தமிழை அரசியல் பண்ணாதீங்க., திருக்குறளும் திரிக்கப்பட்டுவிடும்.
Thursday, October 16, 2008
வடமொழி எழுத்துக்களை நீக்கி தனித்தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தலாம் என்ற எண்ணத்திற்கு பலரும் முழு ஆதரவு தந்தனர். மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்மொழியின் மீது பற்றுடையோர் தமிழர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். அந்த பதிவில் மூன்றுபேர் தனிப்பட்ட கருத்துக்களை எழுதியிருந்தனர். அவர்களது நியாயமான எதார்த்த கருத்துக்கள் என்னை இன்னும் ஆழமாக சிந்திக்க வைத்தது.
பழக்கத்தில் உள்ள எழுத்துக்களை நீக்குவதால் என்ன பயன் என்று திரு RV அவர்களும், தனித்தமிழ் கொள்கை அரசியலாக்கப்பட்டிருக்கிறது என்று திரு.bmurali80 அவர்களும், அறிவியல், நவீனம் போன்றவற்றை தமிழில் கொணடுவருவதில் உள்ள சிக்கல்களை திரு.Jayabarathan S அவர்களும் குறிப்பிட்டுருந்தனர்.
பிற மொழி சொற்கள் தமிழில் கலப்பது தவிர்ககமுடியாதது என்பது உண்மை தான். இங்கு முக்கியமாக ஒன்றை சிந்தித்தாக வேண்டும். பிறமொழியில் இருந்து தமிழில் கலக்கும் ஒவ்வொரு சொற்களும் தமிழின் இனிமையை கெடுப்பது என்பது ஒருபுறம்., ஆனால் காலகாலமாக உள்ள தமிழ் சொற்களை அழித்துவிடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று எனக்கு தெரிந்து எலுமிச்சை என்ற தமிழ்சொல் எங்கே போனது என்றே தெரியவில்லை. பிறமொழி சொற்களை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அதே பிறமொழி சொல் நமது பாரம்பரிய தமிழ்சொல்லை அழிக்கும்போது எப்படி வேடிக்கை பார்ப்பது?
எலுமிச்சை ஒரு உதாரணம் தான் அதுபோல ஆயிரம் ஆயிரம் தமிழ்சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது.
இதே நிலை நீடித்தால் தமிழின் மூலமொழி ஆங்கிலம் என அடுத்தநூற்றாண்டு மொழியாராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். வேட்டி, முட்டி, அகத்தியர், புத்தகம் என்ற தமிழ் சொல்லை எப்படி இன்று சமசுகிருதவாதிகள் வேஸ்டி, முஷ்டி, அகஸ்தியர், புஸ்த்தகம் என தங்களுடையதாக திரித்து சொல்கிறார்களோ அதே போல ஆட்டுக்குட்டி என்ற நமது அழகிய தமிழ்சொல்லை ஆஸ்டுகுட்டி என்று விடுவார்கள். அடுத்த நூற்றாண்டு மொழியாராய்ச்சியாளர்களும் ஆமாம் ஆமாம் இது சமசுகிருத சொல்தான் என வரிந்துகட்டி விடுவார்கள்.
இன்றே எதை எழுதினாலும் அது சமசுகிருத சொல் என்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் தமிழருக்கே அது சமசுகிருதமா, தமிழா என்ற குழப்பம் நீடிப்பது தான். அப்படி இருக்கும் போது தமிழின் எதிர்காலத்தை சிந்தித்து பாருங்கள்.
அறிவியல் பெயர் சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துவது போன்று அப்படியே பயன்படுத்திவிட்டு போக வேண்டியது தானே. இதற்கெல்லாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்கலாம்
அப்படி போகின்ற போக்கால் தான் இன்று தமிழே பண்ணித்தமிழாகி விட்டது. எதற்கெடுத்தாலும் கால் பண்ணு, போன் பண்ணு, வாக் பண்ணு, டீச் பண்ணு, வாச் பண்ணு, என ஆங்கில வினைச்சொற்களையும் சேர்த்து அதை தமிழாக்கி விட்டார்கள். காலப்போக்கில் வெறும் பண்ணு என்பது மட்டும் தான் தமிழில் இருக்கும். அதற்கு பண்ணித்தமிழ் என்று பெயர்வைத்து நாம் பெருமை பட்டுக்கொள்ள வேண்டியது தான்.
அறிவியல் தொழில்நுட்பங்களில் தமிழை கையாள்வது கடினமானது அல்ல. உண்மையில் கட்டாயமாக தமிழில் தான் தந்தாக வேண்டும். உதாரணமாக SCREW இதன் அர்த்தம் யாருக்கு தெரியும்? ஆனால் திருகாணி என்றால் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல தான் LEVER - நெம்புகோல், திருப்பு உளி, கணிணி, இணையம், செல்பேசி இப்படி எல்லா சொற்களையும் அர்த்தத்தோடு தமிழிலேயே எளிமையாக சொல்லலாம்.
தனித்தமிழ் என்ற கோட்பாட்டை சிலர் மொழித்தீவிரவாதமாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது மறுக்கமுடிதா உண்மை தான். தனித்தமிழ் என்பது சமசுகிருத, இந்தி, ஆங்கில எதிர்ப்பு போர் அல்ல. இதை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழில் வடமொழி சொற்களை நீக்குவதில் காட்டும் தீவிரத்தை தமிழில் நவீனச்சொற்கள் படைப்பதிலும் காட்ட வேண்டும்.
தமிழின் சிறப்பே உச்சரிப்பு- எழுத்துநடையில் தான் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு நவீன சொற்களை படைக்க வேண்டும்.
ஒரு கலை சொல்லை படைக்கும் முன்பு மூன்று விடயங்களை கருத்தில் கொண்டால் போதும்.
1. ஏற்கனவே அந்த சொல் தமிழில் இருக்கிறதா?
2. தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றதாக உள்ளதா?
3. அர்த்தத்துடன் எளிமையாக இருக்கிறாதா?
TRAIN என்ற சொல்லை தமிழில் புகைவண்டி, தொடர்வண்டி என மொழியாக்கம் செய்யும்போது தான் அங்கு அதன் எளிமை குறைக்கப்படுகிறது. ரயில் என்றே மொழியாக்கம் செய்யலாம். அதே போல தான் காப்பியை குழம்பி என மொழியாக்கம் செய்வது அபத்தமாக இருக்கிறது.
ரயில் கண்டுபிடிக்கு முன்னர் தமிழில் டிரையின் என்ற வார்த்தையே இல்லை. அது தமிழுக்கு புது சொல் அதை தமிழாக்கம் செய்யும்போது தமிழ் உச்சரிப்புக்கு கட்டுப்படுகிறதா என்று மட்டும் பார்த்தால் போதும் ரயில் வண்டி என்றே சொல்லலாம். ஆதே நேரத்தில் ATOM என்பதை தமிழாக்கம் செய்யும் போது நாம் ஏற்கனவே தமிழில் உளள் அணு என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. காப்பியும் நாம் ஏற்கனவே பயன்படுத்தியுள்ள சொல்தான்.
பஸ் என்ற சொல் தமிழ் உச்சரிப்புக்கு உகந்தது அல்ல. இதை பசு என மாற்றினால் பசுமாடாக அர்த்தப்படுகிறது. இதற்கு தமிழ் உச்சரிப்புக்கு பொருந்திய சொல்லாக பேருந்து என மொழியாக்கம் செய்துள்ளோம். ஆரம்பத்தில் இது ஏளனமாக கருதப்பட்டது. இன்றோ அனைவரும் பயன்படுத்தும் எளிய சொல்லாகி விட்டது.
இன்று ஒவ்வொரு பல்கலைகழகமும் ஒவ்வொரு அகராதியை வைத்திருப்பதால் தான் தனித்தமிழே ஒரு அகாரதி பிடித்த அரசியலாகிவிட்டது. உலகம் முழுவதும் யுனிக்கோடு என்ற கோட்பாட்டில் பொது தமிழ் எழுத்துரு கொணடுவந்து நாமெல்லாம் இணைந்திருக்கிறோம். அதே வழிமுறையில் உலகம் முழுவதும் ஒரு பொது கலைசொல் அகராதியை கொண்டுவரமுடியாத என்ன?
தமிழில் மேற்கத்திய அறிவியல் கற்பிக்க முற்பட்ட ஆரம்பகாலங்களில் பௌதீகம், ரசாயனம், கணித சாத்திரம், அடிப்படை ராசிகள், என்றெல்லாம் வடமொழி கலப்போடு எழுதினார்கள். இன்றோ இயற்பியல், வேதியல், கணிதம், அடிப்படை அளவீடுகள் என எளிமையான தமிழ்சொற்களாக்கப்பட்டுள்ளன. இது போல எளிமைபடுத்தப்பட்ட அறிவியல் சொற்களை ஒரு பொது அகராதியில் கொண்டு வரவேண்டும்.
தமிழில் இல்லாத புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாம் தான் தமிழில் பெயர்சூட்டியாக வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் ஆளுக்கு ஒரு பெயர்சூட்டி அரசியல் செய்வதால் தான், தமிழில் அறிவியல் சொற்கள் கடினமானதாகிறது. பயன்படுத்தவும் முடிவதில்லை.
உலகம் முமுவதும் உள்ள தமிழரிஞர்கள் ஒன்றிணைந்து உலகாளாவிய பொது கலைச்சொற்களை தொகுக்க வேண்டும். அதை உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஏற்று பயனபடுத்த முன்வர வேண்டும். யுனிக்கோடு எழுத்துருவை பயன்படுத்தும் நாம் சொற்களை மட்டும் பயன்படுத்த மறுப்போமா? என்ன?
தனித்தமிழ் என்றால் கொடுந்தமிழ் என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இன்று மலையாளிகள் டீயை சாயா என்று தான் உலகம் முழுவதும் சொல்கிறார்கள். நாம் தான் டீயை எப்படி தேனீர் என்று சொல்வது என தாழ்வுமனப்பான்மை கொண்டுள்ளோம். பயன்படுத்த பயன்படுத்த எல்லாம் எளிமையும் இனிமையுமாகிவிடும்.
தமிழர்களே தனித்தமிழின் அவசியத்தை உடனடியாக உணருங்கள். உலகின் மிகப்பழமையான மொழிகளில் இருந்த அரிய இலக்கியங்கள் எல்லாம் அம்மொழிகளின் அழிவால் அழிந்து திரிந்துவிட்டன. தமிழ் மொழியில் உள்ள திருக்குறள் என்ற அரிய சொத்துக்காகவாவது நாம் தனித்தமிழை காத்தாக வேண்டும். இல்லாவிட்டால் திருக்குறளும் எதிர்காலத்தில் திரிக்கப்பட்டுவிடும்.
வலைப்பதிவு என்பது பொழுதுபோக்குக்காகவும், அரட்டை அடிப்பதற்காகவும் மட்டும் பயன்படுத்தக்கூடியது அல்ல. வலைப்பதிவர்களால் பல புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நாம் ஏன் உலகெங்கும் ஒரு பொது தமிழ்கலைச்சொல் அகராதியை படைத்து பயன்படுத்தக்கூடாது? அந்த முயற்சிக்கு வலைபதிவர்கள் துவக்கமிட முடியாதா என்ன?
தமிழ் வலைப்பதிவுலகில் ஏராளமான மூத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள், இளைஞர்- இளைஞிகள் இருக்கிறார்கள். நாமெல்லாம் இணைந்து முயற்சித்தால் நிச்சயம் உலகளவில் ஒரு பொது கலைச்சொல் அகராதியை படைக்க முடியும். இந்த முயற்சிக்கு முதற்கட்டமாக ஆலோசனைகளை சொல்லுங்கள். அதை எப்படி செயல்படுத்துவது என விரிவாக விவாதியுங்கள். அதற்கு என தனியாக பொது வலைப்பதிவை ஆரம்பிக்கலாமா? விக்கிபீடியா போன்ற பொது வலைதளத்தில் படைக்கலாமா? அல்லது தனியாக ஒரு இணையதளமே அமைக்கலாமா? ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதற்கு முன்னர் யாரேனும் இதுபோன்ற முயற்சிகள் எடுத்திருந்தால் தெரியப்படுத்துங்கள்.
நான் தமிழ்நாட்டில் பத்திரிக்கை துறையில் இருப்பதால் என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய முடியும். இது சம்மந்தமாக கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களிடம் ஆலோசனைகள் கேட்டுள்ளேன். நாம் படைக்கும் பொது சொல் அகராதியை பள்ளி கல்லூரி பாடபுத்தகங்களிலும், தமிழின் அனைத்து பத்திரிக்கை, செய்தி, தகவல் தொடர்பு நிறுவனங்களிலும் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.
நான் திரும்ப திரும்ப வலியுருத்த விரும்புவது இது தான். யுனிக்கோடு என்ற பொது எழுத்துருவை இன்று னைத்து தமிழர்களும், செய்தி, தகவல் தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்தும் போது ஒரு பொது கலைச்சொல் அகராதியை பயன்பாட்டுககு கொண்டு வரமுடியாதா என்ன?
ஏரத்தாழ மரண நிலைக்கே சென்றுவிட்ட ஒரு மொழியை இந்திய அரசு கோடிகள் செலவிட்டு செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்றும் போது, அகில உலக மொழியாக இணையத்தில் கம்பீரமாய் வலம்வரும் தமிழை பூச்சூடி புத்தாடையணிவித்து புதுப்பெண்ணாய் அலங்கரிக்கமுடியாத என்ன?
16 comments:
//நாம் தான் டீயை எப்படி தேனீர் என்று சொல்வது என தாழ்வுமனப்பான்மை கொண்டுள்ளோம்//
தே, தேத் தண்ணி போன்ற சொற்கள் சிங்கை, மலேசியா நாடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் சொல். தமிழகத்தில் கிராமங்களில்கூட தேத்தண்ணி இன்னும் புழக்கத்தில் உள்ளது.
--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
திரு. தறுதலை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சமசுகிரும் படித்தவர்களை மட்டுமே பாதித்தது. ஆனால் ஆங்கிலம் இன்று கிராமங்கள் வரை ஆதிக்கம் செலுத்துகிறது. எண் என்ற சொல்லே வழக்கில் இல்லை எலலாம் நெம்பர் தான்.
தேத்தண்ணீர் என கிரமத்திலாவது இருக்கிறதே என ஆறுதல் பட்டுக்கொள்ளும் போக்கை மாற்றி. உலகளவில் தமிழர்களுக்குள் தமிழ் மட்டுமே பேசும் பழக்கத்தை கொண்டுவரவேண்டும்.
இல்லாவிட்டால் மெல்ல தமிழ் இனி சாகும்.
நீங்கள் வளவு இராமகி ஐயாவின் பதிவு தொகுப்புகளை ஒருமுறை வாசித்துப் பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.
அருமையானப் பதிவு
//இளைஞர்- இளைஞிகள்
இளைஞர் என்றச் சொல் ஆண்ப்பாலுக்கும் பெண்ப்பாலுக்கும் பொதுவானச் சொல் அன்றோ
தவறு இருப்பின் மன்னிக்கவும்
good post. but .)
உறுதிபட என்னால் சொல்ல இயலவில்லை. ஆனால், புழக்கத்தில் நான் கண்டது:
இளைஞர் - பொதுப்பால்
இளைஞன் - ஆண்பால்
யுவதி - பெண்பால்
வணக்கம்...
நல்லதொரு ஆக்கம், வாழ்த்துக்கள்...
teenagers என்பதற்கு இளையர்கள் என்கிற சொல்லை சிங்கையில் பயன்படுத்துகிறார்கள்.
நன்றி!
// பாரி.அரசு said...
வணக்கம்...
நல்லதொரு ஆக்கம், வாழ்த்துக்கள்...
teenagers என்பதற்கு இளையர்கள் என்கிற சொல்லை சிங்கையில் பயன்படுத்துகிறார்கள்.
நன்றி!
//
பாரி.அரசு,
இளையர்கள் என்பது பொதுச் சொல், டீனேஜர்களுக்கு பதின்ம வயதினர் என்றே குறிப்பிடுவர்காள்
வலைபதிவு அன்பர்களுக்கு...
இளைஞர், இளையர், தேனீர், தேத்தண்ணி, பேருந்து போன்ற சொற்கள் எல்லாம் நாம் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டு வருவது. இவை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு சொல்லில் குறிப்பிடப்படும். அது அப்படியே குறிப்பிடப்படட்டும்.
நமது இப்போதைய தேவை புதிய சொற்களுக்கான அகராதி. புதிதாக விஞ்ஞான உலகில் வரும் சொற்களுக்கு புதிய தமிழ் சொல் அகராதியை படைப்போம். அந்த அகராதி வலவலா என இல்லாமல் கையடக்கமாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும். புதிய அறிவியல் சொற்களுக்கு மட்டுமான ஒரு அகராதி அதுதான் நமது இப்போதைய தேவை.
அதை அமைப்பது குறித்த ஆலோசனைகளை பின்னூட்டமாக பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.
அன்புமிக்க குழலி,
<< காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களைக் கிரந்த எழுத்துக்கள் கலக்காமல் எப்படித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். >>
ஆஸ்திரேலியா என்பதை ஆசுதிரேலியா என்றும் மிஸ்ஸிப்பி என்பதை மிச்சுசூப்பி என்றும் "கஸ்தூரி" என்பதைத் கத்தூரி என்று எழுதினால் பாரதியார் தமிழரிடம் குற்றம் கூறியதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்.
<< சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! ….>>
தமிழின் கைத்திறனைக் கிரந்த எழுதுக்கள் அழிக்க முடியா. தமிழ் வலுவான மொழி. 4000 ஆண்டுகள் வாழ்ந்த தமிழ் அழியாது. யாரும் தமிழை அழிக்க முடியாது. எத்தனை ஆங்கிலச் சொற்கள் கலந்தாலும் தமிழ் அழியாது. கிரந்த எழுத்துக்கள் எதுவும் இல்லாமல், ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் விஞ்ஞானத் தமிழ் நூல்களைப் படைக்க முடியாது
ஆங்கிலேயன் "தூத்துக்குடியை" டியூட்டிகுரின் என்றும் "தஞ்சாவூர்" என்பதைத் டாஞ்சூர் என்றும் எழுதினான். ஆங்கிலத்தில் தூத்துக்குடி என்றும் தஞ்சாவூர் என்றும் எழுத முடியும்.
ஆங்கிலேயன் செய்த அதே தவறைத் தமிழரும் செய்யலாமா ?
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
திரு. S.Jayabarathan அவர்களே
பாரதி பாடலை சரியாக கவனித்தீர்களா என தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் //சொல்லும் திறம் தமிழுக்கு இல்லை// என்பதை பாரதி சொன்னதாக நீங்கள் கருதியிருந்தால் உங்கள் கருத்துக்கள் மிகதவறானதாகவே படுகிறது. உங்கள் மேலான கவனத்திற்கு
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை - இங்கு
கூறத்தகாதவன் கூறினான் கண்டீர்
புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே- அந்த
மேன்மை கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லும் திறம் தமிழ்மொழிக்கு இல்லை
மெல்லத்தமிழ் இனி சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
//என்று அந்த பேதை உரைத்தான்//-ஆ
இந்த வசை எனக்கு எய்திடலாமோ
சென்றுடுவீர் எட்டு திக்கும்
கலைசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
சொல்லும் திறம் தமிழுக்கு இல்லை எனவும், மெல்லத்தமிழ் இனி சாகும் எனவும் பாரதி சொல்லவில்லை. அப்படி சொன்னவனை கண்டு வீறுகொண்டு எழுந்தவர் பாரதி. அதை தான் இந்த பாடலில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழுக்கு திறம் இல்லை என்ற களங்கத்தை போக்கவே எட்டுத்திற்கும் செல்ல சொன்னார் பாரதி. சென்று மீண்டும் தமிழில் திறம் இல்லை என்று சொல்வதற்கு அல்ல.
அதே பாரதி தான் ரஷ்யா என்பதை ருசியா என்றும், திருதிராஷ்டிரன் என்பதை திருதிராட்டினன் என்றும், பீமனை வீமன் என்றும் பீஷ்மாச்சாரியார் என்பதை வீட்டுமாச்சாரியார் என்றும் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார் என்பதையும் தங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.
மேலும் நீங்கள் குறிப்பிட்ட அஸ்திரேலியா- ஆசித்ரேலியா, ஹங்கேரி-அங்கேரி, கங்கேரி, காஷ்மீர்-காசுமீர், கிரீஸ்-கிரிசு, கிரேக்கம், இப்படி மிசிசிப்பி, மிசௌரி, ஆங்காங், என எல்லாவற்றையுமே தமிழில் எழுத முடியும்.
இதை பாரதியே செய்துகாட்டியிருக்கிறாரே.
பாரதியின் கனவும் எனது வேண்டுகோளும் இது தான்.
தங்களை போன்ற துறைசார்ந்த அறிவியல் அறிஞர்கள் கலைசெல்வங்களை எல்லாம் எளிய தமிழில் கொண்டுவர வேண்டும் என்பது தான்.
அறிவியலை தமிழில் தரும் தங்களை போன்றோரின் மகத்தான பணி தமிழர்க்கு மட்டுமல்ல தமிழுக்கும் தேவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அறிவியலை தமிழில் கொண்டுவருவது கடினமான செயல் அல்ல. இது குறித்தும், தங்களின் மொழிகட்டுரைகள் குறித்தும் இதோ அடுத்து எழுதுகிறேன்.
நன்றி.
மதிப்பிற்குரிய Jayabarathan S ஐயா
//வேதியல் என்றால் இரசாயனம் என்று படாமல் என் காதில் வேதத்தை பற்றியது என்று ஒலிக்கிறது. வேதம் என்பது தமிழ்ச் சொல்லில்லை. அதுபோல் கணிதம் என்பதும் தமிழ்ச் சொல் இல்லை. முகம் என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன ?//
வேதியல் என்றால் வேதத்தை பற்றியதாக ஒலிக்கிறது என்பது தவறான விவாதம். வேதியல் என்பதற்கும் வேதவியல் என்பதற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு இருக்கிறது. நீங்கள் சொல்வதை போலவே தான் தொல்காப்பியத்தில் ஓரை என்ற சொல் வடமொழியின் ஹோரை என்ற சோதிட சொல்லை குறிப்பதாக வாதிட்டார்கள். ஆனால் ஓரை என்பதற்கு விளையாட்டு என்ற பொருள் இருப்பதை தொல்காப்பியத்திற்கும் முந்தைய இலக்கியங்களில் இருந்து சுட்டிகாட்டியவுடன் வடமொழிவாதிகள் வாயடைத்து போனார்கள்.
ஒரே சொல்லே பலமொழிகளில் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மொழியிலும் பொருள் வேறுபடும். அதற்காக இந்த சொல் இந்த மொழியில் இல்லை என்றும். இந்த மொழியினுடையது தான் என்றும் வாதிட முடியாது.
அதுபோல தான் முகம், கணிதம், சங்கம். அகத்தியர் உட்பட சொற்கள் எல்லாம். ஹிருதாய என்றுவிட்டால் இதயம் என்ற சொல் தமிழில் இல்லை என்றுவிடமுடியுமா? தமிழர்களுக்கு இதயம் இல்லையா? அதை அவர்கள் என்னவென்று குறிப்பிட்டார்கள்? அல்லது இதயம் என்று ஒன்று இருக்கிறது என்று தமிழர்களுக்கு தெரியாமல் போனதா? நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்றே இதயம், முகம் என்பவைகளை வடமொழி சொல்லாக ஏற்றுவிட்டால் இதற்கு நிகரான அழகிய தமிழ் சொல் எங்கே? அது ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது தானே இங்கு பொருள்.
இதயம் என்ற தமிழ் சொல்லை தான் வடமொழி எழுத்து சேர்த்து ஹிருதயா என்றார்கள் என்றால உங்களால் மறுக்க முடியுமா? கணக்கு என்பதை தான் கணித சாஸ்த்திரம் என்றிருக்கிறார்களே ஒழிய கணக்கு என்பது தூய தமிழ் சொல்தான்.
மொழிகளில் பிறமொழி சொற்கள் கலந்து இருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. அதேவேளையில் தமிழில் சில சொற்களை சொல்ல முடியாது என்பதை தான் மறுக்கிறேன். சொல் கலப்பது உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் உள்ள இயல்பு. எழுத்து கலப்பது என்பது மொழிக்கு வழங்கும் சாபகேடு.
//மிகக் கடினமான ஆர்கானிக் கெமிஸ்டிரி என்னும் நூலை எப்படித் தமிழில் எழுவது என்று சொல்லுங்கள் ?//
நீங்கள் கூறும் ஆர்கானிக்க கெமிஸ்டிரி என்பதை கனிம வேதியல் என்று பல்கலைகழக பாடம் வரை தமிழ்படுத்தி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு oxygen என்பதை ஆக்சிசன் என்று குறிப்பிட்டதோடு மட்டும் நிற்காமல் உயிர்வளி என்று மூன்றாம் வகுப்பிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதை எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் தமிழை வடமொழி எழுத்து இல்லாமல் எழுதமுடியும். தமிழ்படுத்தவும் முடியும். அப்படி தமிழ் படுத்தினால் இன்னும் கருத்தொன்றி சிந்தனையை செலுத்த முடியும் என்பதற்காக தான். உங்களுக்கு ஏற்படுகின்ற மொழி தட்டுப்பாடு எதிர்காலத்திலும் நீடிக்க கூடாது என்ற நோக்கில் தான் குழந்தைகளிடம் இருந்தே ஆரம்பித்துவிட்டார்கள். இந்த முயற்சியல் இன்றைய குழந்தைகளுக்கு எதிரகாலத்தில் அறிவியல் தமிழ் இன்னும் எளிமைப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
//தற்போது கல்லூரி விஞ்ஞானப் பாடங்கள் எல்லாம் ஏன் ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன ? எப்போது விஞ்ஞானத் தமிழ் நூல்கள் வெளிவரும் ? யார் இனி எழுதப் போகிறார் ?//
தங்களை போன்ற தமிழ் அறிவியலாளர் இப்படி பேசுவது வருத்தமாக இருக்கிறது. நீங்கள் எல்லாம் தான் எழுதவேண்டும். சொல்லை இலக்கணத் தமிழில் இருந்து தான் எடுக்கவேண்டும் என்பது நமது வாதம் அல்ல. எந்த சொல்லையும் தமிழ் உச்சரிப்புக்குள் கொண்டுவரவேண்டும் என்பது தான் நமது வாதம். உதாரணமாக போட்டான் என்பது தமிழுக்கு புதிய சொல் இதற்கு ஆற்றல் சிப்பங்கள் என்று தான் தமிழில் கொண்டுவரவேண்டும் என்பதல்ல எனது வாதம். ஒலிக்க தமிழில் தனி எழுத்து சேர்க்க வேண்டும் என்பதை ஏற்க முடியவில்லை. அதே போல தான் கடவுள் துகள்(அடிப்படை துகள்) என்பதை கிக்சு போசன் என்று தமிழில் எழுதமுடியாத என்ன? அதை தானே கேட்கிறோம்.
தங்களை போன்ற மூத்த தமிழ் அறிவியலாளர் கவனத்திற்கு
ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் இருந்து அறிவியல் சொற்களை தமிழுக்கு கொண்டுவரும்போது மொழிபெயர்க்க தான் கால அவகாசம் தேவைப்படும் ஒலி பெயர்க்க அல்ல. எந்த ஒரு படைப்பாளியும் தனது கண்டுபிடிப்புகளை எழுத்துக்களாக்கும் போது வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்க முடியாது. ஆனால் ஒலிபெயர்க்க முடியாது என்பது விதண்டாவாதமாகவே படுகிறது.
நான்கு எழுத்துக்களால் தமிழுக்கு ஏற்படும் நன்மையை பட்டியலிட்டுள்ளீர்கள். நான்கு எழுத்துக்களை சேர்ப்பதால் பல்லாயிரம் சொற்கள் தமிழுக்கு வரும் என்றிருக்கிறீர்கள். அந்த நான்கு எழுத்துக்கள் சேர்க்காமல் ஒலிபெயர்த்தாலும் அதே பல்லாயிரம் சொற்கள் தானே வரப்போகிறது. கூடுதலாக தமிழ் ஒலிப்புக்கு கட்டுப்பட்டு சொற்கள் இன்னும் அழகாக வருகிறதே. இதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள். அந்த நான்கு எழுத்துக்களை அனுமதித்த காரணத்தால் தான் இன்று அகத்தியர், சங்கம், முகம், கணிதம் இதையெல்லாம் தமிழ் சொல்லே அல்ல என்ற இழுக்கு தமிழுக்கு வருகிறது.
தங்களை போன்ற தமிழ் அறிவியலாளர்களிடம் நான் பணிவாக வேண்டிக்கொள்வது:
எட்டு திக்கிலும் உள்ள அறிவியல் சொற்களை தமிழுக்கு கொண்டுவரும்போது தமிழில் மொழிபெயர்க்க இயலாவிட்டாலும் தமிழ் எழுத்துக்களில் ஒலிபெயர்பாவது செய்யுங்கள். தமிழ் அறிஞர்கள் அதை தமிழ்சொற்களாக மொழிபெயர்ப்பு செய்துவிடுவார்கள். தங்களை போன்றோரின் மொழிபெயர்ப்பால் அறிவியலை அறிந்த தமிழறிஞர்கள் பல்லாயிரம் சொற்களையும் தமிழ்படுத்திவிட்டார்கள். அவை ஒன்றாம் வகுப்பு முதல் பலகலைகழகங்கள் வரை எளியை தமிழில் கற்பிக்கப்பட்டு வருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தங்களுக்கு அர்பணிக்கிறேன்.
பாடபுத்தகத்தில் பயன்படுத்தும் எளிமையான சொற்கள் எல்லாம் இன்னும் கணிணியிலும், உலக அரங்கிலும் பழக்கத்துக்கு வரவில்லை. அந்த குறையையும் போக்க தான் யுனிக்கோடு போன்ற பொது எழுத்துரு போல உலகத்தமிழர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு கலைசொல் அகராதியை படைக்க உதவுங்கள் என கேட்கிறேன்.
இந்த கலைசொல் அகராதி புதிய சொற்களுக்கானதாக மட்டும் இருந்தால் இன்னும் எளிமையாக இருக்கும். புதிய சொற்களை தரவேண்டிய கடமை தங்களை போன்ற துறைசார்ந்த அறிவியலாளர்களுக்கு இருக்கிறது. அறவியலாளர் அறிமுகப்படுத்தினால் மட்டுமே அறிவியல் சொற்கள் தமிழறிஞர்களுக்கு தெரியவரும். அப்படிப்பட் நிலையில் அறிவியலாளர்கள் ஒரு பொது அகராதியை கையாளும் போது ஒரு புதுய சொல்லின் முதல் அறிமுகமே தமிழில் வந்துவிடுகிறது. இதனால் அந்த சொல் கடைசி வரை தமிழில் பழக்கப்படுகிறது.
உதாரணமாக block holl என்ற அறிமுகத்தை நீங்கள் கருந்துளை என்று தமிழாக்கம் செய்துள்ளீர்கள். அந்த அறிமுகத்தில் எனக்கு என்றும் கருந்துளை தான் பழக்கத்தில் வரும். இதே போல புதிதாக வரும் எல்லா சொற்களையும் முதல் அறிமுகத்திலேயே தமிழில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதே எனது கருத்து.
நன்றி.
//நாம் தான் டீயை எப்படி தேனீர் என்று சொல்வது என தாழ்வுமனப்பான்மை கொண்டுள்ளோம்//
yes.it`s ...
12ஆம் நூற்றாண்டு ஜெயின கன்னட கவிஞர் நயசேனா பாடியதை பாருங்கள்.
If anyone wants to write in
Sanskrit let them,
but is it right
if they bring Sanskrit into Kannada?
Is it right to mix ghee with oil?
மேலும் அவரைப் பற்றி:
thirdeyemoment.blogspot.com/2006/07/sanskrit-kannada-and-poet-nayasena.html
இன்றைய கன்னடத்தில் சமஸ்கிருத்தை / தமிழை எடுத்துவிட்டால், நீங்கள் சொன்னதைப்போல் 'பண்ணி' கன்னடத்தைத்தான் காணமுடியும். அந்த நிலை தமிழுக்கு வரவேண்டாம்.
- ஜெ.பி.இரவிச்சந்திரன், பெங்களூர்
///TRAIN என்ற சொல்லை தமிழில் புகைவண்டி, தொடர்வண்டி என மொழியாக்கம் செய்யும்போது தான் அங்கு அதன் எளிமை குறைக்கப்படுகிறது. ரயில் என்றே மொழியாக்கம் செய்யலாம். அதே போல தான் காப்பியை குழம்பி என மொழியாக்கம் செய்வது அபத்தமாக இருக்கிறது.///
புகைவண்டி, தொடர்வண்டி கடுமையான சொற்களா?
'குழம்பி' என்று யார் சொன்னார்?
நாம்தான் சரியாகத் தெரிந்து
கொள்ளாமல் குழம்பிப் போகிறோம்.
பாவாணரின் மொழிபெயர்ப்பு 'குளம்பி'.
--------------------
'கடிசொல் இல்லை காலத்துப் படினே' -(தொல்காப்பியம் . சொல்.935)
---------------------
///நாம் தான் டீயை எப்படி தேனீர் என்று சொல்வது என தாழ்வுமனப்பான்மை கொண்டுள்ளோம். ////
ஒருவர் தன் தாய்மொழியில் சொல்ல நினைப்பது அவருடைய தாழ்வு மனப்பான்மை என்று எந்த அகராதி சொல்கிறது?
--------------------
<< காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களைக் கிரந்த எழுத்துக்கள் கலக்காமல் எப்படித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். >>
********
தமிழரைத் தவிர மற்ற மொழிக்காரரான எவர் தமிழ்நாடு, தமிழ்மொழி என்று எழுதும்போது 'ழ' கரத்தைப்பயன்படுத்தி எழுதுகிறார்கள்?
***********
கீழ்க் காணும் வரிகளைப் படியுங்கள்:
///பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப் படுவதுமன்றிப் பலகைக் குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்லவேண்டும். ‘ஸ்லேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக்கூடாது. .............................................................
மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ‘அவயவி’ சரியான வார்த்தை இல்லை. ‘அங்கத்தான்’ கட்டிவராது. ‘சபிகன் சரியான பதந்தான். ஆனால், பொதுமக்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப்பார்த்தேன். ‘உறுப்பாளி’ ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை, என்னசெய்வேன். கடைசியாக ‘மெம்பர்’ என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆர அமர யோசித்துப் பார்த்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன். .........
தமிழ்நாட்டில் முழுதும் தமிழ்நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நம் பத்திராதிபர்களிடம் காணப் படுகிறது.”///
--------------
இந்த வரிகளை எழுதியவர் யார் தெரியுமா?
1920இல் "தேசியக்கல்வி" என்ற தலைப்பில் பாவலர் சுப்பிரமணிய பாரதியார் எழதியுள்ள வற்றில்தான் இவ்வரிகளும் உள்ளன.
பாரதியாரையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. தமக்கென்று தனியே கருத்தேற்றம் செய்து கொண்டு அதையே வலியுறுத்த முயன்றால்.......?!
/// காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களைக் கிரந்த எழுத்துக்கள் கலக்காமல் எப்படித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். ///
********
/// தமிழரைத் தவிர மற்ற மொழிக்காரரான எவர் தமிழ்நாடு, தமிழ்மொழி என்று எழுதும்போது 'ழ' கரத்தைப்பயன்படுத்தி எழுதுகிறார்கள்? ///
நண்பர் சிக்கிமுக்கி,
உங்கள் மேற்கண்ட வாசகம் எனது கேள்விக்கு முழுமையாக நேரிடையாகப் பதில் அளிக்க வில்லை. நீங்கள் திக்குமுக்கி என்பது நன்றாகத் தெரிகிறது.
சி. ஜெயபாரதன்
Post a Comment