செய்தியாளர்களை குறைசொல்லும் வலைப்பதிவர்களே நீங்கள் யார்?
Friday, November 21, 2008
சமீபத்தில் நடந்த சட்ட க்ல்லூரி சம்பவத்தை குறிப்பிட்டு பல வலைப்பதிவர்கள் செய்தியாளர்களை கடுமையாக விமர்சித்து குற்றம் சுமர்த்தி எழுதியுள்ளனர்.
செய்தியாளர்கள் என்றால் யார் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒரு செய்தியை பலபேரிடம் சேர்ப்பவர் தான் செய்தியாளர். அதனால் தானே மீடியா என ஆங்கிலத்திலும் ஊடகம் என தமிழிலும் சொல்கிறோம். சரி வலைபதிவர்கள் என்பவர் யார்? இவர்களும் ஒரு ஊடகம் தானே. செய்தி தாள், வானொலி, தொலைகாட்சி, இணையம் என, இணையத்தில் செயல்படும் செய்தியாளர்கள் தான் வலைப்பதிவர்கள். எனவே செய்தியாளர்கள் வேறு, வலைபதிவர்கள் வேறு என்று யாரும் செய்தியாளர்களை மட்டும் குறைபட்டுக்கொள்ள வேண்டாம்.
சரி விடயத்துக்கு போவோம்.
சட்டக்கல்லூரி சம்பவத்தில் போலீசாரோடு செய்தியாளர்களும் கலவரத்தை தடுக்க தவறிவிட்டனர் என்று திரு பழமைபேசி வலைபதிவரும், பணத்துக்காகவும் சாதிய ஆதிக்கத்திற்காவும் திரும்ப திரும்ப ஒளிபரப்பி தொடர்கலவரத்துக்கு வித்திடுகிறார்கள் என வினவு, மதிமாறன் உட்பட பதிவர்களும் குற்றம் சுமத்தி எழுதியுள்ளனர்.
ரளாவில் மதம் பிடித்த யானை ஒன்று பாகனை அரை மணி நேரத்துக்கும் மேலாக தூக்கி பந்தாடி கொன்ற கொடூர காட்சியை சென்ற ஆண்டு தொலைகாட்சிகளில் பலர் பார்த்திருக்க கூடும். இந்த காட்சியை ஓடி ஓடி உயிரையும் பணையம் வைத்து ஒளிப்பதிவு செய்தார்கள் செய்தியாளர்கள். இது திரும்ப திரும்ப தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த விடயத்தில் செய்தியாளர்கள் எப்படி குற்றம் சொல்ல முடியும்?
இனி சட்டகல்லூரி விடயத்துக்கு வருவோம். சட்டகல்லூரி சம்பவத்தை செய்தியாளர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் இன்று இந்த அளவுக்கு வலைபதிவில் விவாதித்திருப்பீர்களா? சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல் 3 மாணவர்கள் படுகாயம் என்று மட்டும் தான் உலகுக்கு தெரிந்து இருக்கும். இது வழக்கமான ஒன்று தானே என்று தான் உலக மக்கள் அனைவரும் அடுத்த வேலையை பார்த்திருப்பார்கள். ஆனால் செய்தி படம்பிடிக்கப்பட்டு காட்டப்பட்டதால் தான் மாணவர்கள் கலவரம் என்றால் எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என மக்கள் நேரடியாக புரிந்து கொண்டார்கள்.
உண்மையில் வழக்கம் போல அடித்து கொள்வார்கள் என்று தான் காவலர்களும், கல்லூரி நிர்வாகமும் பொருப்பை தட்டி கழித்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் அதை தான் நிரூபித்தும் இருப்பார்கள். ஆனால் இன்று கல்லூரி மோதல்களுக்கு தீர்வு காணவேண்டியா கட்டாயத்துக்கு உலகம் வந்திருக்கிறது என்றால் அது செய்தியாளர்கலால் தானே.
ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அங்கு செய்தியாளர்களை தவிர வேறு யாரும் இல்லை என்ற சூழலில் செய்தியாளர்கள் கேமராவை கீழே போட்டுவிட்டு அசம்பாவிதத்தை நிச்சயம் தடுப்பார்கள். ஆனால் சட்டகல்லூரி சம்பவ இடத்தில் கலவரத்தை தடுக்க காவல்துறையினர், பொதுமக்கள், கல்லூரி நிர்வாகம் என அத்தனை பேரும் இருக்கிறார்கள். அந்த இடத்தில் செய்தியாளர்கள் கேமராவை கீழே போட்டுவிட்டு கலவரத்தை தடுக்க வேண்டும் என கூறுவது எவ்விதத்தில் நியாயம்?
அடுத்து அந்த இடத்தில் காவல்துறையினர் இல்லை என்றால் நிச்சயமாக பொது மக்களே கலவரத்தை தட்டிக்கேட்டிருப்பார்கள். ஆனால் அத்தனை காவலர்கள் நின்று வேடிக்கை பார்க்கும் போது பொதுமக்கள் என்ன செய்யமுடியும்? காவல்களை ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள் என தட்டி கேட்க முடியும். அதை செய்தியாளர்களும் பொதுமக்களும் சரியா செய்தார்கள். தட்டி கேட்டார்கள். ஒரு பெண் நிருபர் காவல் ஆணையரின் நெஞ்சில் தட்டி கேள்வி கேட்டது உங்கள் கண்ணில் படவில்லையா?
கலவரமாகட்டும், பூகம்பமாட்டும், சுனாமியாகட்டும், மதம்பிடித்த யானையின் அட்டகாசமாகட்டும். செய்தியாளர்கள் உயிரை பணையம் வைத்து ஓடி ஓடி செய்தி சேகரிப்பார்கள். செய்தியை வெளிக்கொணர்வது தான் செய்தியாளரின் பணியே தவிர. செய்தி சேகரிக்காமல் இருப்பது அல்ல. ஒரு அசம்பாவிதத்தை தடுக்க ஆயிரம் பேர் முயலும் போது, அது எப்படி நடக்கிறது என படம்பிடித்து காட்ட உங்களுக்கு ஒரு செய்தியாளர் வேண்டாமா?
அடுத்து சட்டகல்லூரி கலவரம் திரும்ப திரும்ப காட்டப்படுவதால் தொடர் கலவரத்துக்கு தூண்டுகிறார்கள் என்ற குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
செய்திக்கும் செய்தி விமர்சனத்துக்கும் உள்ள வித்தியாசத்தை வலைபதிவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
செய்தியை ஒளிபரப்புவதால் கலவரம் வரும் என்று சொல்வது தவறு. எந்த செய்தியானாலும் அது மக்களை சென்றடைய வேண்டும். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தானே செய்தி ஊடகங்கள்.
அடுத்து செய்தி விமர்சனம். இதை ஒவ்வொரு செய்திநிறுவனமும் ஒவ்வொரு கோணத்தில் சொல்லும். இதில் தான் தங்களுக்கான பாரபட்சத்தை காட்டுகின்றன. இது மக்களின் பார்வைக்கு கண்கூடாகவே தெரியும். ஜெயா, கலைஞர், சன், மக்கள் தொலைகாட்சிகளில் எப்படி செய்திகள் வரும் என மக்களுக்கு நன்றாகவே தெரியும். இது கலவரத்தை தூண்டும் என்பது தவறான வாதம். கலவரத்தை தூண்டுபவர்கள் என ஊருக்குள் சில தென்டச்சோறுகள் இருக்கிறது. அவர்கள் தான் இந்த செய்திவிமர்சனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள். அதனால் தான் கலவரங்களும் வருகின்றன.
சரி இனி வலைபதிவர்களுக்கான சுயபரிசோதனைக்கு வருவோம்.
நாம் செய்வது என்ன? செய்தியை எழுதுகிறோமா? செய்தி விமர்சனத்தை எழுதுகிறோமா? ஊடகங்களில் செய்தியை அறிகிறோம். அதை விமர்சிக்கிறோம். தவறில்லை. ஆனால் எப்படி விமர்சிக்கிறோம் என்பதை கவனித்துப்பாருங்கள். கலவரத்துக்கு வித்திடுபவர்கள் பட்டியலில் முதலில் வருபவர்கள் யார்? என்பது புரியவரும்.
செய்தி ஒளிபரப்பால் 3 மாணவர்களை 30 மாணவர்கள் மிருகத்தனமாக அடிக்கிறார்கள் என்ற பதட்டம் தான் மக்கள் மத்தியில் வந்திருக்குமே தவிர, அடிப்பவர்கள் இந்த சாதி, அடிவாங்குபவர் இந்த சாதி என்ற எண்ணம் மக்களுக்கு வந்திருக்காது. ஆனால் அடிப்பவர் இந்த சாதி, அடிபடுபவர் இந்த சாதி என குறிப்பிட்டு செய்திவிமர்சனம் செய்பவர்கள் தான் உண்மையில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பவர்கள். இதை செய்தது யார்? பிரபல செய்தி நிறுவனங்களா? சில வலைபதிவர்களா?
உலகில் உள்ள எல்லா பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களும் இரு பிரிவினர் என்று தான் செய்தியை விமர்சித்ததே தவிர, இரு சாதியினருக்கு இடையே என செய்தியை விமர்சிக்கவில்லையே. ஆனால் வலைபதிவில் செய்தியாளர்களை குற்றம் சொன்ன அனைத்து பதிவர்களும் உயர் சாதி தலித் சாதி என பிரித்தல்லவா விமர்சித்துள்ளீர்கள். இது தானே கலவரத்துக்கு வித்திடும்.
வலைபதிவு அன்பர்களே மதுரையில் இரு சாதியினருக்கு இடையே சுவர் பிரட்சனையில் கலவரம் நடக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனால் சத்தியமாக அது எந்தெந்த சாதியினருக்கு இடையில் நடக்கிறது என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. அதே போல தான் சட்டக்கல்லூரி கலவரத்தில் அடித்ததும் அடிபட்டதும் எந்த சாதியினர் என்பதை வலைபதிவில் தான் பொருப்பில்லாமல் விமர்சிக்கிறீர்களே தவிர பிரபல செய்தி ஊடகங்கள் பொருப்பாகவே நடந்துள்ளன. தயவு செய்து சாதிய சிந்தனையை விட்டுவிட்டு மனிதாபிமான சிந்தனைக்கு வாருங்கள்.
சாதிய இடஓதுக்கீட்டை ஒழியுங்கள். சாதி சான்றிதழை ஒழியுங்கள். சாதி அமைப்புகளை ஒழியுங்கள். சாதியை ஓழியுங்கள். செய்தியை குறைபடுவதை விட செய்திவிமர்சனத்தில் விழிப்புடன் பொருப்புடன் இருங்கள்.
சாதி ஓதுக்கீடு ஒழிப்பு குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்.