழுத்துப்போட்டுவிடுகிறது.
0 comments:
Post a Comment