ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது?
Sunday, September 14, 2008
ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை. இந்த பதிப்பில் விவாதிக்க வந்த பலபேர் அறிவியலுக்கு எதிரான பதிவாகவே பார்த்தார்களே தவிர, ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது என சிந்திக்கவில்லை.
சிலர் பதிவே அறிவியலுக்கு எதிரானது என்ற கோணத்திலேயே தங்கள் விவாதங்களை வைக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால். கடவுளை பற்றி கேள்வி கேட்டால உடனே அவனை நாத்திகன் என்றும். ஆன்மிகத்தை பற்றி கேள்வி கேட்டால் உடனே அவன் மதவாதி என்றும். அறிவியலை பற்றி கேள்வி கேட்டாலே அவன் ஒரு பிற்போக்குவாதி என்றும் முடிவு கட்டுவது போல் உள்ளது.
பதிவின் மைய கருதத்து இது தான்
// கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்க மில்லியன் கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியும், அணுகுண்டு சோதனைகளும், கடவுள் துகள் ஆராய்ச்சிகளும் தேவையா? சரி இத்தனை பணத்தை இரைத்து பரிசோதனையில் விஞ்ஞானிகள் சாதிக்கப்போவது என்ன? //
ஆனால் பெரும்பாலானோர் கேட்டது தொலைகாட்சி, செயற்கை கோள், செல்போன், இணையம் அணுசக்தி இதெல்லாம் வந்திருக்குமா? என்று தான்.
நாங்கள் பயனுள்ள அறிவியல் ஆராய்ச்சிகளை குறையோ குற்றமோ சொல்லவில்லை. அதை பதிவிலேயே தெளிவாக வலியுருத்தியுள்ளோம். ஆனால் பயனற்ற விபரீத ஆராய்ச்சிகளை தான் யோசிக்க சொல்கிறோம். அதுவும் உலகில் 70 சதவீதம் மக்களை பட்டினிபோட்டுவிட்டு தேவையற்ற ஆராய்ச்சிகள் தேவையா என கேட்கிறோம்.
பலரும் பதிவை அறிவியல் ஆராய்ச்சிக்கு எதாரானதாகவே வாதிட்டார்களே தவிர பசி பட்டினியால் சாகும் சக மனிதர்களை பற்றி ஆதங்கம் கூட படவில்லையே ஏன்?
இங்கு பதிவர் திரு. ஆ. ஞான சேகரன், திரு.வடுவவூர் குமார் இவர்கள் மட்டும் பசிபட்டினி பற்றி கொஞ்சம் தொட்டுப்பார்த்தார்கள்.
அவர்கள் சொன்னது இது தான்.
// பசி பட்டினி இவை எல்லா காலத்திலும் இருக்க தான் செய்கிறது. அதே போல அறிவியல் வளர்ச்சியும் ஒருபுறம் இருக்க தான் செய்கிறது. அதற்காக பசி பட்டினியை காரணம் காட்டி அறிவியல் ஆராய்ச்சிகளை நிறுத்தகூடாது என்றார்கள். அப்படி நிறுத்தியிருந்தால் இத்தனை நவீனங்கள் வந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.//
இங்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
இந்த கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியை மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரும் சாதனையாக பெருமையாக பேசும் நாம்., இதே காலத்தில் தினமும் பலகோடி சக மனிதர்கள் ஒரு வேளை சோற்றுக்கூட வழியில்லாமல் செத்துப்பிழைக்கும் வெக்கக்கேட்டை விவாதிக்க ஏன் முன்வருவதில்லை.
ஒரு நாய்குட்டியே ஒருவேளை உணவு இன்றி பட்டினி கிடப்பதை கண்டு நொடிந்துவிடும் மனித மனங்கள், எப்படி ஒருகோடி குழந்தைகள் உணவின்றி உறங்கும் கொடுமையை ஜீரணிக்கின்றன. - இது தான் நான் கானும் மிகப்பெரிய அதிசயம்.
இன்று அறிவியல் ஒரளவு தன்னிறைவு பெற்றுவிட்டது. ஆனால் மனிதகுலத்தின் அடிப்படை தேவைகள் தன்னிறைவு அடைவது எப்போது?
சரி இந்த ஆதங்கம் ஒருபுறம் இருக்கட்டும். அதை தான் விவாதிக்க ஒருவரும் முன்வருவதில்லையே.
அறிவியல் விவாதத்தற்கே போவோம்
தொழில்நுட்பங்களையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் நிறுத்தியிருந்தால் கோவை நகரமும் ஜப்பானும் வளர்ந்திருக்குமா என திரு. கோவை சிபியும், திரு. கையேடு பதிவரும் கேட்டிருந்தார்கள்.
தொழில் நுடபத்தை கற்றுக்கொள்வதையும், பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதையும் தவறு என நாங்கள் சொல்லவில்லை.
கோவையின் வளர்ச்சியும், ஜப்பானின் வளர்ச்சியும் பெருமையாகதான் இருக்கிறது. அதே நேரத்தில் கோவையை அழித்ததும் ஜப்பானை அழித்ததும் விபரீத ஆராய்ச்சிகள் என்பதை மறுக்கமுடியுமா?
இங்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
அதே ஜப்பான் பயனுள்ள ஆய்வுகளையும் பயனுள்ள தொழில்நுட்பங்களையும் படிக்காமல், விபரீத ஆய்வையும், தேவையற்ற படிப்பையும் மேற்கொண்டிருந்தால் இந்த வளர்ச்சியை எட்டியிருக்க முடியுமா?
அடுத்து திரு. தருமி அவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தார்.
// இந்தப் பதிவு எழுப்பும் கேள்வி மிகவும் அர்த்தமற்றதாகத் தெரிகிறது. தலைப்பே தவறு என்று நினைக்கிறேன். அறிவியலே கேள்விகளால் வளர்வதுதான்.//
கேள்வியும் & பதிலும் தான் அறிவியல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அறிவியல் துறையை ஏன் கேள்வி கேட்க கூடாது? அதுதானே தலைப்பு.
எப்படி ஆன்மீகத்துக்குள் மதவாதம் புகுந்துவிட்டால் ஆன்மீகம் நம்பகத்தன்மை அற்றுப்போகிறதோ, அதே போல அறிவியலுக்குள் அரசியல் நுழைந்துவிட்டால் அதை மட்டும் எப்படி நம்புவது?
அமேரிக்காவும், ரஷ்யாவும் நிலவுக்கு போனார்கள். உடனே உலகின் ஒவ்வொரு நாடுகளும் பின்னாடியே ஒவ்வொன்றாக நிலவுக்கு போயின. அதே போல ஒரு நாடு அணுகுண்டு தயாரித்தால் உடனே அடுத்த நாடுகள் அணுகுண்டு தயாரித்து விடுகின்றன. இதெல்லாம் எதற்கு? விண்வெளிக்கு போகும் தொழில்நுட்பம் உனக்கு மட்டும் தான் தெரியுமா? எனக்கும் தான் தெரியும் என பெருமைபட்டுக்கொள்ளவும்., அணுகுண்டு தயாரிக்க உனக்கு மட்டும் தான் தெரியுமா எனக்கும் தெரியும் என பயமுறுத்தவும் தான்.
அமேரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நிலவுக்கு மனிதனை அனுப்பியதிலேயே போட்டியும் நம்பதன்மையின்மையும் வந்துவிட்டது. உண்மையில் முதலில் அமேரிக்கா நிலவுக்கு அனுப்பிய நீலம் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணமே இன்னும் நம்பக தன்மையின்மையும், விவாதத்திற்கு உரியதாகவும் இருக்கிறது. (அது ஒரு தனி கதை)
சமீபத்தில் அமெரிக்க செயற்கைகோள் செயல்யிழந்து விட்டதாகவும் அதை ஏவுகனை தாக்கி ராணுவம் அழிப்பதாகவும் அமேரிக்கா அறிவித்தது. உடனே ரஷ்யா சீனா போன்ற நாடுகள் அமேரிக்கா விண்வெளி போருக்கு ஒத்திகை பார்ப்பதாக கண்டித்தனர். இப்படி அறிவியலுக்குள் அரசியல் போட்டி பொறாமைகளும், வீணான கவுரவ- பெருமைகளும் வந்துவிட்டது. இப்போது அறிவியலை எப்படி நம்புவது?
இங்கு இன்னொரு எதார்த்த கேள்வி வரலாம்.
சர்வதேச விண்வெளி மையம் என்பதும், சர்வதேச ஆய்வு கூடம் என்பதும் எல்லா நாட்டு உறுப்பினர்களையும் கொண்டது. இதல் அரசியல் இல்லை. எனவே இதை நம்பலாம் என் எதார்த்த எண்ணங்கள் மனதுள் வரும்.
உலகில் பெரும்பாண்மை நாடுகள் உருப்பினர்களாக உள்ள ஐ.நா சபையையும் அதன் நடுநிலைமையையும் ஏன் நம்புவதில்லை?
இதில் உறுப்பினர்களாக உள்ள அரசியல்வாதிகள் தானே இந்த அறிவியல் ஆய்வுக்கும் நிதி ஒதுக்குகிறார்கள்?
ஐ. நா சபை ஒரு பொதுவான அமைப்பு என்றாலும் அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உலகுக்கு பகிரங்கமாகவே தெரியும்.
அதே அரசியல்வாதிகள் கட்டுப்பாடில் இருக்கும் சர்வதேச விஞ்ஞான அமைப்புகளின் நம்பக தன்மையை மட்டும் ஏன் கேள்வி கேட்க கூடாது?
அறிவியல் என்றாலே கேள்விக்கு தெளிவான பதில் சொல்ல கடமைபட்ட ஒரு துறை தானே.
அப்படியானால் அறிவியல் துறையையே முடக்க சொல்கிரீர்களா என்ற விதண்டாவாத கேள்விகளுக்கு நாங்கள் பதில்சொல்ல விரும்பவில்லை.
நாங்கள் சொல்வது என்னவென்றால் ஆன்மீகத்திற்குள் மதச்சாயல் வந்ததும் எப்படி கேள்விகேட்டீர்களோ, அதே கேள்வியை அறிவியல் மீதும் வையுங்கள் என்று தான் சொல்கிறோம்.
திரு. கையேடு அவர்கள்
விண்வெளி ஆய்வையும் அணுகுண்டு சோதனையையும் மற்றவர்களை போல் நாமும் செய்து காட்டுவதை பெரு¬மாக நினைக்கிறோம். அதே சமயத்தில் மற்றவர்களை போல உணவு, உடை, குடிநீர், சுகாதாரம், கல்வி மருத்துவம் இந்த துறைகளில் எல்லாம் அவர்களுக்கு நிகராக முன்னேற வேண்டும் என நினைக்கிறோமா? இந்த முன்னேற்றத்தை காட்டிலும் விபரீத ஆராய்ச்சிகளின் முன்னேற்றத்தை தானே பெருமையாக நினைக்கிறோம். அதை ஏன் என கேள்வி கேட்க கூடாதா?
அப்படியானால் அறிவியல் சுகபோகங்களை அனுபவிக்கும் 30 சதவீதம் மக்களை தவிர மற்ற மனிதர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்களா? பட்டினியிலேயே சாகவேண்டும் என்பது அவர்கள் தலை எழுத்தா?
இங்கு எனது கேள்வி இது தான். 30 சதவீதம் பேர் அறிவியலின் சுகபோகங்களை அனுபவித்து விட்டு போங்கள். ஆனால் ஏற்கனவே வெந்து நொந்து நூலாகியுள்ள் ஏழைகளை சுரண்டி தான் நீங்கள் கடவுள் துகளையும் விண்வெளியையும் கண்டுபிடிக்க வேண்டுமா?
அறிவியலாளர்களே அரசியல்வாதிகளே, ஆன்மீகவாதிகளே, பிரமாண்ட அறிவியல் ஆராய்ச்சிகள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என நினைக்கும் எதார்த்தவாதிகளே, நீங்கள் எப்போது தான் ஏழையின் பக்கம் திரும்புவீர்கள்?
60 ஆயிரம் கோடி என்ன 600 லட்சம் கோடி கோடியே என எத்தனை வேண்டுமானாலும் செலவழித்துவிட்டு போங்கள். உங்கள் அறிவியலின் எல்லை முடியும் வரை காய்ந்த வயிறுடனும், வற்றிபோன தோலுடனும். பட்டினியாகவே காத்துக்கிடக்கிறோம். எல்லை முடிந்த பின்பாவது எங்கள் பக்கம் கொஞ்சம் கருணை காட்டுவீர்களா?
இது தான் ஏழையின் கேள்வி. இதற்கு அறிவியலின் பதில் என்ன?
2 comments:
//ஆனால் பெரும்பாலானோர் கேட்டது தொலைகாட்சி, செயற்கை கோள், செல்போன், இணையம் அணுசக்தி இதெல்லாம் வந்திருக்குமா? என்று தான்.//
வேறொரு கேள்வி கேட்டேனே? உலகில் முதன்மையாக இருக்கும் இராணுவ முதலீடு பற்றி.
பதிவு முழுவதும் விரவியிருக்கும் உங்களுக்கு சார்பான எடுத்துக்காட்டுகள் பலவற்றிலும், நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது அரசியலிடம், அறிவியலிடம் அல்ல.
ஒரு ஏழை ஏழையாக இருப்பதற்கு அறிவியல் காரணமல்ல.
நிற்க.
போன பதிவில் கேட்ட கேள்விதான் இதை நீங்கள் தவிர்த்ததனாலேயே மீண்டும் கேட்கிறேன். மேலும், இந்த பதிவில் பெரிதுபடுத்தப்பட்டிருக்கும் தேவையான, தேவையற்ற, பயனுள்ள, பயனற்ற, தன்னிறைவு போன்ற சார்புடைய எடுத்துக்காட்டுகளுக்காகவே மீண்டும் ஒட்டுகிறேன்.
ஆன்மீகம், இறையாண்மை, மெய்யியல், மனிதனை உய்வித்தல் போன்ற உலகப் பொதுவானக் கதையாடலைப் பெரிதும் கையாளும் ஆன்மீகம் எதிர்க்க வேண்டியது தேசியம், மற்றும் தேசிய எல்லைகளை. ஆப்ரிக்காவில் இருப்பவனும் அமெரிக்காவில் இருப்பவனும் இந்தியாவில் இருப்பவனும் அனைவரும் மனிதயினம் என்ற பொதுவான எண்ணத்தை வளர்ப்பதே முக்கியம்.
அப்போது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அறிவியலின் கண்டுபிடிப்புகளை அழிவிற்காகப் பயன்படுத்துவதற்கான அரசியல்தேவையே இருக்காது.
அறிவியலை எதிர்ப்பதற்காக (அல்லது தங்கள் பார்வையில் தேவையற்ற அறிவியலை எதிர்பதற்காக), ஏழ்மை, பசி என்றெல்லாம் பேசவேண்டியதில்லை.
அப்படியே பேசினாலும், ஆப்ரிக்காவின் சில நலிந்த நாடுகளுக்கான அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கப்படும் ஐ.நா வின் நிதிகள் இவ்வாராய்ச்சியினால் குறைந்திருக்கிறதா? அல்லது தடைபட்டிருக்கிறதா என்பது குறித்து குறிப்பிடுங்கள், மேலும் உரையாடவும் அறிந்து கொள்ளவும் உதவியாகயிருக்கும்.
அப்படியெதுவும் இல்லாத பட்சத்தில், உங்களுடைய கவலையெல்லாம், டார்வினிசத்தை நோக்கி அஞ்சிய நிறுவனங்களின் நடுக்கத்தின் மற்றுமொரு பரிமாணமாகயிருக்குமோ என்ற அய்யம் எழுகிறது.
நன்றி.
திரு. கையேடு அவர்களே உங்களின் பின்னூட்டத்தில் அமைந்த அத்தனை கேள்விகளுக்கும் தனித்தனியாக கண்மூடித்தனமாக அறிவியலை நம்பலாமா? - எதார்த்தவாதிகளே உஷார்! பதிவில் விரிவாக விடையளித்துள்ளேன். வாருங்கள் அங்கு விரிவாக விவாதிக்கலாம். நன்றி.
Post a Comment