சோப்புக்காக போராடாத பெண்கள்...
Thursday, August 28, 2008
தற்போது பெட்ரோல் விலை உயர்வு என்னமோ 15 சதவீதம் தான். ஆனால் இதை மையமாக வைத்து அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கும் 45 முதல் 60 சதவீதம் வரை விலையை உயர்த்தி விட்டார்களே இது என்ன நியாயம்?
போக்குவரத்து செலவு அதிகம் என்பதை காரணம் காட்டி 9 ரூபாய்க்கு விற்ற சோப் இப்போது ரூ.13., 7 ரூபாய் பிஸ்கெட் ரூ.10., 10ரூபாய் பேஸ்ட் 15., பேனா, பென்சில், காகிதம் என எல்லா பொருட்களுக்கும் 60 சதவீதம் வரை விலையேற்றிவிட்டார்கள். இதையெல்லாம் யாரை கேட்டு செய்கிறார்கள்?
பெட்ரோல் விலைஉயர்வை கண்டித்து அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறோம். அரசாங்கமும் ஏதோ பதிலாவது சொல்கிறது. ஆனால் பல பொருட்களின் விலை உயர்வு குறித்து யாரை கேட்பது? யார் பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள்?
பெட்ரோல் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் பணவீக்கம் என்றெல்லாம் காரணம் காட்டி தனி அரசாங்கம் நடத்துகிறார்கள் பெரும் முதலாளிகள். அந்த அரசாங்கத்தில் நாம் எல்லோரும் அடிமைகளாக இன்னும் சொன்னால் கொத்தடிமைகளாக இருக்கிறோம்.
காய்கறி, மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் விலை உயர்கிறது என்றால் விளைச்சல் குறைவு என்பார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் எதற்காக விலையேற்றிக்கொண்டார்கள்?
போக்குவரத்து செலவு அதிகம் எனகிறார்கள். அப்படியானால் பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ற போல் தானே விலையேற்றமும் இருக்க வேண்டும்.
போக்குவரத்து, வரி, விளம்பர செலவு என அனைத்து சுமைகளையும் நுகர்வோர் தலையிலேயே கட்டி விடும் முதலாளிகள், தங்கள் லாப சதவீதத்தை மட்டும் குறைத்துக்கொள்ள முன்வருவதில்லை.
இவர்களை கட்டுப்படுத்த அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ தயங்குகிறார்கள். பணத்தை கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வாயை அடைததுவிட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் இந்திய நுகர்வோர் தலையில் மிளகரைத்து விடலாம் என்பது தான் நிதர்சன உணமையாக இருக்கிறது.
அடிப்படை பொருட்கள் இப்படி கட்டுக்கடங்காமல் விலையேறிக்கொண்டிருக்க வாயில் ஆயில் பூலிங் தேவையா? இதையெல்லாம் ஏன் மக்கள் யோசிக்க மறுக்கிறார்கள்?
விளம்பரம் தேவை தான் அதற்காக ஒட்டுமொத்த முதலீட்டையும் விளம்பரத்தில் முடக்கிவிடுவது வியாபார தருமமாகுமா?
1 ரூபாய் தானே என அலட்சியப்படுத்தி., 100% விலைஉயர்வை நாம் மறந்துவிடுகிறோம்.
இன்று ஒரு பொருளுக்கு அரசு வரிஉயர்வு விதிக்கிறது என்றால் சிறுவியாபாரிகளும் பொதுமக்களும் தான் எதிர்த்து போராடுகிறார்கள். முதலாளிகள் வாயே திறப்பதில்லை. காரணம் வரி என்பது அவர்கள் லாபத்தை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. எல்லா சுமையையும் நுகர்வோர் தலையியே கட்டி விடுகிறார்கள். ஆனால் வருமானவரி அதிகப்பு, வருமானஉச்சவரம்பு இதைபற்றி அரசு பேச்சு எடுத்தாலே உடனே கூக்குரல் இடுகிறார்கள் பெரும் முதலாளிகள்.
இன்று பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை எதிர்த்து பங்க உரிமையாளர்களும் பொது மக்களும் தான் போராடிக்கொண்டிருக்கிறார்களே தவிர எண்ணை நிறுவனங்கள் வாயே திறப்பதில்லையே ஏன்?
சிறுமுதலீட்டாளர்கள் தங்கள் பொருட்களுக்கு குறைந்த லாபத்தையே நிர்ணயிக்கிறார்கள். ஆனால் பெரும் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை குறைந்தபட்சமே 50% மேல் தான் வைத்துளளன. இதை தட்டிக்கேட்க எந்த அரசியல்வாதியோ, நுகர்வோர் அமைப்போ இல்லை.
இதே நிலை நீடித்தால் சிறு முதலீட்டாளர்கள் அழிவது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒட்டுமொத்த உலக மக்களுமே பெரும் முதலாளிகளின் அடிமைகளாகும் சூழல் வந்துவிடுமே.
வருமானத்துக்கு மட்டுமல்ல ஒரு பொருளின் லாபவிகிதத்திற்கும் அரசு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும். அதை முறையாக கண்காணித்து செயல்படுத்தவும் வேண்டும்.
குடிநீருக்காக போராடி சாதனை படைத்த பெண்களே கொஞ்சம் சோப்புக்காகவும் யோசியுங்க...
0 comments:
Post a Comment