தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?

இன்னும் சமசுகிருதத்தின் மீது வெறுப்பேற்றாதீர்கள்

Sunday, October 12, 2008

ஒரு நாட்டுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுபவர்கள் தீவிரவாதிகள் என்றால், ஒரு மொழிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்களை என்னவென்று சொல்வது?

சமீபத்தில் சில வலைப்பதிவுகளில் தமிழ் எழுத்துக்களில் சிலவற்றை சேர்ப்பது விலக்குவது குறித்த விவாதங்களை காண முடிந்தது. அந்த பதிவர்களின் ஒருசார் கருத்துக்கள் எனக்குள் கொதிப்பை மட்டுமல்ல சமசுகிருதத்தின் பால் இன்னும் வெறுப்பையும் கூட்டியது.

அந்த பதிவர் தமிழில் உச்சரிப்புக்கு எழுத்துபோதாது என்று சமசுகிருத ஆதிக்கம் நிறைந்த பல கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்த்து அதித்தமிழ் என புதுத்தமிழ் படைப்பதாக சொல்கிறார். அதுதான் அவருக்கு வசதியாக படுகிறதாம்.

அந்த பதிவருக்கு மட்டுமல்ல அவரை போலவே எதற்கெடுத்தாலும் சமசுகிருதத்திற்கும் ஆங்கிலத்திற்கும் வரிந்து கட்டும் சில பிரபல எழுத்தாளர்களுக்குமான கண்டிப்பும், ஏமாளி தமிழர்களுக்கான எச்சரிக்கையும் தான் இந்த பதிவு.

தமிழுக்கும், பிற மொழிகளுக்கும் உள்ள சிறப்பு வேறுபாடே எழுத்துஅமைப்பும், உச்சரிப்பு நடையும் தான.

உச்சரிப்பு என்பது வெவ்வேறு மொழியினருக்கு மட்டுமல்ல, ஒரே மொழினருக்கு கூட வேறுபடும். அத்துனை ஏன் ஒரு மனிதனுக்கே குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பும், வெயில்காலத்திலும் வேறு உச்சரிப்பும் வரும். கனேசன் என்ற சொல்லை குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பிலும், வெயில் காலத்தில் ஒரு உச்சரிப்பிலும் சொல்வோம்.

அதற்காக குளிர்காலத்தில் க என்பதற்கு ka.. என்றும் வெயில்காலத்தில் ga.. இடைபட்ட காலத்தில் ca.. என்றும் எழுத்துக்கள் கேட்பது மொழி பண்பாட்டுக்கு அழகு அல்ல.

ஒவ்வொரு உச்சரிப்புக்கும் ஒவ்வொரு எழுத்து கொடுத்தால் எந்த மொழிக்கும் எழுத்துக்கள் போதாது. எழுத்துக்கு ஏற்ப உச்சரிப்பு தான் பண்பட்ட மொழியே தவிர, உச்சரிப்புக்கு ஏற்ப எழுத்தை ஏற்பது பண்பட்ட மொழி அல்ல.

தமிழ் என்பது ஒரு பழமையான மொழி அதேநேரத்தில் பண்பட்ட மொழி. இதற்கு மிகச்சிறந்த ஆதாரமாக தமிழ் எழுத்துக்களே திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் இருந்து தமிழ் எழுத்துஅமைப்பு தனித்து நிற்கிறது. பிறமொழி எழுத்துக்களை சேர்த்து தான் வாழவேண்டும் என்ற நிலை தமிழுக்கு இல்லை.

தமிழ் தவிர இந்தியாவின் மற்ற மொழிகளின் எழுத்துநடைகள் எல்லாமே உச்சரிப்புக்கு ஏற்ப எழுத்துக்களை சுமந்துகொண்டிருக்கும். தமிழ் அப்படி அல்ல. எழுத்தை ஒட்டியே உச்சரிப்புகளையும் அமைத்துக்கொண்டது. இதற்காக தான் தமிழை இயல் இசை நாடகம் என தனித்தனியே பிரித்துள்ளார்கள்.

திருநெல்வேலி தமிழும், கோவை தமிழும், சென்னை தமிழும், ஈழத் தமிழும். சிங்கை தமிழும் இன்னும் உலகெங்கும் ஓங்காரமாய் ஒலிக்கும் ஒவ்வொரு தமிழும் மேற்சொன்ன இயல் இசை நாடகத்தில் ஒன்றிணைந்துவிடும்.

ஒரு மொழியினர் மற்ற மொழியினரோடு தொடர்பு கொள்ளும்போது இருமொழியிலும் சொற்கள், உச்சரிப்புகள் கலப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்மொழியில் வந்து கலக்கும் பிறமொழிகளின் சொற்களையும் உச்சரிப்பையும் எப்படி ஒலிபெயர்ப்பு செய்யவேண்டும் என தொல்காப்பியர் காலத்திலேயே தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்பட்டு விட்டது.

பிறமொழி சொற்களையோ எழுத்துக்களையோ தாங்கிதான் தமிழ் வளரவேண்டும் அல்லது வாழவேண்டும் என்ற நிர்பந்தம் தமிழுக்கு கிடையாது. பிறமொழி ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் தனித்தமிழை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு இன்றும் தமிழ் தன் இயல்பு மாறாமல் மிளிர்கிறது.

வடமொழியோடு ஒன்றிப்போவதை நாகரீகமாக நினைத்த சமுதாய போக்கால் தான், இன்று மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற திராவிட மொழிகளில் வடமொழி ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழிடம் வடமொழி ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை.

இன்று உலக அரங்கில் மிகபிரபலமாக பரவலாக பேசப்படும் ஆங்கில மொழி கூட தமிழோடு சேரும்போது தான் பண்படுவதாக ஆங்கில மொழியினரே ஒப்புககொள்கின்றனர்.

எதிர்காலத்தில் தட்டச்சுக்கு மாற்றாக பேசுவதை புரிந்துகொள்ளும் அதிவேக கணிணி பயன்பாட்டுக்கு எம்மொழி சிறந்தது என்ற ஆய்வில் தமிழுக்கே முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் தமிழில் ஒருசார் உச்சரிப்புகளுக்கு ஒரு எழுத்து என்ற எளிமை தான்.

தமிழில் மிக எளிமையான தெளிவான எழுத்துநடை, உச்சரிப்பு நடை இருக்கிறது. ஆங்கிலம் கூட தமிழ் உச்சரிப்பில் பேசப்படும்போது தான் கணிணி பயன்பாட்டுக்கு ஒத்துவருவதாக கணிணியியல் விஞ்ஞானிகளே குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலேயர் பேசும் ஆங்கிலத்தை கணிணி புரிந்துகொள்வதில்லை. ஆனால் தமிழர்பேசும் ஆங்கிலத்தை கணிணி வெகுவிரைவாக புரிந்துகொள்வது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதற்கு காரணம் வலவலா கொள கொளா என இல்லாமல் தமிழில் இருக்கும் தனித்தனி எழுத்து உச்சரிப்பு நடை தான்.

உதாரணமாக:  flower., flour  என்ற சொற்களை ஆங்கிலேயர்கள் பிளார் என்று சொல்வார்கள். தமிழரோ தமிழில் எழுத்துகூட்டி படிப்பதை போலவே பி ள வ ர் என்றும் பி ளா ர் என்றும் உச்சரிப்பார்கள். இங்கு கணிணி ஆங்கிலேயர் உச்சரிப்பில் குழப்பமடைகிறது. தமிழ் உச்சரிப்பில் எழுத்துக்களையும் சொல்லையும் சரியாக புரிந்து கொள்கிறது.

இப்படிப்பட்ட சிறப்பு பெற்ற தமிழில் எழுத்துக்கள், உச்சரிப்புகள் போதாது என கூறிக்கொண்டு இல்லாத பிற எழுத்துக்களை சேர்த்து தமிழின் எளிமையையும் இனிமையையும் கெடுத்துவிடாதீர்கள்.

பிரபல தமிழ் வார இதழ்களில் வாசகர் கேள்வி பதில் சொல்லும் சில எழுத்தாளர்கள் எதற்கெடுத்தாலும் இந்த தமிழ் சொல்லினுடைய வேர் சமசுகிருதத்துடையது. இந்த தமிழ் சொல் சமசுகிருதத்தில் இருந்து வந்தது. என தூய தமிழ்சொற்களை கூட சமசுகிருத சொறகளாக குறிப்பிடுகிறார்கள். அதே போல தான் தமிழில் இருந்து வடமொழி எழுத்துக்களை நீக்கக்கூடாது என துள்ளுகிறார்கள்.

இவர்களது துள்ளலை பார்க்கும் போது தான் சமசுகிருத மொழியையே வெறுத்து தனித்தமிழ் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.

தெரியாமல் கேட்கிறேன். தமிழில் இருந்து வடமொழி சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கவேண்டும் என்றால் சமசுகிருதவாதிகளுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது? நாங்கள் என்ன சமசுகிருதத்தில் தமிழ் எழுத்துக்களை சேர்க்கவா சொல்கிறோம்? உங்கள் மொழியை காப்பாற்ற தமிழனின் முதுகுதான் கிடைத்ததா? ஏன் தனியாக நடக்க திறன் இல்லாத முடத்தன மொழியா சமசுகிருதம்?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியும், கரையான் அரித்துக்கொண்டிருந்த தமிழ் ஓலைசுவடிகளை எல்லாம் மீட்டு தந்த வ.வே.சு ஐயரும்., சமசுகிருதத்தின் கடுமையை நேரடியாக விமர்சித்த விவேகானந்தரும் சமசுகிருதம் தெரியாதவர்கள் அல்ல என்பது ஏன் துக்கடா எழுத்தாளர்களுக்கு புரிவதில்லை.

பலநூற்றாண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் தனித்தமிழுக்கு மிகச்சரியான இலக்கணத்தை வகுத்துத்தந்திருக்கிறார். ஆனாலும் இன்றுவரையும் வடமொழி எழுத்துக்களை தமிழோடு இழுத்துவரும் தமிழர்களின் ஏமாளி தனத்தை என்னவென்று சொல்வது.

வடமொழி எழுத்துக்கள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என பயன்படுத்திவந்த நான் கூட, சமசுகிருதபிடிவாதிகளின கருத்துக்களை படித்த பின்புதான் தனிந்தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கே வந்திருக்கிறேன்.

போலி சமசுகிருதவாதிகளே சமசுகிருதத்தை வளர்ப்பதாக எண்ணி இன்னும் அதை குழிதோண்டி புதைக்காதீர்கள். ஒரு மொழி அழிவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தனித்தமிழுக்காக எடுக்கும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சிக்கும் இனி நானும் துணைநிற்பேன்.

22 comments:

Anonymous said...

//தெரியாமல் கேட்கிறேன். தமிழில் இருந்து வடமொழி சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கவேண்டும் என்றால் சமசுகிருதவாதிகளுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது? நாங்கள் என்ன சமசுகிருதத்தில் தமிழ் எழுத்துக்களை சேர்க்கவா சொல்கிறோம்?//

எல்லோரும் யோசிக்க வேண்டிய கேள்விகள்

// உங்கள் மொழியை காப்பாற்ற தமிழனின் முதுகுதான் கிடைத்ததா? ஏன் தனியாக நடக்க திறன் இல்லாத முடத்தன மொழியா சமசுகிருதம்?//

நறுக் நறுக் :) :)

சுரேஷ் ஜீவானந்தம் said...

நன்றி. சிறப்பான கட்டுரை.

கோவி.கண்ணன் said...

//வடமொழி எழுத்துக்கள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என பயன்படுத்திவந்த நான் கூட, சமசுகிருதபிடிவாதிகளின கருத்துக்களை படித்த பின்புதான் தனிந்தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கே வந்திருக்கிறேன்.//

அதே தான், எனது எழுத்துக்கள் தனித்தமிழ் ஆனதற்கும் இதே காரணம் தான்.

:)

நடப்பில் இல்லாத வடமொழிக்கு அவ்வளவு வக்காலத்து வாங்கும் போது வாழும் மொழியான நம் மொழி அதைவிட பெருமையுடையது தானே !

முழுக்கட்டுரையும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

பழமைபேசி said...

அருமை! அருமை!!

உங்க அறிவியல் பத்தின பதிவின் தாக்கம், இப்ப நம்ப பக்கத்துல....

உங்க அறிவியல் பத்தின பதிவின் தாக்கம்

Anonymous said...

நன்றி.

சிக்கிமுக்கி said...

காலந்தாழ்ந்து எழுதினாலும் கருத்தோடு எழுதியிருக்கிறீர்கள்.

// தமிழ் ஓலைசுவடிகளை எல்லாம் மீட்டு தந்த வ.வே.சு ஐயரும்//

அவர் உ.வே. சாமிநாதர்.

Anonymous said...

Very Excellent Post !
Congrats !
Keep it up!

(sorry for the english comment. I don't have tamil typing in my pc)

- Raam

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அசத்தலான பதிவு.

அதித்தமிழ் பக்கம் பார்த்தேன்.

மொழி வரலாறோ,வாசிப்போ அற்ற ஒரு பிதற்றல் எனக் கொள்ள வேண்டியதுதான்...வேறென்ன சொல்ல?

இந்த முயற்சியைத்தான் மணிப்பிரவாள மாமணிகள் செய்தார்கள்.

கால வெள்ளத்தில் நிற்க முடியாமல் வீழ்ந்தார்கள்...

தமிழே உலகின் முழுவளர்ச்சயடைந்த முதல் மொழியாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கான மறுக்க இயலாத சான்றுகள் உள்ளன;நேரமிருக்கும் போது பதிகிறேன் !

Anonymous said...

//கனேசன் என்ற சொல்லை குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பிலும், வெயில் காலத்தில் ஒரு உச்சரிப்பிலும் சொல்வோம்.
//

really? i never heard this anywhere and i do not say this way.

குடுகுடுப்பை said...

ஆங்கிலத்தில் "ழ்" ஒலியை கொண்டு வர அவர் எண்ண செய்வாராம்.

Unknown said...

சிறப்பான பதிவு.
செங்கிருதத்தை ஏன் தமிழின் முதுகில் ஏற்றுகிறீர்கள்? அதை வளர்க்க தனி ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்பது தெளிவான விளக்கம்.

அறிவகம் said...

திரு. சிக்கிமுக்கி...

//அவர் உ.வே. சாமிநாதர்.//

சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. கவனக்குறைவாக இருந்துவிட்டேன். தவறுதலுக்கு மன்னிக்கவும்.

Anonymous said...

நறுக் நறுக் :) :)

Anonymous said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள். இதே கேள்வியைத்தான் நானும் கேட்டேன், அதற்கு சங்கத எழுத்து இல்லை என்றால் சுவையான உணவில் கல் இருப்பதை போல் இருக்கிறது அந்த வார்த்தைகளை சங்கத எழுத்து இல்லாமல் படிக்கும் போது என்று குறிப்பிட்டனர்.

தமிழை ஆங்கிலத்தில் டமில் என்று எழுதி தமிழ் என்று தான் தமிழர்கள் அனைவரும் உச்சரிப்பர். டேமில் என்றோ அல்லது டமிலு என்றோ அல்ல. அது போல் தான் சங்கத வார்த்தைகளும் தமிழில், எழுதுவது தமிழில் தமிழ் முறைப்படிதான் எழுதுவோம் உச்சரிக்கும் போது செயலலிதாவை நீங்கள் சொல்ல நினைத்தது போல் சொல்லிக்கொள்ள வேண்டியது தானே.

எல்லா சூழலுக்கும் வளைந்து கொடுக்கும் ஆங்கிலம் கூட இன்னமும் ஒரு எழுத்தை கூட அதிகரிக்கவில்லை, மாறாக உச்சரிப்புக்கு என்று குறிப்புகளை மட்டுமே கொள்ள முற்பட்டுளதை இங்கே கவனிப்போம்.

மற்ற படி சங்கதத்தில் இருந்து தான் தமிழ் என்ற பழை வாதங்களை நாளுக்கு நாள் தோலுரித்து காட்டிக்கொண்டு இருக்கிறார் இராமகி ஐயா வலையில். அங்கு சென்று தமிழ் கற்றுக்கொள்ள் சொல்லுங்கள் அந்த தமிழ் தெரியா மாணாக்கனை.

பனிமலர்.

Anonymous said...

அவரது பதிவை படித்தேன், சரியான மன நோயாளியின் பதிபோல் இருக்கிறது. பாவம் தமிழ் வருக்கு தாய் மொழி இல்லை என்று நினைகிறார், மேலும் ஆங்கிலதில் உரையாடினால் பீட்டர் என்று சொல்வார்கள் திருப்பியும் யாரும் பேசமாட்டார்கள். அது தான் இப்படி முயற்சிக்குறார் போலும்.

சங்கத்திற்கு என்று தனி எழுத்து இல்லை எங்கே என்ன மொழியின் எழுத்துகள் கிடைகிறதோ அந்த மொழியின் எழுத்துகளை கொண்டு எழுதும் பழக்கம். அது தமிழில் எல்லையே என்ற ஆதங்கம் போலும். இந்த கேவல பிழைப்புக்கு பதில், சங்கத்திற்கு என்று எழுத்துகளை உருவாக்கினால் நோபல் பரிசேக்கூட கிடைத்தாலும் கிடைக்கலாம்.

அதைவிடுத்து இப்படி மன நோயாளியாக புலம்புவதில் பொருள் இல்லை........

பனிமலர்.

நல்லதந்தி said...

//வடமொழியோடு ஒன்றிப்போவதை நாகரீகமாக நினைத்த சமுதாய போக்கால் தான், இன்று மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற திராவிட மொழிகளில் வடமொழி ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழிடம் வடமொழி ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை.//
முன்பு வடமொழி தமிழில் ஆதிக்கம் செலுத்தியதால்தான் மலையாளம்,தெலுங்கு,கன்னடமாகத் தமிழ் திரிந்தது என்பதை நினைவில் கொள்க!

அருள் said...

கண்டிப்பாக நாமும் துணை நிற்ப்போம்.......

Anonymous said...

//சிறப்பான பதிவு.
செங்கிருதத்தை ஏன் தமிழின் முதுகில் ஏற்றுகிறீர்கள்? அதை வளர்க்க தனி ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்பது தெளிவான விளக்கம்.//

ஆமா நாம அராபியத்தை மட்டும்தான் தமிழ் முதுகிலெ ஏத்துனோம் ஏத்துவோம். வேறே எவனும் எதையும் ஏத்தக்கூடாது.
புரியுதா.. இல்லாட்டி மாமு உனக்கு பாம் தாண்டி.

Anonymous said...

'எதிர்காலத்தில் தட்டச்சுக்கு மாற்றாக பேசுவதை புரிந்துகொள்ளும் அதிவேக கணிணி பயன்பாட்டுக்கு எம்மொழி சிறந்தது என்ற ஆய்வில் தமிழுக்கே முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் தமிழில் ஒருசார் உச்சரிப்புகளுக்கு ஒரு எழுத்து என்ற எளிமை தான்.

தமிழில் மிக எளிமையான தெளிவான எழுத்துநடை, உச்சரிப்பு நடை இருக்கிறது. ஆங்கிலம் கூட தமிழ் உச்சரிப்பில் பேசப்படும்போது தான் கணிணி பயன்பாட்டுக்கு ஒத்துவருவதாக கணிணியியல் விஞ்ஞானிகளே குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலேயர் பேசும் ஆங்கிலத்தை கணிணி புரிந்துகொள்வதில்லை. ஆனால் தமிழர்பேசும் ஆங்கிலத்தை கணிணி வெகுவிரைவாக புரிந்துகொள்வது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதற்கு காரணம் வலவலா கொள கொளா என இல்லாமல் தமிழில் இருக்கும் தனித்தனி எழுத்து உச்சரிப்பு நடை தான்.'

இதற்கான சான்றுகளை தரமுடியுமா?
யார் செய்த ஆய்வுகள் இவை, எங்கு
வெளியாயின? எத்தனை மொழிகளை
ஆய்ந்து இந்த முடிவிற்கு வந்தார்கள்?

Anonymous said...

//ஆமா நாம அராபியத்தை மட்டும்தான் தமிழ் முதுகிலெ ஏத்துனோம் ஏத்துவோம். வேறே எவனும் எதையும் ஏத்தக்கூடாது.
புரியுதா.. இல்லாட்டி மாமு உனக்கு பாம் தாண்டி.//

அடே அபிஸ்டு. அவாள் அரபி மொழியச் சேர்த்துண்டு படிச்சாதான் நன்னா விளங்கும்னு சொன்னாளோ. சேத்தி எழுதினாதான் நன்னா புரியும்னாளோ. அம்பி மண்டு மாதிரி உளற்றேடா.அபிஸ்டு.

அவா ஆண்டப்போ அவா செஞ்ச சீர்திருத்தத்துக்கெல்லாம் அரபிலே பேரு வச்சுண்டா. அது இன்னும் வாழறது. அத மாத்தினாலும் தனித்தமிழில் கொன்னாந்தலும் அவா கோச்சுக்கறதிலலேடா மண்டூ.

Anonymous said...

12ஆம் நூற்றாண்டு ஜெயின கன்னட கவிஞர் நயசேனா பாடியதை பாருங்கள்.

If anyone wants to write in Sanskrit
let them,
but is it right
if they bring Sanskrit into Kannada?
Is it right to mix ghee with oil?
மேலும் அவரைப் பற்றி:
thirdeyemoment.blogspot.com/2006/07/sanskrit-kannada-and-poet-nayasena.html

- ஜெ.பி.இரவிச்சந்திரன், பெங்களூர்

  © Blogger template Newspaper II by Ourblogtemplates.com 2008

Back to TOP