தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?

கண்மூடித்தனமாக அறிவியலை நம்பலாமா? - எதார்த்தவாதிகளே உஷார்!

Sunday, September 14, 2008

கடவுள் துகள் உட்பட விபரீத ஆரய்ச்சிகளை வரவேற்கும் அறிவியல் விரும்பிகளுக்கும், உணமையை அறிந்துகொள்ள விரும்பும் எதார்த்தவாதிகளுக்கும் ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது? என்ற பதிவிற்கு திரு. கையேடு அவர்கள் அளித்த பின்னூட்ட கேள்விகளின் அடிப்படையில் சில விடயங்களை தெளிவுபடுத்துகிறோம்.

//காலசூழலை மெல்ல தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் உயிர்களுக்கு இருக்கிறது, மனிதனுக்கு இன்னும் இருக்கிறதா?//

அதை தான் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துவிட்டு, செயற்கை தகவமைப்புகளை உருவாக்கிக்கொண்டு இயற்கையோடு பலப்பரீட்சை பார்த்துக்கொண்டு இருக்கிறோமே.

இன்று எயிட்ஸ் நோய் தான் மனித குலத்துக்கு மிகப்பெரிய சவால். அந்த நோய்கிருமியை கூட தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் நாளடைவில் மனிதனுக்கு சாத்தியப்படலாம்.

// இது உங்கள் அனுமானமே, இவ்வனுமானத்துடன் விஞ்ஞானம் நிச்சயம் கைகட்டி உட்கார்ந்துவிடவில்லை.தொடர்ந்து அந்தப் பாதையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறது.//

// ஒருவேளை உங்கள் கூற்றுப் படி நிகழ வாய்ப்பிருந்தாலும், உயிர்களுக்கான தகவமைப்புகள் பெரும்பாலும் பல தலைமுறைகள் ஆகும்.//

இப்படி நோய்களுக்கான மருந்து கண்டுபிடிக்கும் அறிவியலின் உழைப்பை தேவையில்லை என்றோ வேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் புதிய கிருமிகளை உருவாக்கிப்பரப்பும் அறிவியலை தான் வேண்டாம் என்கிறோம்.

உதாரணமாக அமெரிக்காக உட்பட பல வல்லரசு நாடுகளில் இன்றுகூட நோய்கிருமி ஆயுத ஆராய்ச்சிகள்(விபரீத அறிவியல்) பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தொகையும் நோய்எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதற்கு உங்கள் கூற்றே சான்று. எல்லா நாடுகளும் ராணுவத்திற்கு அதிகம் பணம் ஒதுக்குவதாக நீஙக்ள் குறிப்பிடுவது.

// உங்கள் பார்வையில் பேராபத்து என்பதின் அளவென்ன?//

மனித உயிரையும், உயிரின சரித்திரத்தையும் பணையம் வைத்து ஆய்வுகள் செய்கிறார்களே அதை தான் பேராபத்து என்கிறோம். உதாரணமாக தற்போதைய கடவுள் துகள் ஆய்வு, அணுஆயுது ஆய்வு மற்றும் சேகரிப்பு, நோய்கிருமி ஆயுதங்கள் மற்றும் கண்டுபிடிப்பு சேகரிப்புகள், போன்றவை.

பேராபத்தின் அளவு என்ன என கேட்டால் மனிதனால் எதிர்கொள்ள முடியாத ஆபத்துகள் அனைத்துமே பேராபத்துகள் தான்.

//அனுபவித்த பேராபத்துக்களைப் பற்றி முன்கூட்டுயே அறிந்து கொண்டு மனித குலத்தைத் தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் நிச்சயமாக திறனுடையதே.//

இயற்கையான பேராபத்துக்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதிலிருந்து தப்பித்து ஓடவே இத்தனை காலம் பிடித்திருக்கிறது என்றால் இன்று அறிவியல் படைத்துவைத்துள்ள பேராபத்துகளை எப்படி எதிர்கொள்ள போகிறோம்? எங்கே தப்பித்து ஓடப்போகிறோம்?

உதாரணமாக முன்பெல்லாம் போர் என்றால் எல்லையில் ராணுவம் மட்டுமே மோதிக்கொள்ளும். நாம் நம்வீட்டில் பாதுகாப்பாக இருந்து நிதி உதவி மட்டும் செய்தால் போதும். ஆனால் அணுஆயுதம் மற்றும் கிருமிஆயுதம், பூமியில் சூரியனில் உள்ள அளவு போன்ற வெப்பத்தை ஏற்படுத்துதல்(இது இயலுமா என்பது சர்சசைக்கு உரியது. ஆனால் அதை சாதிக்கப்போகறேன் என்ற ஆய்வில் உயிரின சரித்திரமே முடிந்துவிட்டாலோ?) இப்படி பேராபத்துகள் வருகிறது என தெரிந்தால் எங்கே தப்பித்து ஓடுவீர்கள்? அதற்காக தான் நிலவில் பிளாட் வாங்கி வைத்திருக்கிறாகளா?

நாங்கள் வலியுருத்துவது இயற்கை சீற்றங்களுக்கு தற்காப்பு கண்டுபிடிப்பதை எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் கண்டுபிடிப்புகளே இயற்கையை மிஞ்சும் பேராபத்துகள் ஆகிவிடக்கூடாது. மேலும் அதற்காக பசிபட்டினியில் மனிதகுல்ம் உள்ள தற்போதைய நிலையில் பணத்தை வீணடிக்க கூடாது என்பது தான்.

// உலகெங்கிலும் இராணுவத்திற்காகச் செலவிடப்படும் பணம் பலமடங்கு அதிகம்.//

100 % உண்மை தான். இது குறித்து அறிவகம் கட்டுரை தொடரில் விரிவாக எழுதியுள்ளேன். இங்கு கவனிக்க வேண்டியது நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியில் பெருபாண்மை நிதி ராணுவ வீரர்களின் நலனுக்கோ, பயிற்சிக்கோ, மருத்துவம் சுகாதாரத்திற்கோ ஒதுக்கப்படுவது இல்லை. பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கும், அதை பதுக்கி பாதுகாத்து வைப்பதற்கும் தான் செலவிடப்படுகிறது. உடனே அரசியலை கேள்வி கேளுங்கள் என்காதீர்கள். இந்த கண்டுடிபிடிப்புகளை எல்லாம நிகழ்த்துவது அறிவியலாளர்கள் தானே.

இந்தியா உட்பட பல ஏழை நாடுகளில் ராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கும் இனனொரு மர்மத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். வேறு எந்த துறையில் இருந்தும் நிதியை கொள்ளையடித்தால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்றாவது ஒருநாள் பதில்சொல்லியே ஆகவேண்டும். ஆனால் ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்துவிடலாம். மக்கள் கோட்டால் ஒரே பதில் ராணுவ ரகசியம் வெளியில் சொன்னால் நாட்டிற்கு ஆபத்தாம்.

// பூவி வெடித்துவிடும் என்றால் அதற்குமேல் எதிர்கொள்ள ஒன்றுமேயில்லை. எதை? எங்கிருந்து எதிர்கொள்வது? :)

மேற்குலக விஞ்ஞானத்திற்கு தனது வளர்ச்சியின் திசையின் எல்லை எது எங்கு நிறுத்துவது என்ற குழப்பம் என்றால், இந்தியாவிற்கு தற்போது எந்ததிசையில் செல்வது என்பதிலேயே குழப்பம் இருக்கிறது //

மிக சரியாக அருமையாக சொல்லியுள்ளீர்கள். இங்கு தங்களுக்கு சாதகமான பதிலுக்கு மட்டும் பாராட்டுகிரீகள் என்ற எண்ணம் வரக்கூடாது. உண்மையை யார் எங்கு, எப்படி சொன்னாலும் ஏற்றுக்கொள்வது தான் அறிவுடமை. அதில் எதற்கு வாத பிடிவாதம் வேண்டும். வாதத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ஆனால் இறுதியில் உண்மையில் ஒன்றுபடுவது தான் அறிவுடமை. அந்த விடயத்தில் மேற்சொன்ன உங்கள் கருத்துண்மையுடன் நாங்கள் உடன்படுகிறோம்.

// அறிவியலை எதிர்ப்பதற்காக (அல்லது தங்கள் பார்வையில் தேவையற்ற அறிவியலை எதிர்பதற்காக), ஏழ்மை, பசி என்றெல்லாம் பேசவேண்டியதில்லை. ஒரு ஏழை ஏழையாக இருப்பதற்கு அறிவியல் காரணமல்ல.//

அன்பரே இங்கு தான நீங்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்வேண்டும். இந்த அறிவியலுக்கான நிதி எங்கிருந்து வந்தது? நீங்களும் நானும் கடையில் வாங்கும் அதே உணவு மற்றும் அத்தியாவிச பொருட்களை தான் ஒரு வேளை சோற்றுக்குகூட வழியில்லாத ஏழைகளும் வாங்குகிறார்கள். அப்போது பொருளில் வரி, லாபம் உட்பட அனைத்திற்கும் சேர்த்து தான் விலை கொடுக்கிறோம்.

 பணக்காரனுக்கு தான் பேனா 10 ரூபாய் ஏழைக்கு 5 ரூபாய் என்றா கடையில் விற்கிறார்கள். இங்கு ரேஷன் கடைகளை பற்றி குறிப்பிட முன்வரலாம். எல்லா நாடிலும் எல்லா மாநிலத்திலும் ரேசன் கடைகளில் எல்லா அடிப்படை பொருட்களும் கிடைக்கிறதா? ரேச்ன பொருட்களை வைத்து மட்டும் ஏழை உணவு உண்டுவிடமுடியுமா?

ஏழையும் பணக்காரணும் சேர்ந்து தானே அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். அதுவும் சரிசமமாக. இங்கு பணக்காரர் வருமான வரி கட்டுகிறான் ஏழை கட்டுகிரானா? என கேட்கலாம். பணக்காரர் வருமான வரி கட்டுவதே ஏழைகளிடம் தங்கள் பொருட்களை விற்று பெற்ற வருமானத்தில் தானே. அவர்களுக்கு வருமானம் வரி கட்டும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது?

பணக்காரர் வருமானவரியை நேரடியாக கட்டுகிறார்கள். ஏழைகள் பணக்காரரிடம் கொடுத்து கட்டுகிறார்கள் அவ்வளவே.

சரி இந்தியாவையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். இன்று பல அடிப்படை தேவைகளுக்கு நிதியில்லாத போது கடவுள் துகள் ஆராய்ச்சிக்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?

அதே போல ஆப்பிக்கநாடுகளின் ஏழைகளுக்கும். கடவுள் துகள், அணுஆயுதம் போன்ற விபரீத ஆய்வுகளுக்கும் என்ன சம்மந்தம் என தோன்றலாம். அதற்கு தான் தாரளமயமாக்கல், உலகமயமாக்கல், உலகவங்கியில் இருந்து கடன் கொடுத்தல், சர்வதேச ஒப்பந்தங்கள் என்ற பெயரில் அவர்கள் நிர்ணயித்த விலைக்கு பொருளை விற்று கொள்ளையடிக்கிறார்களே. அரசியல் என்ற மிகப்பெரிய வியாபாரத்தில் அறிவியலுக்கு மட்டும் நீதி நேர்மையுடனும், மனசாட்சியோடும் எதையும் எதிர்பார்க்காமல் நிதிஒதுக்கிவிடுவார்களா?

இது குறித்து தகுந்த ஆதாரங்களை சேகரித்து வருகிறேன். ஓரிரு தினத்தில் திரு. வடுவூர் குமார் அவர்களின் பின்னூட்டத்திற்கு பதிலாக இடுகிறேன்.

// இறுதியாக இதற்கெல்லாம் குற்றம் சாட்டவேண்டியது அறிவியலை அல்ல அரசியலை என்ற தங்களின் கேள்விக்கான பதில்//

விபரீத ஆராய்ச்சிகளுக்கான விடயத்தில் அரசியல்வாதிகள் அறிவியலாளர்களை வற்புறுத்துகிறார்களா? அல்லது அறிவியலாளர்கள் அரசியல்வாதிகளை ஏமாற்றுகிறார்களா? அல்லது கூட்டுகளாவாணிகளா?(திருடர்களா) என்பது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அரசியல்வாதிகள் வேண்டுமானால் வியாபாரிகளாக இருக்கலாம். ஆனால் அறிவியலாளர்கள் விபரீத ஆராய்ச்சிகளின் விளைவுகளை தெரியாதவர்களா? உலகின் எதார்த்த நிலையை தெரியாதவர்களா? அரசியல்வாதிகள் நிர்பந்தித்தால் எதைவேண்டுமானாலும் கண்டுபிடிப்பார்கள் என்றால் அவர்களிடம் எங்கே அறம் இருக்கிறது.

தங்கள் கண்டுபிடிப்புகள் தான் பெரிது என்று அரசியல்வாதிகளையே பணியவைத்து விபரீத ஆராய்ச்சிகளுக்கு நிதிபிடுங்குகிறார்கள் என்றால் யார் மிகப்பெரிய சுயநலவாதிகள்?

ஏன் அறிவியலை கேள்வி கேட்கக்கூடாது பதிப்பின் கருவே இது தான்

ஆன்மீகத்திற்குள் மதச்சாயல் வந்ததும் எப்படி கேள்விகேட்டீர்களோ, அதே கேள்வியை அறிவியல் மீதும் வையுங்கள் என்று தான் சொல்கிறோம்.

இன்னும் ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம்....

10 comments:

ஆ.ஞானசேகரன் said...

அறிவியல் என்பது மனிதன் நடந்துவரும் பாதைகள். அது தொடரக்கூடியது. அறிவியலை குற்றம் சொல்ல வேண்டியதில்லை. விசமிகள் சிலர் அறிவியலை தவறாக பயன்படுத்துவதால் அறிவியலை கூண்டில் ஏற்ற வேண்டாம். பசி, பிணி என்பது எல்லாகாலங்களிலும் இருந்துள்ளது. சோமாலியாவில் சாப்பாட்டுக்கே வழியில்லை, அதனால் யாரும் குழந்தை பெறாமலா இருகின்றார்கள்.. அவர்களுக்கு நம்மால் வேண்டிய உதவியை செய்ய வேண்டும் என்பதும் உண்மை. அதற்காக அறிவியலை தடுக்க முடியாது. அது மனிதன் நடந்து வரும் பாதை....

கையேடு said...

திரு. அறிவிகம் அவர்களுக்கு,

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பலவும் அறிவியலில் அறம் பற்றி வாதம் மட்டுமே. அறிவியலின் அறம் பற்றிய பார்வையில் உங்களது பல கருத்துக்களோடு நான் உடன்படவே செய்கிறேன். ஆனால், இது குறித்து இன்னும் ஆழமாகக் கூட விவாதிக்கலாம்.

அமெரிக்காவின் நோய்க்கிருமி ஆய்வுகளின் அறம் பற்றி எனக்கு மாற்றுக்கருத்தில்லை, கண்டிக்கப்படவேண்டியதே.

ஆனால், அறிவியல் குறித்த எனது பார்வை வேறானது. அறிவியல் என்பது மனிதனது, சிந்தனைத் திறன், அவனது மூளையில் பரிணமித்தவுடனேயே சூழல் குறித்து அவன் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டான். ஒருவகையில் ஆன்மீகம், அறிவியல் இரண்டுனுடைய துவக்குமும் அந்தப் புள்ளியாகவே இருக்கலாம்(இது எனது பார்வை மட்டுமே முடிந்த முடிவள்ள).

கற்களை ஆயுதமாகப் பயன்படுத்துதல் துவங்கி, இன்று விண்கற்களைப் பற்றி அறியும் ஆவல் வரை அதன் நீட்சியாகவே காண்கிறேன்.

அதனால், நீங்கள் குறிப்பிடும் பலவும் அறிவியல் அறம் பற்றிய கேள்விகளே, கண்டிப்பாக அறிவியல் இவ்வறம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நிற்க.

ஒருவகையில் அறம் தவறும் நிகழ்வுகள் சமூகத்துடன் பிண்ணிப்பிணைந்ததும் கூட. வேட்டையாடி உணவு கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை முதன்முதலாக சக மனிதக்கூட்டத்துடன் போராடி தனக்கான உணவையும் வாழ்விடத்தையும் உறுதிப்படுத்திக்கொண்டபோதே அறம் செத்துவிட்டது. அதனால், வேட்டையாட ஆயுதம் கண்டுபிடித்த கற்கால மனிதனின் ஆயுதக்கண்டுபிடிப்பை கூண்டில் நிறுத்தும் முன்பு, பின்னர், அதனை சக உயிரியையும் வேட்டையாட நிர்பந்தித்த சமூகத்தேவைகளைக் களைதலே முக்கியம்.

ஆனால், இப்படி அறம் குறித்த கேள்விகளை நீட்டித்தால், உலகில் இருக்கும் எந்த ஒரு மனிதனும் அறமுடையவனாக இருக்க மாட்டான் உணவு அருந்தும் வரை. அதனால், அறத்தை மனித குலத்தின் உயிர்த்திருத்தல்(survival) என்பதுடன் இணைத்துக் கொண்டு மறுவரையறை செய்து கொண்டு உரையாடினால் வரையறைக்குள் உரையாடல்கள் சாத்தியம்.

நன்றி.

கையேடு said...

//அதனை சக உயிரியையும் வேட்டையாட நிர்பந்தித்த சமூகத்தேவைகளைக் களைதலே முக்கியம்.//

"சக மனிதனையும்" என்று கூற முற்பட்டது, "சக உயிரி" என்று வந்துவிட்டது.

அறிவகம் said...

திரு. கையேடு

மனிதனுள் சிந்தனை அறிவு வந்ததுமே ஆன்மீகமும் அறிவியலும் வந்துவிட்டது. மாற்று கருத்து இல்லை. ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட்டு தான் பிழைக்க வேண்டும் என்பது தான் உயிரண கோட்பாடு. அதற்காக ஆதி மனிதன் கற்களை ஆயுதமாக பயன்படுத்துதல் துவங்கி இன்று விண்கற்களை ஆராயும் வரை அறிவியல் தொடர்கிறது என்பதும் சரியே. அறிவியலை அறத்துக்கு உட்படுத்தும் முன்னர் முதலில் அறத்தை வரையறுங்கள் என நீங்கள் கேட்பதும் நியாயமே.

அறம் என்றால் என்ன? அதை எப்படி அகில உலகுக்கும் வரைப்படுத்துவது என்பது ஒன்றும் கடினமான விடயம் அல்ல.

மனிதன் அல்லாத விலங்குகள் உட்பட மற்ற உயிரினங்கள் எல்லாமே உயிரின கோட்பாடுக்கு நேர்த்தியான ஒரு அறத்தை பின்பற்றுகின்றன.

ஆதிகாலமாகட்டும் இந்த நவீனகாலமாகட்டும், மனிதரை தவிர வேறு எந்த உயிரினமும் உணவுத்தேவைக்காக அன்றி, உணர்வு தேவைக்காக எந்த உயிரியையும் வேட்டையாடுவது இல்லை. உணவு தேவைக்கு கூட தேவையான அளவு மட்டுமே வேட்டையாடுகிறது. அகில உலகு உயிரன சரித்திரத்துக்கே எக்காலத்துக்கும் இது தான் அறம்.

இந்த அறத்தை மனிதன் தவிர வேறு எந்த விலங்குகளோ, தாவரங்களோ, இன்னபிற உயிரினங்களோ எள்ளளவும் மீறுவதில்லை. ஆனால் மனிதன் எள்ளளவாவது கடைபிடிக்கிறானா?

உணவு அல்லாமல் மனிதனுக்கு உணர்வுத்தேவையும் தேவை தான். உணர்வு தேடலை தேடியதால் தானே இன்று மனிதன் வியத்தகு விஞ்ஞான உலகுக்குள் வந்திருக்கிறான்.

சரி நாங்கள் வலியுருத்துவது என்ன? உணவு தேவையாகட்டும் உணர்வுதேவையாகட்டும் இரண்டுக்கும் அறத்தை கடைபிடியுங்கள் என்று தானே சொல்கிறோம்.

உணர்வு தேடலுக்கு என்ன அறம் கடைபிடிப்பது. தேவைக்காக மட்டும் உணர்வு தேடலை விரிவுபடுத்துங்கள். தேவையில்லாததற்கு ஏன் வேட்டையாடுகிறீர்கள். அங்கே தானே அறம் சாகிறது.

எது தேவை எது தேவையில்லை என்ற அறிவு கூடவா மனிதனுக்கு இல்லாமல் போய்விட்டது?

மனிதன் அறம் என்பதையும் நிர்ணயம் செய்யாமல் இல்லை. திருக்குறளின் அறத்துப்பால் பகுதியை படியுங்கள். அறத்தை எவ்வளவு அழகாக வரையறை செய்து வைத்துள்ளார் என பாருங்கள்.

ஆன்மீகமாகட்டும் அரசியலாகட்டும், மதங்களாகட்டும், நம்பிக்கைகளாகட்டும், கொள்கைகளாகட்டும், அத்தனையிலும் அறத்தை கடைபிடியுங்கள். அதற்கு அறிவியல் மட்டும் என்ன விதிவிலக்கா? அதை தனே கேட்கிறோம்.

அன்பர்களே ஆன்மீக கலைகளும் அரசாட்சி முறையும் அழிந்ததற்கு காரணமே அறத்தை மீறியதால் தான். அதே நிலைக்கு தான் இன்று அறிவியலும் வந்திருக்கிறது.

நன்றி.

அறிவகம் said...

திரு. ஞானசேகரன்

அறிவியலை முடக்கவோ, தடுக்கவோ நாங்கள் சொல்லவில்லை என்பதை மூன்று பதிவுகளிலுமே தெளிவாக வலியுருத்தியுள்ளோம்.

ஆனால் இங்கு நாங்கள் குறிப்பிடுவது இதுதான்

இதற்கு எனக்கு வேறு உதாரணம் சொல்ல தெரியவில்லை.

12 மணிநேரம் செங்கல்சூலையில் வேலைசெய்துவிட்டு இரவில் உணவு இல்லாமல் உறங்கும் நிலையில் நீங்களும் நானும் என் குழந்தையும் உங்கள் குழந்தையும் இருந்திருந்தால், நமது வயிற்றெரிச்சல் கடவுள் மீது இருக்குமா? கடவுள் துகள் ஆராய்ச்சி மீது இருக்குமா?

நீங்கள் சொல்வது நீங்கள் பட்டினி கிடக்க நாங்களா காரணம்? கடவுளை கேளுங்கள் எங்களை ஏன் கேட்கிறீர்கள் என அறிவியலாளர்கள் சொல்வது போல் உள்ளது.

// சோமாலியாவில் சாப்பாட்டுக்கே வழியில்லை, அதனால் யாரும் குழந்தை பெறாமலா இருகின்றார்கள்..//

இந்த வார்த்தைகள் மிகவும் வேதனையூட்டுவதாக உள்ளது. மறுபரிசீலனை செய்யுங்கள்

பட்டினி தாங்காமல் தான் மக்கள் ஆன்மீகத்தின் அடக்குமுறையையும், அரசியலின் அத்துமீரலையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி புரட்சி செய்தார்கள். அதே புரட்சிக்கு அறிவியல் உட்படும் காலம் நெருங்குகிறது.

அதனால் தான் அறிவியலை குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கிறோம்.

நன்றி.

கையேடு said...

//மனிதன் அல்லாத விலங்குகள் உட்பட மற்ற உயிரினங்கள் எல்லாமே உயிரின கோட்பாடுக்கு நேர்த்தியான ஒரு அறத்தை பின்பற்றுகின்றன. //

இது என்ன வகையான? யார் வகுத்த அறம்?

//ஆதிகாலமாகட்டும் இந்த நவீனகாலமாகட்டும், மனிதரை தவிர வேறு எந்த உயிரினமும் உணவுத்தேவைக்காக அன்றி, உணர்வு தேவைக்காக எந்த உயிரியையும் வேட்டையாடுவது இல்லை. உணவு தேவைக்கு கூட தேவையான அளவு மட்டுமே வேட்டையாடுகிறது. அகில உலகு உயிரன சரித்திரத்துக்கே எக்காலத்துக்கும் இது தான் அறம்.//

இதைத்தான் நீங்கள் மேலே அறம் என்று குறிப்பிடுகிறீர்களா?
அப்படியானல் எனக்கு சொல்வதற்கு வேறொன்றிருக்கிறது.

இது மனிதனை நோக்கிக் கல்லெறிவதற்காக மிகைப்படுத்தப்பட்ட ஒரு முடிவு.

விலங்குளுக்கிடையே, தலைமைப் பொறுப்பிற்காகவும், இனவிருத்திக்காகவும் நடைபெறும் உணர்வுப் போராட்டங்கள் பல இறப்பில்தான்/அழித்தலில்தான் முடிவடையும்.

இதனால், மனிதனுடைய அல்லது அறிவியல் துணையுடன் செய்யப்படும் அனைத்தையும் நியாயப்படுத்தவில்லை, அது எனது நோக்கமுமல்ல.

//சரி நாங்கள் வலியுருத்துவது என்ன? உணவு தேவையாகட்டும் உணர்வுதேவையாகட்டும் இரண்டுக்கும் அறத்தை கடைபிடியுங்கள் என்று தானே சொல்கிறோம்.
//

நங்கள், நீங்கள் என்ற பயன்பாடு உங்களது ஆரம்பப்பதிவிலிருந்து இந்தப் பதிவு வரைக்கும் வளர்ந்து கொண்டே வந்து இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.

விவாவதத்தை வளர்ப்பதற்கும் பெருவாரியான ஆதரவிற்குமான enveloping போன்ற தொணியில் ஒளிக்கிறது.

ஒருவேளை எனது தொழில் அறிவியல் என்பதால் என்னை நீங்கள் உங்களது envelope ல் இருந்து வெளியேற்றிவிட்டீர்களோ.

அறிவியலாளர்கள், சமூகத்தில் எஞ்சியிருக்கும், ஆன்மீகம்-போலிஆன்மீகம், மதவாதம்-போலிமதவாதம், இனவாதம், என்ற பல இன்னபிற நிறுவனங்களுக்கு மத்தியில் பிறந்து வளர்ந்த ஒரு சமூக அங்கத்தினரே அறிவியலாளர்களும். அதனால், அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் அதன் பயன்பாட்டிலும், அதன் தாக்கங்களும், எச்சங்களும் விரவியிருக்கும்.

அறிவியல் என்பதே உலகமல்ல, அறிவியலும் இவ்வுலகத்தில் ஒரு சிறு பகுதியே. அதனால், அறிவியல் கேள்விக்குட்படுத்தப்படவேண்டியதே.

//அதற்கு அறிவியல் மட்டும் என்ன விதிவிலக்கா? அதை தனே கேட்கிறோம்.//

அறிவியல் நிச்சயமாக விதிவிலக்கல்ல. எங்காவது அறிவியலைக் கேள்விகேட்காதீர்கள் என்று நிறுவப்பட்டதா? இருந்தால் சுட்டி கொடுங்கள் அல்லது விளக்குங்கள் அறிந்து கொள்ளஏதுவாகயிருக்கும்.

அறிவியலின் அடிப்படையே கேள்விதான். அதனால், எல்லாவிதமான கேள்விகளுக்கும் அறிவியல் உட்படுத்தப்படவேண்டும் மாற்றுக்கருத்தில்லை.

//
அன்பர்களே ஆன்மீக கலைகளும் அரசாட்சி முறையும் அழிந்ததற்கு காரணமே அறத்தை மீறியதால் தான். அதே நிலைக்கு தான் இன்று அறிவியலும் வந்திருக்கிறது.//

அறிவியலையும் அதன் அறத்தையும் கேள்விக்குட்படுத்துவதையும் நான் அதரிக்கவே செய்கிறேன் என்பதை எனது அனைத்துப் பின்னூட்டங்களிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நிற்க.

ஏற்கனவே குறிப்பிட்டது போல் உங்கள் மையக்கருத்தில் உடன்படுகிறேன்.

இது just curiosityல் கேட்கிறேன்.

//மனிதனுள் சிந்தனை அறிவு வந்ததுமே ஆன்மீகமும் அறிவியலும் வந்துவிட்டது. மாற்று கருத்து இல்லை. //


இதை ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், சிந்தனை என்பது பரிணாமத்தில் இயற்கையாக மனிதனுக்கு தோன்றிய ஒன்றுதானே. அப்படியானால், மனிதன் எப்படி, எதற்காக என்ன அளவில் சிந்திக்க வேண்டும் என்பதையும் மட்டுப்படுத்தாதது இயற்கைதானே..???

அறிவகம் said...

திரு. கையேடு...

// இது என்ன வகையான? யார் வகுத்த அறம்?//

இது தான் சூழ்நிலை சமநிலை. இயற்கைக்கு அறிவு வகுத்த அறம். அறிவு குறிதது விளக்கிக்கொள்ள வேண்டுமானால் அறிவியல் மற்றும் எதார்த்தத்தில் நாமக்குள் இருக்கும் அறிவு, காலம், பொருள், இயக்கம் குறித்த புரிதல்களை கொஞ்சம் மாற்றி அமைக்க வேண்டும். அதை அறிவியல் நிரூபனங்களுடன் சொன்னால் மட்டுமே அறிவியலாளர்கள் ஏற்றுககொள்வார்கள் என்பதால் அறிவகத்தில் தொடராக எழுதுதிவருகிறேன். குத்துமதிப்பாக இங்கு சொன்னால் மேலும் புரியாத புரிதலுக்கு உட்பட்ட விவாதங்கள் தான் தொடரும்.

// இது மனிதனை நோக்கிக் கல்லெறிவதற்காக மிகைப்படுத்தப்பட்ட ஒரு முடிவு.//

இப்போது சொன்னால் இப்படி தான் சொல்வீர்கள். நிரூபணங்களுக்கு பின்னர் உயிறுள்ள பொருட்களில் மட்டுமல்ல உயிரற்ற பொருட்களிலும் இந்த அறம் தான் இருக்கிறது என்பதை அறிவியலே ஏற்றுக்கொள்ளும். இந்த பிரபஞ்சத்தின் இயக்கமே மேற்சொன்ன அறத்தில் தான் உள்ளது.

// விலங்குளுக்கிடையே, தலைமைப் பொறுப்பிற்காகவும், இனவிருத்திக்காகவும் நடைபெறும் உணர்வுப் போராட்டங்கள் பல இறப்பில்தான்/அழித்தலில்தான் முடிவடையும். //

விலங்குகளுடைய உணர்வு தேடல் எல்லாம் இயற்கையாகவே வருவது. ஆனால் மனிதனுடைய உணர்வுதேடல் எல்லாம் பெரும்பாலும் அவன் செயற்கையாகவே ஏற்படுத்திக்கொள்வது.

உதாரணமாக: விலங்குகள் இயற்கையில் உணர்வு வரும் போது தான் உடலுறவு கொள்கிறது. அதுவும் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்பவே காலம் நேரம் எல்லாம் கூட பார்க்கிறது. மார்கழி மாதம். அமாவாசை, (உடனே சோதிடமா என கேட்ககூடாது.)

மனிதன் அப்படியா? வயாகரா முதல் விண்வெளியில் மாரத்தான் ஓட்டம் வரை எத்தனை செயற்கைகளில் பூந்து விளையாடுகிறான்.

தலைமை பண்பை பற்றி குறிப்பிட்டீர்கள். அதுவும் இயற்கையோடு ஒத்ததே அல்லாமல். அதற்கு மாறக எந்த விலங்கும் உயிரினமும் தலைமைக்காக அடித்துக்கொண்டதாக எனக்கு தெரியாது.

// நங்கள், நீங்கள் என்ற பயன்பாடு உங்களது ஆரம்பப்பதிவிலிருந்து இந்தப் பதிவு வரைக்கும் வளர்ந்து கொண்டே வந்து இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.//

//விவாவதத்தை வளர்ப்பதற்கும் பெருவாரியான ஆதரவிற்குமான enveloping போன்ற தொணியில் ஒளிக்கிறது.//

நாங்கள் நீங்கள் என குறிப்பிடுவது வேற்றுமைக்காக அல்ல. ஒரு மரியாதை நிமித்தமாக தான். வேறு எந்த காரணத்திற்காவும் அல்ல. வேறு எப்படி சொல்வது?

அடுத்து enveloping குறிப்பிட்டுள்ளீர்கள்

இதை ஆக்கப்பூர்வமான விவாதத்தை வளர்ப்பதற்காகவும், அதில் உண்மையில் ஒன்றிணைவதற்காகவும் தான் என நீங்கள் புரிந்தால் மிக்க மகிழ்ச்சி.

அதே நேரத்தில் வாத பிடிவாதத்திற்காகவும், பரபரப்புக்காகவும், சுயநலத்துக்குமாகனதாக நீங்கள் கருதினால் சந்தோஷமாக இத்துடன் விவாதத்தை முடித்துக்கொள்ளலாம்.

பலரை கவருவதற்காக எழுதுவது என்றால் பல விடையங்கள் இருக்கிறது. அதற்கு இந்த விவாதம் தேவையில்லை. அப்படி விவாதிக்க செலவிடும் நேரத்தை விட ''காம்பியூட்டர் பார்த்தது போதும் வா அம்மா கதை சொல்லி விளையாடலாம்'' என ஏங்கி அழைக்கும் என் குழந்தையுடன் செலவிடும் நேரம் பயனுள்ளதாய் இருக்கும். நீங்களும் (எப்படி சொல்வது) உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

//ஒருவேளை எனது தொழில் அறிவியல் என்பதால் என்னை நீங்கள் உங்களது enveloping ல் இருந்து வெளியேற்றிவிட்டீர்களோ.//

இப்போது தான் நீங்கள் அறிவியலாளர் என்றே எனக்கு தெரியும். இந்த மனித குலம் பயனடையும் ஆய்வில் உள்ள அர்த்தமள்ள அறிவியலாளர் எனில் உங்களுக்கு எனது கம்பீர வணக்கங்கள். அறிவியலாளர் என அடையாளப்படுத்தப்பட்டு நாங்கள் உங்களை விலக்கியதாக கருத வேண்டாம். விலக்கவும் இல்லை.

சென்ற பதிப்புகளில் விவாதற்திற்கான கேள்விகளை பலர் கேட்டிருந்தனர். அதில் திரு.ஞானசேகரன், திரு. வடுவூர் குமார். மற்றும் தங்களின் கேள்விகளிலேயே மற்றவர்களின் கேள்விளும் அடங்கியிருந்தது.

எனவே உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலமே அனைவருக்கும் பதிலளித்து விடலாம் என நினைத்தேன். அதற்காக தான் தனிப்பதிப்பும் இட்டேன். மற்றபடி தங்களை தனிமைப்படுத்த அல்ல.

சிலர் ஏதோ அடிப்படை அறிவியலையே நாங்கள் குற்றம் சுமத்துவதாகவே பின்னூட்டம் இட்டார்கள். சிலர் கோவி.கண்ணனை துரத்தியே மதம் சார்ந்த கேள்விகளை கேட்டார்கள். சிலர் அறிவியலை கேள்வி கேட்காதீர்கள் சாயிபாபா காலில் போய் விழுங்கள் என்றார்கள். இப்படி அர்த்தமற்ற சம்மந்தமில்லாத வீனான கேள்விகளுக்கு என்னவென்று பதில் சொல்வது?

இப்படி உங்கள் கேள்விகளை தனிப்பதிவாக எடுத்து எழுதுவது உங்கள் கேள்விமீது உள்ள மதிப்பிலேயே தவிர உங்களுக்கு எதிராக விவாதிக்க அல்ல.

ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தான் பல உண்மைகளை கண்டறிய உதவும் என்பதை நம்புபவள் நான். அதனால் தான் இணையத்தில் எனது எழுத்துக்களை பதித்திருக்கிறேன. அதுவும் உலகளாவில் மேம்பட்ட ஆலோசனைகள் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பில்.

இது enveloping... என்று எனக்கு தெரியவில்லை.

//இது just curiosityல் கேட்கிறேன்.

சிந்தனை என்பது பரிணாமத்தில் இயற்கையாக மனிதனுக்கு தோன்றிய ஒன்றுதானே. அப்படியானால், மனிதன் எப்படி, எதற்காக என்ன அளவில் சிந்திக்க வேண்டும் என்பதையும் மட்டுப்படுத்தாதது இயற்கைதானே.//

envelopingல். அறிவகம் கட்டுரை தொடர் எழுதப்படவில்லை என உங்கள் மனதிற்கு தோன்றினால் அறிவகம் கட்டுரை தொடரை தொடர்ந்து படியுங்கள். அத்தனை கேள்விகளுக்கும் நிரூபனங்களுடன் பதில் சொல்கிறேன். அதில் உண்மை எவ்வளவு தூரம் என்பதையும் ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம்.

ஆக்கப்பூர்வமான விவாதங்கள் வரும் என்ற ஒரே எதிர்பார்ப்பில் தான் புத்தகமாக வெளியிடும் முன் வலைதளத்தில் எழுதுகிறேன்.

நன்றி.

கையேடு said...

திரு. அறிவகம் அவர்களுக்கு,

enveloping என்பதை நான் பயன்படுத்தியதற்கான காரணமே, உங்கள் தலைப்புகளும், வார்த்தைப் பயன்பாடுகளும் ஏற்படுத்தும் பிம்பங்கள்தான், பகுத்தறிவாளர்களே, எதார்த்தவாதிகளே, நாங்கள் இதைத்தான் கேட்கிறோம்? அறிவியலாளர்களே? இவையனைத்தும் ஒரு திசையை நோக்கி வீசப்படும் வார்த்தைகளோ என்ற பிம்பத்தையே உண்டு செய்கின்றன.
உங்களுடைய நாங்கள், நீங்கள் என்ற பயன்பாட்டையும் நான் இந்த அர்த்தத்திலேயே உள்வாங்கிக்கொண்டேன்.

மன்னிக்கவும்.

மற்றபடி உங்கள் உரையாடலைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
மேலும் உங்களது விளக்கத்திற்குப் பிறகு அறம் என்ற வார்த்தையின் பின்னிருக்கும் எனது புரிதல் குறைபாடுடையது என்றே கருதுகிறேன். இனி வரும் பதிவுகளில், நீங்கள் விரிவாக விளக்கியவுடன் இயற்கை அறம் குறித்து உரையாடலைத் தொடரலாம்.

இது வார்த்தைவிளையாட்டில் ஏற்படும் சிதறலினால் விளைந்த ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமே.

நிற்க.

இனி உங்கள் கருதுகோள்கள்/முடிவுகள் குறித்து,

//உதாரணமாக: விலங்குகள் இயற்கையில் உணர்வு வரும் போது தான் உடலுறவு கொள்கிறது. அதுவும் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்பவே காலம் நேரம் எல்லாம் கூட பார்க்கிறது. மார்கழி மாதம். அமாவாசை, (உடனே சோதிடமா என கேட்ககூடாது.)


தலைமை பண்பை பற்றி குறிப்பிட்டீர்கள். அதுவும் இயற்கையோடு ஒத்ததே அல்லாமல். அதற்கு மாறக எந்த விலங்கும் உயிரினமும் தலைமைக்காக அடித்துக்கொண்டதாக எனக்கு தெரியாது.//

விலங்குகளில் சமூகக்குழுக்களாக வாழும் பலவகை விலங்குகளின் தலைமையும், இனவிருத்திக்கான துணையும், உடல்வலு மற்றும் காக்கும் திறனுக்கான போராட்டத்தின் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது. இப்போராட்டம் உயிர்பலிவரைச் செல்லும்.

மேலும், தமது குழுவைச் சேராத சக உயிரினத்தைக்கூட சேர்த்துக்கொள்ளாத அல்லது உயிரைப் போக்கும் அளவிற்கு நீளக்கூடியது இப்போராட்டம்.
உதாரணங்கள்: சிங்கம், குரங்கினங்களுள் சில, சிலவேளைகளில் பென்குயின்கள் கூட.

//ஆக்கப்பூர்வமான விவாதங்கள் வரும் என்ற ஒரே எதிர்பார்ப்பில் தான் புத்தகமாக வெளியிடும் முன் வலைதளத்தில் எழுதுகிறேன்.//

தொடருங்கள், வாழ்த்துக்கள்.. உரையாடியதற்கும் உரையாட வாய்ப்பளித்தற்கும் நன்றிகள் பல.

அறிவகம் said...

நன்றி திரு. கையேடு. தவறுதல்களை சுட்டிக்காட்டப்படும்போது தான் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது. வரும் பதிவுகளில் வார்த்தைகளை கவனமாக கையாள்கிறோம். விலங்குகளின் தலைமை பண்பில் உள்ள அறம்மீறல் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. அதுபற்றி விரிவாக படிக்கிறேன். தொடர்ந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிருங்கள். நன்றி.

கையேடு said...

திரு. அறிவகம் அவர்களுக்கு,

//விலங்குகளின் தலைமை பண்பில் உள்ள அறம்மீறல் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியவில்லை.//

மிருகங்களின் அத்தகைய செயல்பாடுகளை அறம் மீறியதாகக் கருத வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். உங்கள் இயற்கை அறம் குறித்த விரிவான பதிவுக்குப் பின் தொடரலாம். நன்றி.

  © Blogger template Newspaper II by Ourblogtemplates.com 2008

Back to TOP